வாட்ஸப்பிற்கு போட்டியாக எஸ்.எம்.எஸ் ஐ களமிறக்க இருக்கும் கூகிள்

0

சமூக வலைதளங்கள் தங்களை மாறிவரும் பயனாளர்களின் விருப்பத்திற்கேற்ப மாற்றாவிட்டால் பயனாளர்களால் புறந்தள்ளப்படும். அந்த வகையில் மக்கள் மனதில் இருந்து மறைந்து போனவை தான் myspace, orkut போன்ற சமூக வலைதளங்கள். ஒரு காலத்தில் தமக்கென பெரும் வரவேற்ப்பை பெற்றிருந்த இந்த தளங்கள் முடங்கிபோனதற்கு காரணம் அந்த தளங்களில் புதுமை ஏதும் இல்லாததே. அந்தவகையில் தான் ஃபேஸ்புக் நிறுவனம் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற சேவைகளை வாங்கியதும், மைக்ரோசாப்ட் ஸ்கைப் சேவையை வாங்கியதும்.

10 பில்லியன் டாலருக்கு கூகிள் விலை பேசிய வாட்ஸ்அப் சேவையை ஃபேஸ்புக் 19 பில்லியன் டாலருக்கு வாங்கியது. தற்பொழுது ஒரு பில்லியன் பயனாளர்களை எட்டியிருக்கும் வாட்ஸ்அப் சேவை குறுஞ்செய்தி தளத்தில் முடி சூடா மன்னனாக திகழ்கிறது. இப்படி ஒரு வாய்ப்பை தவற விட்டதற்கு மிகவும் வருந்திய கூகிள் தற்பொழுது தன் நிலையை ஃபேஸ்புக்கோடு சமன் செய்ய புதிய யுக்தியை தயார் செய்து வருகிறது. அது அழிந்து போன எஸ்.எம்.எஸ் சேவைக்கு உயிர் கொடுப்பது.

Airtel, Vodafone, Telstra, Sprint போன்ற பிரபல தொலைதொடர்பு நிறுவனங்களுடன் கைகோர்த்து RCS எனப்படும் Rich Communication Services சேவை மூலம் வாட்ஸ்அப்பிற்கு மாற்றாக எஸ்.எம்.எஸ் ஐ மீண்டும் உயிர்கொடுக்க உள்ளனர். வாட்ஸ்அப் அறிமுகமான காலத்தில் இருந்தே எஸ்.எம்.எஸ் மூலம் கிடைத்து வந்த வருமானம் இல்லாமல் போனது பற்றி புலம்பி வந்த தொலைதொடர்பு நிறுவனங்கள் கூகிளின் இந்த திட்டத்தினால் ஆனந்தம் அடைந்துள்ளனர். இதன் மூலம் RCS சேவை பயன்படுத்தும் இன்டர்நெட் மூலம் தங்களின் வருமானத்தை மீட்டெடுக்க முடிவெடுத்துள்ளன.
இந்த RCS மூலம் வீடியோ அழைப்புகள், செய்திகள், படங்கள், மற்றும் இருப்பிடத்தை பகிர்ந்து கொள்ளும் வசதி ஆகியவற்றை அறிமுகப்படுத்த உள்ளது கூகிள். இவை அனைத்தும் சாதரணமாக நாம் பயன்படுத்தும் எஸ்.எம்.எஸ் செயலியை சற்று மெருகேற்றி அதன் மூலம் செய்ய இருக்கிறது கூகிள்.

ஸ்மார்ட்போன் தளத்தில் தனக்கென பெரும்பங்கை ஆண்டுராய்டு இயங்குதளம் மூலம் தன்வசம் வைத்திருக்கும் கூகிள், இந்த RCS சேவையை செயல்படுத்தினால் ஏறத்தாள 4 பில்லியன் பயனாளர்களை இந்த சேவையில் இணைத்துவிடும் என நம்பப்படுகிறது. இதன் மூலம் ICU வில் இருக்கும் எஸ்.எம்.எஸ். சேவை மீண்டும் உயிர்பிக்கப்படலாம்.

ஆப்பிள் நிறுவனம் தனக்கென iMessage சேவையை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.