வியாபம் ஊழலும், மாஃபியா அரசியலும்!

0

– செய்யது அலீ

ஒரு வருடத்திற்கு முன்பு 14வது மக்களவை தேர்தல் நடந்தபோது பா.ஜ.க.வின் முக்கிய தேர்தல் பிரச்சாரம் ஊழலை மையப்படுத்தியே அமைந்திருந்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இடம் பெற்றவர்கள் நடத்திய ஊழலை காங்கிரசுக்கு எதிரான ஆயுதமாக பிரயோகித்து அதிகாரத்தை பா.ஜ.க. கைப்பற்றியது.

பா.ஜ.க.வின் ஆட்சி ஓர் ஆண்டை நிறைவு செய்த வேளையில் கூட வகுப்புவாத, கார்ப்பரேட் மயமாக்கல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எதிர்கட்சிகளால் சுமத்தப்பட்டபோது ஓர் ஆண்டில் ஊழல் ஏதும் நிகழவில்லை என்று அவர்கள் தம்பட்டம் அடித்தார்கள். ஆனால், ஓர் ஆண்டு நிறைவுற்ற நாளிலிருந்து ஊழல் குற்றச்சாட்டுகள் மத்தியிலிருந்து மட்டுமல்ல, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களிலிருந்தும் புற்றீசல் போல ஒவ்வொன்றாக வெளியாகிக் கொண்டிருக்கிறது.

இரண்டு மத்திய அமைச்சர்கள், நான்கு மாநில முதல்வர்கள், மகாராஷ்டிராவில் இரண்டு அமைச்சர்கள் என நாடெங்கும் ஊழலை ஒரு தேசிய திருவிழாவõகவே பா.ஜ.க. கொண்டாடி வருகிறது. அதன் உச்சக்கட்டம்தான் மத்தியபிரதேச மாநிலத்தில் நடந்த வியாபம் மெகா ஊழல்.

‘வியாபம்’ மெகா ஊழல்

பா.ஜ.க. அரசின் ஒத்தாசையுடன் நடந்த மிகப்பெரும் நியமன ஊழல் வியாபம். இந்த ஊழலில் குற்றம் சாட்டப்பட்டவர்களும், புலனாய்வு செய்தவர்களும் மர்மமாக மரணமடைந்து வருகின்றனர். ஜபல்பூர் என்.எஸ்.சி.பி. கல்லூரியின் டீன் டாக்டர் அருண் சர்மா டெல்லி ஹோட்டல் ஒன்றில் மரணித்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டதை தொடர்ந்து தலைமறைவாகி பின்னர் தாமோதர் ரயில் தண்டவாளத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட 19 வயது மருத்துவ மாணவி நம்ரதாவின் வீட்டிற்கு நேர்காணலிற்காக சென்ற ஆஜ்தக் தொலைக்காட்சி செய்தியாளர் அக்ஷய் சிங் தண்ணீரும், தேநீரும் அருந்திய பிறகு வாயில் நுரை கக்கி உயிரிழந்தார்.

 மோவ் (Mடணிதீ) கால்நடை மருத்துவ கல்லூரியில் பயின்ற அமித் சாகர் என்ற மாணவர் கடந்த பிப்ரவரி 18ம் தேதி மூழ்கி இறந்த தகவல் ஐந்து மாதங்களுக்கு பிறகே தெரிய வந்தது. டாக்டர் அருண் சர்மாவுக்கு முன்பு அப்பதவியை வகித்தவரும் தேர்வாணைய முறைகேடுகள் குறித்து விசாரித்தவருமான டி.கே. சாகெல்லா வீட்டில் தீக்காயத்துடன் மரணித்த நிலையில் கிடந்தார். மத்திய பிரதேச மாநில ஆளுநரின் மகன், சைலேஷ் யாதவ் லக்னோவில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

‘வியாபம்’ என்பது மத்திய பிரேசத்தின் மாநில அரசுப் பணியிடங்களுக்கும் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கும் நுழைவுத் தேர்வு மூலம் உரியவர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியாளர் தேர்வாணைய அமைப்பாகும். மத்திய பிரேதஷ் விவசாயிக் பரீக்ஷா மண்டல் என்பது இதன் பெயர். இந்த அமைப்பில், அரசியல் செல்வாக்கும் பண பலமும் அதிகார துஷ்பிரயோகங்களும் புகுந்து ஆடிய ஆட்டம் செய்திகளாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

 விண்ணப்ப படிவம் விநியோகிப்பதில் துவங்கி அரசு தேர்வுகளுக்கு ஆள்மாறாட்டம், அதற்கு ஒத்துழைக்க லஞ்சம், திறமையானவர்கள் தேர்வில் வெற்றி பெற்றால் அந்த இடங்களை விலை பேசுவது, காப்பியடித்து தேர்வு எழுத உதவுவது, தேர்ச்சி அடையாதவர்களுக்கு மதிப்பெண்னை திருத்தி வழங்குவது உள்பட கோடிக்கணக்கான ரூபாய் பொருளாதார முறைகேடுகள் வியாபத்தில் நடந்துள்ளதாக மத்தியபிரதேச லோக்கல் ஃபண்ட் ஆடிட் அலுவலகம் 2008ம் ஆண்டு கண்டுபிடித்தது.

அடுத்த ஆண்டு வியாபத்தில் நடக்கும் மோசடிகள் குறித்து புகார்கள் எழுந்தபோதிலும் மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசு இவ்விவகாரத்தில் அக்கறை எடுக்கவில்லை. 2013 ஜூன் மாதம் ஒரு டாக்டரும், வியாபத்தில் சில அதிகாரிகளும் மருத்துவ நுழைவுத் தேர்வில் தகுதி இல்லாதவர்களை வெற்றி பெறச் செய்ய முயற்சித்த தகவலும் வெளியானது.

2009ம் ஆண்டு இந்த முறைகேடுகள் தொடர்பாக இந்தூரை சார்ந்த டாக்டர் ஆனந்த்ராய் அளித்த (அதிலிருந்து 2013ம் ஆண்டு வரை சுமார் 45 பொது நல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன) பொது நல மனுவை விசாரித்த மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் ஜூலை மாதம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட்டது. சிறப்பு புலனாய்வு குழு தமது விசாரணையின் துவக்கத்திலேயே அசிஸ்டெண்ட் புரோக்ராமர், சிஸ்டம் அனலிஸ்ட் உள்ளிட்டோரை கைது செய்தது. அவர்களிடமிருந்து கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. பா.ஜ.க. மத்திய பிரதேச மாநிலத்தில் ஆட்சியில் அமர்ந்த அடுத்த ஆண்டே, அதாவது 2004ல் ஊழல் துவங்கியது.

மருத்துவம், பொறியியல் நுழைவுத் தேர்வுகளில் முன்னாள் முதல்வர் உமாபாரதி, முன்னாள் தொழில் கல்வி அமைச்சர் லட்சுமிகாந்த், பா.ஜ.க. தலைவர் சுதீர் ஷர்மா ஆகியோரால் சிபாரிசு செய்யப்பட்டவர்கள் வெற்றி பெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. முதல்வர் சிவராஜ் சிங் சௌகான், அவரது மனைவி சாதனா சிங் ஆகியோர் கூட மதிப்பெண் பட்டியலை திருத்தியதில் வெளிப்படையாகவே பங்கு வகித்துள்ளனர் என்ற குற்றச்சõட்டு எழுந்தது.

2009ம் ஆண்டு வியாபம் முறை÷டுகள் குறித்து முதன் முறையாக பொதுநல வழக்கை தொடர்ந்த ஆனந்த் ராய், தனியார் மருத்துவக் கல்லூரிகள் மட்டும் ஆண்டொன்றுக்கு சுமார் 40,000 கோடியை இருக்கை ஒதுக்கீடுகளின் மூலம் குவிக்கின்றன என்கிறார். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட 42 சதவீத இடங்களுக்கும் நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள 43 சதவீத இடங்களுக்கு ஏராளமான தொகை கணக்கில் காட்டாமல் வசூலிக்கப்படுகிறது. 15 சதவீத இடங்கள் (அதாவது 300) தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றது. ஆக மொத்தம் மத்திய பிரேசத்தில் மருத்துவப் படிப்பில் 100 சதவீத இடங்களும் காசு கொடுப்பவர்களுக்கே என்பதை நிலைநாட்டியுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் லட்சுமிகாந்த் சர்மா மற்றும் 129 பேர் ஒப்பந்த ஆசிரியர் நியமன ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டனர். ஆளுநர் ராம் நரேஷ் யாதவின் மகன் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இவர் பின்னர் லக்னோவில் உள்ள வீட்டில் மரணித்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். சுமார் 1930 பேரை காவலில் எடுத்து காவல்துறை விசாரித்த இந்தியாவிலேயே பிரம்மாண்டமான இவ்வழக்கில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களும் அடங்குவர்.

இவ்வழக்கு அரசியல், அதிகார வர்க்கத்தை நோக்கி நகர்ந்தபோது திகில் கதைகளை தோற்கடிக்கும் அளவுக்கு மர்ம படுகொலைகள் நிகழத்துவங்கின. இந்த ஊழலில் ஏதேனும் வகையில் தொடர்புடைய 50க்கும் மேற்பட்டோர் இதுவரை மர்மமான முறையில் மரணமடைந்துள்ளனர். மாநில அரசோ உயர்நீதிமன்றத்தில் 25 மரணங்கள் மட்டுமே நிகழ்ந்ததாக தெரிவித்தது. இவையெல்லாம் இயற்கை மரணங்கள் என்று சர்வ சாதாரணமாக ம.பி. பா.ஜ.க. அரசு அலட்சியப்படுத்தும்போது, ஆதாரங்களை அழித்து வழக்கை சீர்குலைக்கவே படுகொலைகள் அரங்கேறுவதாக இச்சம்பவங்களின் உண்மையமான நிலையை ஆராய்பவர்கள் கூறுகின்றனர்.

மர்ம மரணங்களை தொடர்ந்து இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க கோரி காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக் விஜய் சிங் உச்சநீதிமன்றத்தை அணுகினார். இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நபரின் தொலைபேசிக்கு முதல்வர் வீட்டிலிருந்து 139 அழைப்புகள் வந்ததாக புகார்கள் எழுந்துள்ள நிலையில் மாநில சிறப்பு புலனாய்வு பிரிவால் இவ்வழக்கில் எதுவும் செய்ய இயலாது என்பது திக் விஜய் சிங்கின் வாதமாகும்.

ஒரு கோடிக்கும் அதிகமான நபர்கள் விண்ணப்பித்த 1,30,000 பதவிகளுக்கான நியமனத்தில் நடந்துள்ள முறைகேடுகளை விட இவ்வழக்கை சீர்குலைக்க நிழலுலகத்தை மிஞ்சும் அளவுக்கு நடைபெறும் மர்ம மரணங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. இந்த ஊழலின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. உயர் மட்ட தலைவர்களின் பங்கும் இருக்கலாம் என்ற சந்தேகம் வலுவடைந்துள்ளது.

வியாபம் ஊழலில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. தலைவர்களின் பங்கு!

வியாபம் ஊழல் வழக்கின் முக்கிய குற்றவாளியான சுதிர் சர்மா என்பவரிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இணைச் செயலாளர் சுரேஷ் சோனி, பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்தர பிரதான் மற்றும் பா.ஜ.க. எம்.பி. அனில் தவான் போன்றோர் ஊழல் பணத்தை பங்கிட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளதாக என்.டி.டி.வி. தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய பிரதேச கல்வி அமைச்சராக பத்தாண்டுகள் பதவியில் இருந்த லட்சுமி காந்த் சர்மா வியாபம் குற்றவாளி பட்டியலில் உள்ளார். அவருக்கு முன், சிவராஜ் சிங் சௌகான் கல்வியமைச்சராக இருந்தார். லட்சுமி காந்த் சர்மாவை மாநில கல்வித்துறை சிறப்பு இயக்குநராக பதவி நியமனம் செய்தார். சுதிர் சர்மா அப்போது சாதாரண தனியார் பயிற்சிக்கல்லூரி ஒன்றில் பகுதி நேர ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். எனவே, இந்த நியமனத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. சுதிர் சர்மா 2007ம் ஆண்டு 4,000 கோடிக்கு அதிபதியானார். சுரங்கத் தொழிலில் கால் பதித்தார்.

சுதிர் சர்மா ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முக்கிய பொறுப்பில் உள்ளவர். அவர் ஆர்.எஸ்.எஸ். மத்திய பிரதேச சிக்சா மண்டல் என்ற பிரிவில் உயர் பொறுப்பை வகித்து வந்தார். மேலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு பெருமளவில் நிதியை மாதம் ஒருமுறை தொடர்ந்து வழங்கி வந்துள்ளார்.

2013ம் ஆண்டு மத்திய பிரதேச தேர்வு வாரியத்தின் துணை இயக்குநர் பங்கஜ் திரிவேதி என்பவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரது வீட்டில் சோதனை நடந்தபோது கல்வி அமைச்சர் லட்சுமி காந்த் சர்மா, சுதிர் சர்மா போன்றோர் பெயர் வெளியாயின. முக்கியமாக வியாபம் ஊழல் தொடர்பான பணம் அனைத்தும் சுதிர் சர்மா மூலம்தான் கைமாறியது தெரிய வந்து. இந்த நிலையில் 2013 தேர்தலில் லட்சுமிகாந்த் சர்மா தோல்வியடைந்தார். பின் லட்சுமி காந்த் சர்மா வியாபம் ஊழல் வழக்கில் கைதானார்.

என்.டி.டி.டி. தொலைக்காட்சிக்கு கிடைத்திருக்கும் வருமான வரி அறிக்கைகள் அவர் வியாபம் வழக்கில் தொடர்புடையவர்களிடம் இருந்து தொடர்ந்து பணம் பெற்று வந்ததையும் அவருக்கும் லட்சுமி காந்த் சர்மாவுக்கும் இடையில் வலுவான பிணைப்பு இருப்பதையும் காட்டுகின்றன.

பின் சுதிர் சர்மா கைதானார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முக்கிய தலைவர்களின் பெயர்கள் வெளியாகின. சுரேஷ் சோனி, தர்மேந்திர பிரதான், பிரமோத் ஜா, விக்ரம் பட் போன்றோர் வியாபம் ஊழலின் முக்கிய பங்கு வகித்ததாக தெரிய வந்தது. ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் மத்திய பிரதேசம் வருகை தரும் போதெல்லாம் சுதிர் சர்மாவை சந்தித்ததும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு கோடிக்கணக்கான மதிப்புள்ள நிலங்களை இலவசமாக கொடுத்ததும் தெரிய வந்தது.

2013ம் ஆண்டு முதலான ஆவணங்கள் விமான டிக்கெட்டுகள் மற்றும் போக்குவரத்து செலவுகளுக்காக மிகப்பெரும் பணம் செலவு செய்துள்ளதை காட்டுகிறது.

ஒரு வழக்கு தொடர்பாக இத்தனை மரணங்கள் தொடர்ச்சியாக நிகழ்வது அதன் மர்மத்தின் ஆழத்தை வெளிப்படுத்துகிறது. மிக மோசமான ஊழலும் அது தொடர்பான மர்ம மரணங்களும் தனது மாநிலத்தில் நடந்த பிறகும் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தனது பதவியில் நீடிப்பது அவமானகரமானது. தற்போது, இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. ஆனால், சி.பி.ஐ. கூடுதல் இயக்குநராக அண்மையில் நியமிக்கப்பட்ட ஒய்.சி.மோடியும், இணை இயக்குநராக  நியமிக்கப்பட்ட அருண் குமார் சர்மாவும் மோடியின் பழைய குஜராத் கூட்டாளிகளாவர். இந்நிலையில் இவ்வழக்கின் விசாரணை முழுமையாக நடத்தப்படுமா என்ற கேள்வியும் எழுகிறது.

‘தூய்மை இந்தியா’, ‘மேக் இன் இந்தியா’, ‘டிஜிட்டல் இந்தியா’ என பெருமை பேசியும், செல்ஃபி எடுத்தும் தனது இமேஜை மினுக்குவதில் மெனக்கெடும் இந்திய பிரதமர் மோடி திட்டமிட்ட முறையில் நிகழ்த்தப்பட்ட இந்த ஊழல் விஷயத்தில் மௌனம் காப்பது, யாருக்கு சாதகம் என்பது தெளிவாகிறது.

குற்றம் இழைத்தவர்களை சிறையில் அடைப்பதற்கு பதிலாக அதற்கு எதிராக குரல் எழுப்புபவர்களுக்கு மரணத்தை பரிசாக அளிக்கும் ஆபத்தானதொரு காலக்கட்டத்தை நமது தேசம் கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த அநியாயக்கார கும்பலிடமிருந்து தேசத்தை எவ்வளவு விரைவாக விடுவிக்கிறோமோ அப்பொழுதே நமது வாழ்வும், ஜனநாயகமும் பாதுகாக்கப்படும்!

(ஆகஸ்ட் 2015 இதழில் வெளியான கட்டுரை)

Comments are closed.