என்கௌண்டர் வழக்கு குற்றவாளி வன்சாரா குஜராத் செல்ல அனுமதி

0

இஷ்ரத் ஜஹான் மற்றும் சொராபுத்தீன் ஷேக் போலி என்கெளண்டர் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டர் ஜெனெரல் DIG.வன்சாரா தற்பொழுது அவரது குஜராத் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். இஷ்ரத் ஜஹான் போலி என்கெளண்டர் வழக்கில் கடந்த ஒரு வருடமாக இவர் மும்பையை விட்டு எங்கும் செல்லக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து வன்சாரா காந்திநகரில் உள்ள தனது வீட்டிற்கு அடுத்த வாரம் செல்ல உள்ளார். சொராபுத்தீன் ஷேக் மற்றும் அவரது மனைவி கவ்சர் பானு ஆகியோரின் கொலை தொடர்பாக 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டதை அடுத்து முதன் முறையாக தற்பொழுது வீடு செல்லும் அவரை வரவேற்க பெரிய கொண்டாட்டங்கள் நடக்க இருப்பதாகவும் தெரியவருகிறது.

இவரது பிணை ஆணையை மாற்றி அவர் குஜராத் செல்ல அனுமதிக்கும் தீர்ப்பை சிறப்பு நீதிபதி எஸ்.ஜே.ராஜே அறிவித்தார். அந்த தீர்ப்பில் வன்சாரா மும்பையிலே இருக்க வேண்டும் என்கிற நிபந்தனை நீக்கப்பட்டுவிட்டது என்றும் அவர் குஜராத் செல்லலாம் என்றும் கூறியுள்ளார். மேலும் அவரின் வழக்கறிஞர் இது குறித்து கூறுகையில் நீதிமன்றம் அவர் சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்ற நிபந்தனையும் வன்சாரா ஓய்வுபெற்றவர் என்பதனால் நீக்கியுள்ளது என்று கூறியுள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்து சி.பி.ஐ ஒரு பக்க பதிலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் நீதியை நிலை நாட்ட நீதிமன்றத்தின் இந்த உத்தரவை நிராகரிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

குஜராத்தின் என்கெளண்டர் ஸ்பெசலிஸ்ட் என்று போற்றப்பட்டவர், 2007 இல் அவரது கைதுக்கு பின் சபர்மதி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் நவம்பர் 2012 இல் மும்பையின் தலோஜா சிறையில் அடைக்கப்பட்டார். ஜூன் 2013 வன்சாரவை இஷ்ரத் ஜஹான் வழக்கில் சி.பி.ஐ கைது செய்தது. செப்டெம்பர் 2014 இல் சொராபுத்தீன் கொலை வழக்கில் பாம்பே உயர் நீதி மன்றத்தில் அவருக்கு பிணை வழங்கப்பட்டது. சென்ற வருடம் பிப்ரவரியின் இஷ்ரத் ஜஹான் வழக்கிலும் அவருக்கு பிணை கிடைத்தது. அதிலிருந்து அவர் மும்பையில் வசித்து வருகிறார்.

தற்பொழுது அவரின் பிணை நிபந்தனையை மாற்றுவதற்கு நீதிமன்றத்தில் வன்சாரா தரப்பில் இருந்து மனு அளிக்கப்பட்டிருந்தது. அதில் “வன்சார Z-பிரிவு பாதுகாப்பு பெற்ற ஒருவர் என்றும் மும்பையை பொறுத்தவரை அது தாவூத் இப்ராஹீம், சோட்டா ஷகீல் போன்ற சர்வதேச குற்றவாளிகளின் புகலிடமாக இருந்தது என்றும் கூறியுள்ளார். மேலும் வன்சாரா, தான் பணியில் இருக்கும் போது இது போன்ற குற்றவாளிகளை கண்டுபிடித்தும் அவர்கள் தொடர்பான பல ஆவணங்களை வெளிக்கொண்டுவந்தவராவார்.” என்று தங்கள் மனுவில் கூறியுள்ளனர்.

மேலும் வன்சாரா தோல் அலர்ஜியினால் பாதிக்கப்பட்டவர் என்றும் அஹ்மெதபாத்தில் உள்ள மருத்துவர்கள் வன்சாராவை வீட்டு உணவை உண்ணுமாறு அறிவுறுத்தியுள்ளனர் என்றும் கூறியுள்ளனர். மேலும் மும்பை வன்சாராவின் வீடு இல்லை என்றும் அதனால் அவர் வீட்டு உணவு சாப்பிட இயலாது என்றும் கூறியுள்ளனர். மேலும் தன்னுடன் குற்றம் சாட்டப்பட்ட டி.ஜி.பி. பாண்டேவுக்கு சமமாக தன்னையும் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார். பாண்டே மீதான குற்றச்சாட்டுக்கள் வன்சாரா மீது சுமத்தப்பட்ட குற்றங்களை போல் அல்லது அதைவிட மோசமானதாகும். ஆனால் அவருக்கு பிணையின் போது இது போன்று குஜராத்திற்குள் நுழையக் கூடாது என்று எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை என்று கூறியுள்ளனர்.

Comments are closed.