வாசகர் கடிதம்

0

மத்தியில் மதவாத பி.ஜே.பி. கட்சி, மோடி தலைமையில் ஆட்சியை பிடித்தது முதல் இன்று வரை வன்முறைகளுக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை. அந்த அளவு நாட்டை சீரழித்து வருகின்றனர். தற்போது சிறுகச் சிறுக நாட்டின் கட்டமைப்பையே உருக்குலைத்து வருகின்றனர். மத்திய தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுப்பதிலும், ரிசர்வ் வங்கி கவர்னரை தேர்தெடுப்பதிலும், இராணுவ தளபதியை தேர்ந்தெடுப்பதிலும், என்.ஐ.ஏ. இயக்குநரை தேர்ந்தெடுப்பதிலும் உச்ச பட்சமாக நீதிபதிகளை தேர்ந்தெடுப்பதிலும் தன் அரசுக்கு ஒத்துழைக்கும் நபர்களுக்கே முன்னுரிமை கொடுக்கின்றனர். அரசு இயந்திரங்களின் மோசமான நிர்வாகத்தால் நீதித்துறை கண்மூடி அயர்ந்து தூங்குகிறது. 2002ல் நரோடா பாட்டியா கூட்டுப் படுகொலையை தலைமையேற்று நடத்திய மாயாபென் கோட்னானி விடுதலை, நீதிபதி லோயா மர்ம மரணம் குறித்து விசாரணை கோரிய வழக்கு தள்ளுபடி, மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பில் ஈடுபட்ட சாமியார்கள் விடுதலை என இந்துத்துவ தீவிரவாதிகள் விடுதலை நாட்டிற்கு கேடு. தீவிரவாதிகளை விடுதலை செய்யவா மத்திய அரசை மக்கள் தேர்ந்தெடுத்தனர்?

நீதியரசர் ராஜேந்திர சச்சார் எவ்வளவோ வழக்குகளை விசாரித்து தீர்ப்பு தந்து இருந்தாலும் முஸ்லிம்கள் நலன்கள் மீது அக்கறை கொண்டு அவர் தயாரித்து மத்திய அரசுக்கு வழங்கிய சச்சார் அறிக்கை இஸ்லாமியர்கள் நெஞ்சில் நீக்கமற நிறைந்து இருக்கிறது. பேரா. அ. மார்க்ஸ் அவர்களின் கட்டுரையை படிக்கப் படிக்க நீதிபதி சச்சார் மீது மேலும் மேலும் மதிப்பு கூடுகிறது. அவரின் உடல் மறைந்தாலும் இஸ்லாமியர்களுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பால் அவரின் புகழ் நீடித்து நிலைக்கும்.

தலைமை நீதிபதி மீதே சக நீதிபதிகள் குற்றம் சாட்டும் போது, எதிர் கட்சிகளும், மக்களும் தலைமை நீதிபதியை கேள்வி கேட்பதில் தவறில்லை. சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நடந்து கொள்ளும் தலைமை நீதிபதி தன்னை திருத்திக் கொள்ள வேண்டும் அல்லது ராஜினாமா செய்து விட வேண்டும். மோடி ஆட்சிக்கு காவடி தூக்கும் தீபக் மிஸ்ரா இந்திய நாட்டிற்கு இழுக்கு ஏற்படுத்தும் முன் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

எஸ்.கே.வாலி, த.முருங்கப்பட்டி,
திருச்சி

நீதித்துறையை காவித்துறையாக மாற்றிவரும் மத்திய அரசின் செயல்பாடு வன்மையாக கண்டிக்கத் தக்கது. நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பகத் தன்மைக்கு களங்கம் ஏற்படுத்தி வருகிறது மத்திய அரசு. நாட்டு மக்களின் கடைசி நம்பிக்கையாகத் திகழும் அத்துறை மீது மோடி அரசின் தலையீடு ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கி உள்ளது. சட்டத்தை தங்களுக்கு சாதகமாக மாற்றி நீதித்துறையை அவமானப்படுத்தி வரும் மோடி தலைமையிலான பாஜக அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன.

எம்.முஹம்மது கடாஃபி,
கொடிக்கால்பாளையம்

இஷ்ரத் ஜஹான் போலி என்கௌண்டர் வழக்கில் அவருடன் சேர்த்து கொல்லப்பட்ட பிரனேஷ்யின் தந்தை கோபிநாத் பிள்ளையின் விபத்திலும் மர்மம் இருப்பதாகத் தெரிகிறது. மக்களை ஏமாற்றிவிடலாம், அரசு இயந்திரங்களை ஏமாற்றிவிடலாம், நீதித்துறையும் ஏமாற்றி விடலாம். ஆனால் வல்ல இறைவனை ஏமாற்றிவிட முடியாது என்பதை ஆளும் அதிகார வர்க்கம் உணர வேண்டும். சூழ்ச்சியாளர்களுக்குக்கெல்லாம் பெரிய சூழ்ச்சியாளன் வல்ல இறைவன்தான் என்ற உண்மையை உணர்ந்திருந்தால் எந்த ஆளும் அதிகாரவர்க்கமும் இறைவனுக்கு பயந்து கொள்ளும். ஆனால் நமது நாட்டின் இன்றைய ஆளும் அதிகார வர்க்கம் எதற்கும் பயப்படாத நிலையில் செயல்படுவது தெளிவாகத் தெரிகிறது. அநியாயக்காரர்கள் அக்கிரமக்காரர்கள் எவ்வளவு பெரிய பலத்துடன் இருந்தாலும் நிலைத்ததில்லை என்பதை வரலாறு காட்டினாலும் அதுவெல்லாம் அவர்களுக்குப் பால பாடமாகவும், படிப்பினையாகவும் இல்லை என்பதைத்தான் நாட்டின் நடப்புகள் காட்டுக்கின்றன. மோடி அவர்கள் குஜராத்தில் ஆட்சியில் இருந்தபோதுதான் அதிகமான என்கொண்டர்கள் நிகழ்ந்துள்ளன என்பதே புள்ளிவிவரம் வெளியிடும் தகவல்.

எம்.ஏ. ஹாஜி முஹம்மது,
நிரவி.

முஸ்லிம்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த தனது அறிக்கை மூலம் பரிந்துரை செய்த நீதிபதி சச்சார் மறைந்தாலும் முஸ்லிம்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுவிட்டார். ஒரு பொதுநல அறிவுஜீவியாக அன்றைய காங்கிரஸ் அரசின் திட்டத்தையும் இன்றைய பாசிச பாஜக அரசின் அவசரச் சட்டத்தையும் வலிமையோடு எதிர்த்தார். சச்சாரின் பரிந்துரைகளை செயல்படுத்துவதுதான் அரசு அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

ஜித்தா ரியாஜ்,
புத்தாநத்தம்

Comments are closed.