வாரணாசி: பள்ளிவாசல் இடத்தை சட்டவிரோதமாக கைப்பற்றிய பாஜக எம்எல்ஏ: மோதலில் பத்து பேர் காயம்

0

நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசியில் உள்ள சிக்ரா பகுதியில், ஞாயிறு இரவு பள்ளிவாசல் நிலத்தை பாஜக எம்எல்ஏ அபகரித்ததால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

வாரனாசியின் பிந்த்ரா தொகுதியில் வெற்றிபெற்ற பாஜக எம்எல்ஏ அவதேஷ் சிங் என்பவர் பள்ளிவாசல் ஒன்றிற்கு சொந்தமான இடத்தை அபகரித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஞாயிறு மாலை அவதேஷ் சிங்கின் ஆதரவாளர்கள் கட்டிட பணியாட்களுடன் அவர்கள் ஆக்கிரமித்த பகுதிக்கு வந்து அங்கு சுற்றுச் சுவர் எழுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் அப்பகுதிக்கு விரைந்த முஸ்லிம் இளைஞர்கள் இந்த சுற்றுச்சுவர் கட்டுமானப் பணிகளை எதிர்த்துள்ளனர். இது தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் காவல்நிலையம் வரை நீண்டுள்ளது.

காவல்நிலையத்தின் முன்பு பாஜக எம்எல்ஏ-வின் இந்த சட்டவிரோத கட்டுமானப்பணியை காவல்துறை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறி கோஷங்கள் எழுப்பி முஸ்லிம்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். அப்போது சில மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இது இரு தரப்பினரிடையே கல்வீச்சு சம்பவமாக மாற காவல்துறை தடியடி நடத்தியும், கண்ணீர் புகை வீசியும், பெப்பர் குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைத்துள்ளனர். மேலும் அப்பகுதியில் அமைதியை காக்க கூடுதல் படைகளை காவல்துறை விண்ணப்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த பகுதியில் ஏற்பட்ட பதற்றம் குறைந்த பட்சம் ஒரு மணி நேரமாவது நீடித்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் போராட்டக்காரர்கள்  வேறு பகுதியை நோக்கி திசை திருப்பப் பட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. இன்னும் பள்ளிவாசலுக்கு சொந்தாமான அந்த இடத்தை குறிப்பிட்ட பாஜக எம்.எல்.ஏ கடந்த சில வருடங்களாக தன் வசம் வைத்திருந்ததாகவும் அங்கு அவர் தனது பசுக்களை கட்டி வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் ஞாயிறு மாலை அந்த நிலத்தை அபகரிக்கும் நோக்கத்துடன் சுற்றுச்சுவர் கட்டியது தான் தற்போதைய இந்த பிரச்னைக்கு வழிவகுத்துள்ளது என்று கூறப்படுகிறது. ஆனால் காவல்துறையினரோ இந்த பிரச்சனையில் அவதேஷ் சிங்கின் பெயரை சேர்க்க தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. தற்போதைய இந்த பதற்றத்திற்கு நடுவில் சிலர் சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்பி வருவதாகவும் அந்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Comments are closed.