விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் கொல்லப்பட்டதை அடுத்து ஆக்ராவில் பதற்றம்

0

ஆக்ரா விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் நகர தலைவர் கொல்லப்பட்டு நான்கு நாட்கள் ஆகிய நிலையில் இன்று அந்நகரில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

கொல்லப்பட்ட அருண் மஹவ்ருக்காக ஞாயிறு நடந்த இரங்கல் கூட்டத்தில் சங்பரிவாரத் தலைவர்கள் பலர் கலந்து கொண்டு உரையாற்றியது அங்கு பதற்றத்தை உருவாக்கியுள்ளது. மேலும் வெறுப்பு பேச்சுக்கு புகழ் பெற்ற சாத்வி பிராச்சியும் மாறுவேடத்தில் வந்து அக்கூட்டத்தில் கலந்து கொண்டது அங்கு நிலவி வந்த பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

இந்தக்கூட்டத்தில்  முஸ்லிம்கள் பேய்கள் என்றும் ராவணனின் குழந்தைகள் என்றும் அழைக்கப்பட்டனர். மேலும்  பழிதீர்ப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்டன என்றும் மனித மண்டை ஓடுகளை மஹவ்ரின் தியாகத்திற்கு காணிக்கையாக்குவோம் என்றும் அந்த இரங்கல் கூட்டத்தில் கூறியுள்ளனர்.

இதனையடுத்து அசம்பாவிதங்கள் ஏதும் நிகழ்ந்துவிடாமல் தடுக்க நாய் கி மண்டி மற்றும் மன்டோலா காவல் நிலைய பகுதிகளில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் காவல்துறை உயரதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பா.ஜ.க வின் மாநில தலைவர் லக்ஷ்மிகாந்த் வாஜ்பேயி ஆக்ரா செல்லும் வழியில் காச்கஞ் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். ஆக்ராவின் நிகழ்வுகள் குறித்து சாத்திவி பிராச்சி கூறுகையில் “மாநிலத்தின் நிலைமை காஷ்மீரின் நிலையை விட மோசமாக உள்ளது, அகிலேஷ் யாதவின் அரசு சிறுபான்மை ஆதரவு வேலைகளில் ஈடுபட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.

உத்திர பிரதேசத்தில் 2017 ல் சட்டமன்ற தேர்தல் வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க:ஆக்ராவில் விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் சுட்டுக்கொலை

Comments are closed.