விழிக்கட்டும் ‘புதிய தலைமுறை’ ஊடகவியலாளர்கள்

0

 

நரேந்திர மோடி பிரதமராக ஆட்சி பொறுப்பேற்ற பின் இந்துத்துவ ஃபாசிஸ்டுகள் அதிதீவிரமாக தங்கள் அடக்குமுறைகளை ஏவி வருகின்றனர். மதம் மாற தடை, அரசியல் சாசனத்தில் மதச்சார்பின்மையை நீக்க முயற்சி, சமஸ்கிருதம்இந்தி திணிப்பு, சிறுபான்மையினர் மீது தொடர் தாக்குதல் என இந்துத்துவ நிகழ்ச்சி நிரலை விரைந்து செயல்படுத்தி வருகின்றனர்.

இந்துத்துவ ஃபாசிஸத்தின் கூறுகளில் ஒன்று மக்களை சிந்திக்க விடாமல் செய்வதாகும். மக்கள் அறிவு பெற்று கேள்வி கேட்கத் தொடங்கினால் பார்ப்பனர்கள் ஆதிக்கத்தை தொடர முடியாதல்லவா?

இதனாலேயே சிந்தனையை துலங்கச் செய்யும் அனைத்தையும் காவிக் கும்பல் எதிர்த்து வருகிறது. மூடத்தனமே அவாளின் மூலதனம் என்பதால்தான், மூடப்பழக்க வழக்கங்களின் உச்சமான வேத காலத்தை பொற்காலம் என்கிறார்கள்.

அதே சமயம் விஞ்ஞான முன்னேற்றங்களையும் அறிவியல் கண்டுபிடிப்புகளையும் சாதாரண மக்ளுக்கு கிடைக்கச் செய்வதில் தடையை ஏற்படுத்துவதுடன், அதில் ஏகபோக உரிமை கொண்டாடுவதையும் பார்க்கலாம். ஆண்ட்ராய்டு தொழில்நுட்பம் வேத காலத்திலேயே பயன்படுத்தப்பட்டது என இந்துத்துவவாதிகள் சொல்லும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை.

ஊடகங்கள் குறித்தும் இந்தப் பார்வைதான் அவர்களிடம் உள்ளது. கிடைத்த வாய்ப்பையெல்லாம் பயன்படுத்தி, காசும் வாங்கிக் கொண்டு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் கூவிய இந்துத்துவவாதிகள், தாலி பற்றிய விவாதம் என்றவுடன் காலித்தனங்களை அரங்கேற்றியிருக்கிறார்கள்.

தாலி கட்டுவதிலிருந்து தாலி அறுப்பது வரை  இங்குள்ள மக்களின் தனித்த பண்பாட்டுக் கூறுகளை, ஆன்மீகத்தின் பெயரால் உள்வாங்கி ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் போது, அடி மடியில் கை வைக்கும் முகமாக மக்களை சிந்திக்க வைத்தால் கூட்டணி தர்மம் பார்க்கப்படாது; குண்டு வீசுவோம் என காட்டியிருக்கிறார்கள் காவிகள்.

புதிய தலைமுறை தொலைக்காட்சி மீதான தாக்குதலை வெறுமனே கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதலாக மட்டுமே சுருக்கி விடக்கூடாது. இந்தத் தாக்குதலின் பின்னணியில் மூன்று வகையான அச்சுறுத்தல்களை ஊடகங்கள் எதிர் கொண்டுள்ளன.

பார்ப்பன ஆதிக்கத்துக்கு எதிரான எந்த சிறு முயற்சியையும் இனி பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்பது முதல் எச்சரிக்கை. இதற்கு எதிராக பெரியாரின் கொள்ளைகளை முன் எப்போதையும் விட மூர்க்கமாக உயர்த்திப் பிடிக்க வேண்டும். குறிப்பாக ஊடகவியலாளர்கள்.

பார்ப்பனியம் மீதான சிறு விமர்சனத்துக்கும் பயங்கரவாதம் மூலமே பதிலடி கொடுக்கப்படும் என்பது இரண்டாவது எச்சரிக்கை.

முற்போக்கு சிந்தனை கொண்டோர் ஊடகங்களிலிருந்து வெளியேற வேண்டும். குறைந்தபட்சம் எங்கள் ஆட்சிக் காலத்தில் ‘மூடிக்கொண்டிருக்க’ வேண்டும் என்பதுதான் பிரதான எச்சரிக்கை. புதிய தலைமுறை தொலைக்காட்சி தாக்குதல் பற்றி இந்துத்துவ ஃபாசிஸ்டுகள் வலைதளங்களில் எழுதும் போதும், பா.ஜ.க தலைவர்கள் பேசும் போதும் இந்த மிரட்டல் தொனியே வெளிப்படுகிறது. இதற்கு எதிராக ஊடகவியலாளர்கள் என்ன செய்ய போகிறார்கள்? மக்களவை தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்பே சன் தொலைக்காட்சி குழுமத்திலிருந்து பிரபல ஊடகவியலாளர் வீரபாண்டியன் ஓரம்கட்டப்பட்டார்.

அவரை ஊடகத் துறையிலிருந்து விரட்ட இந்துத்துவ ஃபாசிஸ்டுகள் திரைமறைவில் ஆடிய பேயாடத்தின், அடுத்த அத்தியாயமே புதிய தலைமுறை தொலைக்காட்சி மீதான தாக்குதல் என்பதை ஊடகவியலாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

‘புதிய தலைமுறை’ ஊடகவியலாளர்கள் இந்துத்துவ ஃபாசிஸத்தின் பயங்கர சூழ்ச்சி திட்டங்களை பயின்று, ஃபாசிஸ்டுகளுக்கு ‘முதுகு சொறிந்து’ விடும் வேலையை கைவிடுவதுதான் அவர்களின் பாதுகாப்புக்கு ஒரே வழி. அடுத்த ‘வீரபாண்டியனை’ ஃபாசிஸம் வீழ்த்தும் முன் விழித்துக் கொள்வோம்!

(ஏப்ரல் 2015 இதழின் தலையங்கம்)

Comments are closed.