வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA

1

2007 மே மாதம் 18 ஆம் தேதி நடைபெற்ற மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்கில் சுவாமி அசீமானந்தாவிற்கு பிணை வழங்கப்பட்டதை அடுத்து அவரது பிணை உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய NIA  வின் ஹைதராபாத் அலுவலகத்தில் இருந்து முன்மொழியப் பட்டுள்ளது. ஆனால் அதனை NIA உயரதிகாரிகள் நிராகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஒன்பது உயிர்களை பலிவாங்கி 58 பேரை காயப்படுத்திய குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாக குற்றம் சாட்டப்பட அசீமானந்தாவிற்கு ஹைதராபாத் நீதிமன்றம் மார்ச் மாதம் 23 ஆம் தேதி பிணை வழங்கி உத்தரவிட்டது. இந்த உத்தரவை NIA தரப்பு எதிர்காததால் அவர் சஞ்சல்குடா சிறையில் இருந்து ஏப்ரல் 1 ஆம் தேதி வெளியானர்.

இது குறித்து ஹைதராபாத் அலுவலக NIA அதிகாரிகள் கூறுகையில், “அசீமானந்தாவின் பிணை மனுவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய போதுமான காரணங்கள் உள்ளது. மேலும் மேல்முறையீடு செய்யப்பட்டால் அசீமானந்தாவின் பிணையை நிராகரிக்க ஹைதராபாத் நீதிமன்றம் தயாராகவே இருந்தது. இந்த வழக்கை விசாரித்த அதிகாரிகளிடையே மேல் முறையீடு செய்யவேண்டும் என்ற கருத்தும் வலுவாக இருந்தது.” என்று கூறியுள்ளார்.

ஆனால் அதற்கு NIA இயக்குனர் சரத் குமார் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது அசீமானந்தா ஹைதராபாத்தை விட்டு வெளியேற நீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை. மேலும் அவர் தனது பாஸ்போர்ட்டை சமர்பிக்கவும், ஜாமீன் தொகையாக 1 லட்ச ரூபாயையும் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியிருந்தது.

ஒரு குண்டு வெடிப்பு குற்றம் சுமத்தப்பட்டவர் அதுவும் தானே அந்த குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியதாக ஒப்புக்கொண்டவர் பிணை உத்தரவை  NIA எதிர்க்காதது 2015 இல் வழக்கறிஞர் ரோகினி சாலியன் NIA அதிகாரிகள் மீது சுமத்திய குற்றச்சாட்டை நிரூபிக்கின்றது. அந்த குற்றச்சாட்டானது தன்னிடம் இந்த குண்டு வெடிப்பு வழக்கில் மென்மைப்பை போக்கை கையாள வேண்டும் என்று NIA அதிகாரிகள் கூறியதாக அவர் தெரிவித்திருந்தார். மேலும் அதனை தன்னிடம் கூறியது NIA வின் சுகாஸ் வார்க்கே என்றும் அவர் தெரவித்திருந்தார். அனால் அப்போது சாலியனின் கூற்றை NIA மறுத்தது.

தற்போது, இந்த வழக்கில் மேல் முறையீடு செய்வதற்கு NIA தலைமையகத்தில் இருந்து ஒப்புதலும் அதற்கான சட்ட வழிகாட்டுதலும் தரப்பட வேண்டும், ஆனால் இந்த வழக்கில் மேல் முறையீடு செய்ய தங்களுக்கு NIA தலைமையகம் ஒப்புதல் வழங்கவில்லை என்று ஆதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்துத்தவ தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்புகள் தொடர்பான ஏழு வழக்குகள் NIA விடம் ஒப்படைக்கப்பட்டது. அதில் ஒன்றான சம்ஜவ்தா விரைவு ரயில் குண்டு வெடிப்பு வழக்கிலும் NIA அசீமானந்தாவின் பிணை மனுவை எதிர்க்கவில்லை. மேலும் கடந்த மார்ச் 8 ஆம் தேதி, 2007 அஜ்மீர் குண்டு வெடிப்பு வழக்கில் இருந்து அசீமானந்தா மற்றும் 6 பேர் தொழில்நுட்ப காரணங்களால் விடுவிக்கப்பட்டனர்.

2014 மத்தியில் பாஜக ஆட்சி வந்ததும் இந்துத்வா தீவிரவாதிகள் மீதான வழக்கு நீர்த்துப்பபோகச் செய்ய அனைத்து முயற்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதன் ஒரு கிளை தான் தற்போதைய அசீமானந்தாவின் பிணை மற்றும் அதனை எதிர்க்க NIA மறுப்பது என்று பார்க்கப்படுகிறது.

அசீமானந்தா 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19  ஆம் தேதி, ஹரித்வாரில் வைத்து மத்திய புலனாய்வுத்துறையினரால் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணையில் மொத்தம் 166 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டது. இன்னும் 100 க்கும் அதிகமானோர் விசாரிக்கப்பட உள்ளனர். இதில் மொத்தமுள்ள 8  குற்றம் சாட்டப்பட்டவர்களில் நான்கு பேர் தற்போது பிணையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Discussion1 Comment

  1. நம் நாட்டில் குற்றம் நிருபிக்கப்பட்ட இந்துத்துவ தீவிரவாதிகளுக்கு பிணை கிடைத்து வெளியில் சுற்றுகிறார்கள்.
    எதற்காக கைது செய்யப்பட்டோம் என்றே தெரியாமல் பல ஆண்டுகளாக முஸ்லிம்களும் தலித்துகளும் விசாரணைக்கைதிகளாகவே இன்னும் சிறையில் உள்ளனர்.
    இதை தான் இரட்டை நீதி என்று சொல்கிறோம்.