வெறுப்பு பேச்சின் கோரத் தாண்டவம்

0

 

– ரியாஸ்

‘உண்மை ஊரை வலம் வரும் முன் பொய் உலகை சுற்றி வந்துவிடும்’ என்று கூறுவார்கள். ஆனால், இன்றைய இணைய உலகில் உண்மை வீட்டை விட்டு வெளியே வரும் முன், பொய் உலகை இரண்டு முறை சுற்றி வந்து விடுகிறது.

இப்படி சுற்றி வரும் போது அப்பாவி உயிர்களையும் சேர்த்தே அது இழுத்துச் செல்கிறது. இதன் சமீபத்திய உதாரணம்தான் நாகலாந்து மாநிலத்தில்  நடைபெற்ற படுகொலை.

பொதுவாக, வடகிழக்கு மாநிலங்களில் வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் குறித்த ஒரு பொய் பிரச்சாரத்தை சங்பரிவார்களும் அங்குள்ள மற்ற குழுக்களும் நீண்ட நாட்களாக செய்து வருகின்றனர். வடகிழக்கு மாநிலங்களில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் வங்கதேசத்தில் இருந்து வந்தவர்கள் என்பதுதான் அந்த வெறுப்பு பிரச்சாரம். இதற்கான ஆதாரம்? அந்த முஸ்லிம்கள் பேசும் வங்க மொழி. இதனை தவிர்த்து இவர்களிடம் வேறு சான்றுகள் எதுவும் கிடையாது. கள நிலவரத்தை அறியாத ஊடகங்களும் இதனையே கூறி வருகின்றன. அரசியல் லாபத்திற்காக அரசியல் கட்சிகளும் இதனை வழி மொழிகின்றன.

இந்த பொய்யை ஆதாரமாகக் கொண்டு நெல்லி படுகொலை முதல் சமீபத்திய கோக்ரஜார் படுகொலை வரை நடத்தியுள்ளனர். இந்த வெறுப்பு பிரச்சாரம் தற்போது நாகலாந்திற்கும் வேகமாக பரவி வருகிறது. நாகலாந்தில் முஸ்லிம்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளனர். அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து வந்து வியாபாரம் செய்யும் முஸ்லிம்களும் இவர்களில் உள்ளனர். வியாபாரத்தில் இவர்கள் கொடி கட்டிப் பறப்பது பொதுவாக நாகலாந்து மக்களுக்கு பிடிப்பதில்லை.

நாகலாந்தில் ஏராளமான ஆயுத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. ‘நாகலாந்து மிகப்பெரும் ஆபத்தை சந்தித்து வருகிறது’ என்ற பிரச்சாரத்தை இந்த குழுக்கள் சில வருடங்களாக செய்து வருகின்றனர். மக்களை இன ரீதியாக பிளவுபடுத்தும் வேலைகளை இவர்கள் செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஆட்சியாளர்கள் டி.ஆர். சிலியாங் முழுமையான ஆதரவை நல்கினர். ஜூன் 2007ல் மொக்காகாசுங் மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்களை நடத்தினர். முஸ்லிம்களின் வியாபார நிறுவனங்களும் கடைகளும் குறிவைத்து தாக்கப்பட்டன. ஏறத்தாழ ஐந்தாயிரம் முஸ்லிம்கள் அம்மாவட்டத்தை விட்டும் விரட்டப்பட்டனர். இதுவே, மற்ற பகுதியில் நடந்திருந்தால் இனச்சுத்திகரிப்பு என்று பிரச்சாரம் செய்யப்பட்டிருக்கும். ஆனால், பாதிக்கப்பட்டது முஸ்லிம்கள் என்பதால் இது ‘சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினருக்கு எதிரான செயல்’ என்று சமாதானம் கூறப்பட்டது.

மார்ச் மாத ஆரம்பத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான சதித் திட்டம் மீண்டும் தீட்டப்பட்டது. மார்ச் 4ம் தேதி அன்று திமாபூர் மாவட்டத்தில் கலவர சூழல் ஏற்பட்டது. முஸ்லிம்களின் வியாபார நிறுவனங்கள் சூறையாடப்பட்டு தீ வைக்கப்பட்டன. மறு தினம் இதை விட அதிக எண்ணிக்கையில் அணி திரளுமாறு ‘நாகா ப்ளாக்’ எனப்படும் ஃபேஸ்புக் பக்கத்தில் அறிவிப்பு செய்யப்பட்டது. மார்ச் 4ம் தேதி அன்று கலவரத்தில் தாங்கள் ஈடுபட்டதை பலரும் புகைப்படம் எடுத்து அதனைப் பெருமையாக இந்தப் பக்கத்தில் பதிவிடவும் செய்தனர்.

நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து பிரதமர், பிரதமர் அலுவலகம் மற்றும் உள்துறை அமைச்சருக்கு சமூக வலைதளம் மூலம் தான் தகவல் கொடுத்ததாக அஸ்ஸாமை சேர்ந்த சமூக ஆர்வலர் நிலிம் தத்தா தெரிவித்தார். நிலைமையை ஆராய்ந்து கட்டுக்குள் கொண்டுவருமாறு மத்திய அரசு மாநில அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், மாநில அரசாங்கம் இதனை கண்டு கொள்ளவே இல்லை என்பதை மறுதின நிகழ்வுகள் உணர்த்தின.

மறுதினம் ஆயிரக்கணக்கான மக்கள் மீண்டும் திரண்டனர். திரண்டவர்களின் பார்வை மத்திய சிறைச்சாலையை நோக்கி திரும்பியது. சிறைச்சாலையை அடைந்தவர்கள் அங்கு சிறை வைக்கப்பட்டிருந்த ஷரீஃபுதீன் கான் என்பவரை அடித்து உதைத்து வெளியே இழுத்து வந்தனர். சிறைக்காவலர்கள் எதுவும் செய்யாமல் அமைதியாக இருந்தனர். கூட்டத்தில் பெண்களும் குழந்தைகளும் இருந்ததால் தாங்கள் எதுவும் செய்யவில்லை என்று பின்னர் காரணமும் கூறினர்.

நாகா பெண் ஒருவரை பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டவர்தான் இந்த ஷரீஃபுதீன் கான். இவர் வங்கதேசத்தை சேர்ந்த சட்டவிரோத குடியேறி என்ற பிரச்சாரம் வேகமாக செய்யப்பட்டது. வெறிகொண்ட அந்தக் கும்பல் ஷரீஃபுதீனை அடித்து துவைத்தது. ஒரு வங்கதேச குடியேறி எங்கள் பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டான் என்ற கோபம் அவர்களிடம் தென்பட்டது.

ஷரீஃபுதீனை நிர்வாணமாக்கியவர்கள் அவரை தெருக்களில் இழுத்துச் சென்றனர். ரத்தம் தோய்ந்த ஷரீஃபுதீனுடன் தங்களை புகைப்படம் எடுத்துக் கொண்ட இந்த மனநோயாளிகள் அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றமும் செய்தனர். ஏறத்தாழ எட்டு கிலோ மீட்டர் அவரை இழுத்துச் சென்றவர்கள் நகரின் மையப்பகுதியில் இருந்த மணிக்கூண்டில், அவரை தூக்கில் இட்டனர். ஆனால், அதற்கு முன்னரே ஷரீஃபுதீன் இறந்துவிட்டார்.

“வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர், கற்பழிப்பு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர் என்றே பெரும்பான்மை ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. சில ஊடகங்கள் குற்றம் சுமத்தப்பட்டவர் என்ற வார்த்தையை கூட பயன்படுத்தாமல் அவரை குற்றவாளியாகவே சித்தரித்தன. என்னிடம் சில ஊடக நண்பர்கள் தொடர்பு கொண்டு உண்மை நிலவரத்தை கேட்டறிந்தனர்” என்கிறார் நிலிம் தத்தா.

கற்பழிப்பு செய்தவனுக்கு இந்த தண்டனை அவசியம்தான் என்றனர் சினிமாவை பார்த்து ஞானோதயம் பெற்ற சிலர். அப்படியென்றால் அதே சிறையில் இருந்த மற்ற கற்பழிப்பு குற்றவாளிகளை அவர்கள் ஏன் கொலை செய்யவில்லை என்ற கேள்விக்கு இவர்களிடம் பதில் இல்லை.

“அடுத்த நாட்டில் இருந்து சட்டவிரோதமாக வந்தவனுக்கு இவ்வளவு திமிரா?” என்று இன்னும் சிலர் தங்கள் ஆதங்கத்தை கொட்டினர். ஷரீஃபுதீன் கான் வங்கதேசத்தை சேர்ந்தவர் கிடையாது. அவர் அஸ்ஸாம் மாநிலம் கரீம்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்தவர். அவரின் தந்தை இராணுவத்தில் பொறியாளராக பணியாற்றி மரணித்தவர். அவரின் இரு சகோதரர்களும் இராணுவத்தில் அஸ்ஸாம் ரெஜிமெண்டில் பணியாற்றி வருகின்றனர்.

சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு இராணுவத்தில் எப்படி இடம் கிடைத்தது? இந்த கேள்விக்கும் இவர்களிடம் விடை இல்லை. எப்படியோ ஒரு பொய்யை கூறி ஒரு அப்பாவியை கொலை செய்துவிட்டனர். இறந்தவரின் உடலை ஒப்படைப்பதற்கும் பல இழுத்தடிப்புகளை செய்தனர். இறுதியாக இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் ஷரீஃபுதீன் உடல் அவரின் செõந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு மார்ச் 7ம் தேதி அடக்கம் செய்யப்பட்டது.

உண்மைகள் வெளியே வந்ததை தொடர்ந்து சில பணி நீக்கங்களும் கைதுகளும் நடைபெற்றன. ஆனால், இதன் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகள் கைது செய்யப்படும் வரை இத்தகைய நிகழ்வுகள் தொடரத்தான் செய்யும். ஷரீஃபுதீன் இறந்த சில தினங்கள் கழித்து அறிக்கை வெளியிட்ட நாகலாந்து அரசு, ஷரீஃபுதீன் பாலியல் பலாத்காரம் செய்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்று கூறியது. மேலும் சிறையில் இருந்து அவரை இழுத்துச் செல்லும்போது இருந்த பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து சிறை கண்காணிப்பாளர் சூபா போம் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

நிலைமை மோசமானதை தொடர்ந்து உயர் அதிகாரிகளுக்கு தகவல்களை கொடுத்ததாகவும் கூடுதல் பாதுகாவலர்கள் மதியம் வந்ததாகவும் ஆனால், அவை போதுமானதாக இல்லை என்றும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். சிறைக் கதவுகளை உடைத்த அந்த கும்பல் அங்குள்ள கைதிகளை தப்பித்து செல்ல ஆர்வமூட்டியதாகவும் தப்பித்தவர்களில் இரு தீவிரவாதிகளும் அடங்குவர் என்றும் அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

ஷரீஃபுதீன் கானை அடையாளம் காண்பதில் அவர்களுக்கு  நேரம் எடுத்ததாகவும் பின்னர் மொபைல் ஃபோனில் அவரின் புகைப்படத்தை பெற்று அதை வைத்து அவரை அடையாளம் கண்டதாகவும் சிறை கண்காணிப்பாளர் சூபா போம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஷரீஃபுதீனை சாவகாசமாக அவர்கள் தேடும் வரை பாதுகாப்பிற்கு இருந்தவர்கள் எதுவும் செய்யவில்லை என்பது இதில் இருந்து தெரிகிறது. முஸ்லிம்களை குறிவைக்க வேண்டும், அவர்களை தாக்க வேண்டும், அவர்களின் வியாபாரங்களை நசுக்க வேண்டும் என்பதுதான் இதன் உண்மையான நோக்கம் என்பது இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது. ‘முஸ்லிம் வியாபாரிகளின் வியாபார உரிமங்களை ரத்து செய்ய வேண்டும்’ என்று சம்பவம் நடைபெற்ற மறுதினம் வைக்கப்பட்ட கோரிக்கை இதனை மேலும் உறுதிப்படுத்துகிறது.

இந்தப் பொய்ப்பிரச்சாரம் இன்னும் ஒரு உயிரை எடுப்பதற்கு முன் அரசாங்கம் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்தப் படுகொலை மற்றும் கலவரத்தின் பின்னுள்ளவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். சட்டத்தை அனைவரும் கையில் எடுத்தால் நாடு நாடாக இருக்காது என்பதை மக்களும் உணர வேண்டும். சட்டத்தை கையில் எடுத்த இவர்கள் ஒரு உயிரை அநியாயமாக எடுத்துள்ளார்கள். அந்த அப்பாவியின் உயிரை இவர்களால் திருப்பித் தர முடியுமா?

(ஏப்ரல் 2015ல் வெளியான கட்டுரை)

Comments are closed.