வாழ்க்கை தற்காலிகமானது

0

வாழ்க்கை தற்காலிகமானது

“மேலும், இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணத்தை, அவர்களுக்கு (நபியே!) நீர் கூறுவீராக! ‘‘அது நாம் வானத்திலிருந்து இறக்கி வைத்த நீரைப் போலிருக்கிறது; பூமியிலுள்ள தாவரங்கள் அதனுடன் கலந்(து செழித்)தன. ஆனால் அவை காய்ந்து, பதராகி அவற்றைக் காற்று அடித்துக் கொண்டு போய் விடுகிறது.- மேலும், எல்லாப் பொருளின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்.’’ (அல்குர்ஆன் 18: 45)

காலச் சக்கரம் சுழன்று கொண்டிருக்கிறது. இரவும், பகலும் மாறி, மாறி வருகிறது. வருடங்கள் கடந்து செல்கின்றன. காலநிலை மாற்றம் குறித்த நேரத்தில் நிகழ்கிறது. வெப்பம், குளிர், வசந்தம், மழை எல்லாம் முறையாக வருகின்றன; போகின்றன. மீண்டும் வருகின்றன. அதற்கான கால அவகாசம் முடிந்துவிட்டால் சென்றுவிடுகின்றன. வானிலிருந்து மழை பொழிகிறது. வாழ்க்கை தற்காலிகமானது அதன் மூலம் வறண்ட பூமி தாகத்தை தணிக்கிறது. மண்ணின் அடியில் மறைந்து கிடக்கும் விதைகளும், வேர்களும் மெல்ல முளைக்க துவங்குகின்றன. விவசாயிகள் விதைக்கும் விதையின் மேல் தோட்டை உடைத்து மண்ணை பிளந்து இளம் தளிர் வெளியுலகை காண வரும். பின்னர் அது நிமிர்ந்து நிற்கும். அதில் இலைகள் துளிர்க்கிறது. கிளைகளாக மாறுகிறது. முதலில் பச்சை ஆடையை அணிந்த பூமி தாமதிக்காமல் கதிர், பூ, காய், கனி என வளமாக மாறும். மீண்டும் கோடை காலம் வருகிறது. செடிகள் வாடி இலைகள் மஞ்சள் நிறமாக மாறும். உலர்ந்து சருகுகளாக காற்றில் அடித்துச் செல்லப்படும்.

மனிதர்களிடையே பிறப்பும், இறப்பும் ஓய்வில்லாமல் நடக்கிறது. புதியவர்கள் வருகின்றார்கள்; பழையவர்கள் செல்கின்றார்கள். இங்கு யாருக்கும் நிரந்தர இடம் கிடையாது. எதுவும் முடிவுறுவதில்லை. பழையதை மெல்ல மெல்ல மாற்றி அல்லாஹ் புதியவற்றை கொண்டு வருகிறான். பல நூற்றாண்டுகள் கழிந்த பிறகும் பூமிக்கு முதுமை எட்டவில்லை. நேற்று ஆடி, பாடி, துள்ளி விளையாடிய குழந்தைகள், இன்று மீசை முளைத்த இளைஞர்கள். நேற்று சிறுமிகளாக சுற்றித்திரிந்தவர்கள் இன்று தாய்மார்கள். அவர்களின் குழந்தைகள் இன்று வாழ்க்கைக்கு வர்ணங்களை பூசி ஓடி விளையாடுகின்றனர். அத்தோடு பூமி புதிய தாத்தாக்களையும், பாட்டிகளையும் உருவாக்குகிறது. ஒவ்வொருவராக விடை பெறுகின்றனர். நேற்றைய அழகு மங்கைகள் இன்று இதோ பல் விழுந்து தோல் சுருங்கி கூனிக்குறுகி நடக்கின்றனர். அவர்களின் மாயப்புன்னகை எங்கு சென்றது? அவர்களின் அழகின் பொலிவு எங்கு போனது? உடல் அழகில் ஆணவம் கொண்டவர்கள் இன்று உடல் வேதனையால் அல்லலுறுகின்றனர். நினைவுகளுக்கு பிரகாசிக்கும் திறன் இருக்கிறது. எல்லாம் நேற்று நடந்ததது போல இருக்கிறது. காலம் இப்படித்தான். முன்னோக்கினால் நீண்டதாக தோன்றும். பின்னோக்கி பார்த்தால் வாரிச் சுருட்டி கையில் தந்ததுபோல இருக்கும்.எல்லாவற்றையும் பார்க்கும்போது நமது முக்கியத்துவம் குறைந்து போகிறது. எதன் மீதும் ஆசை இல்லை; சுய நலன் இல்லை; பரிதவிப்பு கிடையாது; புகார் கிடையாது; பகையும் இல்லை. பின்னர் ஏன் இங்கு நாம் சண்டை- சச்சரவுகளில் ஈடுபடுகிறோம்? ஏன் அடுத்தவரின் உரிமைகளை பறிக்கிறோம்? மனிதனால் எதையாவது நிரந்தரமாக சொந்தமாக்கி கொள்ள முடியுமா? மரணிப்பவர்கள் எதனை தங்களுடன் எடுத்துச் செல்கிறார்கள்?

மாமன்னர்களும், பேரரசர்களும் இன்று எங்கே? வீர போராளிகள் எங்கே? வல்லரசுகளான சாம்ராஜ்ஜியங்கள் எங்கே? கோட்டைகள், கொத்தளங்கள் எங்கே? எல்லாம் மண்ணோடு மண்ணாகிப் போனதே? உலகை உலுக்கிய சர்வாதிகாரிகள் இன்று எங்கே? ஏகாதிபத்தியவாதிகள் எங்கே? பிரபஞ்சத்தின் அகலத்தையும், அதனையொட்டிய காலத்தின் நீளத்தையும் கற்பனைச் செய்யும்போது பூமியில் நமது வாழ்க்கை எவ்வளவு அற்பமானது என்பதை புரிந்துகொள்ள முடியும். இங்குள்ள அனுபவம் தற்காலிகமானது. இங்குள்ள வளங்கள் மிகவும் அற்பமானது.மழைக்காலத்தில் முளைத்து வெயில் காலத்தில் சருகுகளாக மாறும் தாவரம் போல மட்டுமே இவ்வுலக வாழ்வை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நிலையான உண்மையான வாழ்க்கை விரைவில் வரவிருக்கிறது. அந்த வாழ்க்கைக்காக நம்மை நாம் தயார்படுத்துவோம். [/groups_member] … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.