உத்தர பிரதேசம்: அமித் ஷா கூட்டத்தை புறக்கணித்த தலித்கள்

0

லக்னோவில் பா.ஜ.க தலைவர் அமித் ஷா மற்றும் பஹுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சுவாமி பிரசாத் மெளரியா ஆகியோர் பங்கேற்ற பேரணி மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

5 லட்சம் பேர்களுக்கும் மேலாக பங்கெடுக்க வசதியான ராமா பாய் அம்பேத்கர் பேரணி அரங்கில் அமித்ஷா வின் நிகழ்ச்சியில் வெறும் 30,000  இல் இருந்து 35,000 பேர் மட்டுமே பங்கெடுத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. முன்னதாக இங்கு நடைபெற்ற மாயாவதியின் நிகழ்ச்சிக்கு இந்த அரங்கமே நிரம்பி வழிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அமித் ஷா பேரணிக்கு இது போன்ற ஒரு மோசமான வரவேற்ப்பு கிடைத்ததற்கு காரணம் சமீபத்தில் தலித்கள் மீது பசு பாதுகாவலர்கள் என்கிற போர்வையில் பா.ஜ.க ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதல்கள் தான் என்று கூறப்படுகிறது.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஒருவர், “இந்நிகழ்ச்சிக்கு வரவேற்பில்லை என்பதை அறிந்து அமித் ஷா இந்நிகழ்ச்சிக்கு வருவதை ரத்து செய்ய இருந்தார். ஆனால் நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடும் செய்யப்பட்ட நிலையில் நாங்கள் அவரை இந்நிகழ்ச்சியில் பங்கெடுக்க வைத்தோம்” என்று கூறியுள்ளார்.

இதே போன்று குஜராத்தில் படேல்களுக்கிடையே அமித் ஷா தனது உரையை 4 நிமிடங்களில் முடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.

உத்தரபிரதேசத்தில் அடுத்த வருடம் தேர்தல் வர இருக்கிற நிலையில் பா.ஜ.க வட்டாரத்தில் மிகப்பெரிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 2014 பொதுத் தேர்தலில் மொத்தம் உள்ள 80 இடங்களில் 72 இடத்தை பா.ஜ.க வென்றது.

தற்போது பா.ஜ.க.விற்கு கிடைக்கும் இந்த வரவேற்பிற்கு மத்தியில் மோடி அரசின் செயல்பாடுகளும் ஒரு காரணம் என்றும் கூறப்படுகிறது.

Comments are closed.