வெளிச்சத்திற்கு வந்த மற்றுமொரு நாடகம் !

0

11

திருந்தி வாழ வந்தவரை தீவிரவாதியாக்கிய சிறப்பு பிரிவினர்

பொய் வழக்குகளில் அப்பாவிகளை சிக்க வைத்தவர்களில் முதல் இடம் யாருக்கு? இப்படியொரு ஆய்வை நடத்தினால் அதில் டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவினர் நிச்சயம் முதல் இடத்தை பிடிப்பார்கள். இவர்களால் புனையப்பட்ட பொய் வழக்குகளின் எண்ணிக்கை நீண்டு கொண்டே செல்கிறது.

மார்ச் 20,2013 அன்று உத்தர பிரதேசத்தின் கோரக்பூர் ரயில்நிலையம் அருகில் மிகப்பெரும் தீவிரவாதிகளுள் ஒருவரான லியாகத் ஷா என்பவரை கைது செய்ததாக சிறப்பு பிரிவு பரபரப்பு செய்தி வெளியிட்டது. நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவியவர் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்களுடன் இணைந்து தீவிரவாத செயல்களில் ஈடுபட திட்டமிட்டதாக கூறினர். தொடர்ந்து இவர்களின் வழக்கமான திரைக்கதை அரங்கேறியது.

தங்களிடம் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தில் லியாகத், பாகிஸ்தானில் இருந்து தன்னை இயக்குபவர்களை தொடர்பு கொள்ள இருந்ததாக தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் சஞ்சய் தத்தின் மொபைலில் இருந்து பாகிஸ்தானிற்கு அவரைத் தொடர்பு கொள்ள வைத்தனர். மறுமுனையில் பேசியவர் டெல்லி ஜாமிஆ மஸ்ஜித் பகுதியில் உள்ள ஹாஜி அரஃபாத் கெஸ்ட் ஹவுசின் அறை எண் 304ற்கு செல்லுமாறு கூறினாராம்.

லியாகத் ஷாவை காவல்நிலையத்திற்கு அனுப்பி விட்டு சிறப்பு படை சம்பந்தப்பட்ட கெஸ்ட் ஹவுசிற்கு சென்றது. அங்கு ஏராளமான ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் கைப்பற்றினர். ஒரு மிகப்பெரும் தீவிரவாதியை கைது செய்து தேசத்தை பாதுகாத்ததாக சிறப்பு பிரிவு பெருமைப்பட்டுக் கொண்டது. சிறப்பு பிரிவின் டி.சி.பி. சஞ்சீவ் யாதவ், ஏ.சி.பி. மணீஷி சந்திரா, இன்ஸ்பெக்டர்கள் சஞ்சய் தத், ராகுல் குமார் மற்றும் சில கான்ஸ்டபிள்கள் பாராட்டுகளை பெற்றனர்.

ஆனால், இந்த நாடகம் அதிக நாட்கள் ஓடவில்லை. 1990களின் மத்தியில் பாகிஸ்தான் சென்ற லியாகத் ஷா, இந்திய அரசின் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் இந்தியா திரும்பிய போது சிறப்பு பிரிவினர் அவரை கைது செய்ததாக அவரின் மனைவி கூறினார். அப்போதைய ஜம்மு கஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ்வும் இதனை உறுதி செய்தார். இதனைத்தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை தேசிய புலனாய்வு குழுமமான என்.ஐ.ஏ.விற்கு மார்ச் 29, 2013 அன்று மாற்றப்பட்டது.

வழக்கை விசாரித்த என்.ஐ.ஏ. உண்மைகளை வெளியே கொண்டு வந்தது. திருந்து வாழ விரும்பிய லியாகத் ஷா தனது குடும்பத்தினருடன் நேபாளம் வழியாக இந்தியா வந்துள்ளார். (இவர் பாகிஸ்தானிலும் திருமணம் செய்துள்ளார்). மொத்தம் 12 நபர்கள் இந்தியா வந்துள்ளனர். அவர்களில் ஷாவை மட்டும் தனியாக பிரித்த சிறப்பு பிரிவினர் பின்னர் அவரை கைது செய்து நாடகத்தை நடத்தியுள்ளனர். டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு வழக்கை போலியாக ஜோடித்துள்ளதாக என்.ஐ.ஏ. குற்றம்சாட்டியது.

வழக்கு விசாரணையில் மற்றுமொரு முக்கியமான உண்மையையும் என்.ஐ.ஏ. கண்டுபிடித்தது. லியாகத் ஷாவை சிக்க வைப்பதில் சிறப்பு பிரிவிற்கு உதவியாக இருந்தவர் சபீர் கான் பதான். இவர் ஒரு இன்ஃபார்மர். கெஸ்ட்

ஹவுசில் ஆயுதங்களை வைத்ததும் இவர்தான் என்றும் அங்கு அன்வர் அகமது என்ற போலியான பெயரில் இவர் தங்கியிருந்ததையும் கண்டுபிடித்தனர். குறிப்பாக, காவல்துறையினருடன் இவர் தொலைபேசியில் அதிக முறை தொடர்பு கொண்டுள்ளார். விசாரணையின் பிடி இறுகியதை தொடர்ந்து இவர் தலைமறைவாகியுள்ளார்.

பதானை தேடப்படும் குற்றவாளியாக என்.ஐ.ஏ. அறிவித்துள்ளது. இன்ஸ்பெக்டர்கள் சஞ்சய் தத், ராகுல் குமார், ஹெட் கான்ஸ்டபிள்கள் முகம்மது இக்பால் தார், மணீஷ், இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணன் குமார் மற்றும் குல்வீர் சிங் ஆகியோரை என்.ஐ.ஏ. தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

லியாகத் ஷாவை வழக்கில் இருந்து விடுவிக்குமாறும் இன்ஃபார்மர் சபீர் கான் பதான் மீது வழக்கு பதியுமாறும் என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்ற நீதிபதியிடம் கூறியுள்ளது. பதான் கைது செய்யப்பட்டால் சிறப்பு பிரிவின் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

என்.ஐ.ஏ. தனது குற்றப்பத்திரிகையில் சிறப்பு பிரிவு அதிகாரிகளை குற்றம்சாட்டியதை தொடர்ந்து பிப்ரவரி 3 அன்று அதனை எதிர்த்து சிறப்பு பிரிவு மனுதாக்கல் செய்தது. ஆனால், உடனே அந்த மனுவை திரும்ப பெற்றுக்கொண்டது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் குமார் தோவலின் ஆலோசனையின் படி இது செய்யப்பட்டதாக தெரிகிறது.

அப்பாவிகள் மீது டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவினர் பொய் வழக்குகளை ஜோடித்து வருவது தொடர்ந்து நிரூபிக்கப்பட்டாலும் அவர்கள் மீதான முறையான நடவடிக்கைகள் இல்லாததால் இவை தொடர்கதையாகத்தான் உள்ளன. இந்த வழக்கிலாவது இவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்ற கேள்வி தற்போது பதிலை எதிர்பார்த்து நிற்கிறது.

ஆனால், இந்த வழக்கின் நீதிபதியான மாவட்ட நீதிபதி அமர்நாத்தின் சமீபத்திய போக்கு இந்த வழக்கு விசாரணையிலும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை தனது இணையதளத்தில் இருந்து நீக்குமாறு ஜனவரி 31 அன்று என்.ஐ.ஏ. விற்கு இவர் கட்டளை பிறப்பித்தார். நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமான தகவல்கள் அதில் இருப்பதாக காரணம் கூறினார்.

இதனைத்தொடர்ந்து குற்றப்பத்திரிகையை தனது இணையதளத்தில் இருந்து என்.ஐ.ஏ.

நீக்கியது. வழக்கின் உண்மை நிலையை மக்களிடமிருந்து மறைக்கும் போக்காக இது இருக்குமோ என்ற சந்தேகத்தை நீதிபதியின் செயல்பாடுகள் ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற வழக்குகளின் தகவல்களை மக்களிடமிருந்து மறைப்பது விசாரணை ஏஜென்சிகள் குறித்த சந்தேகத்தை அதிகரிக்கத்தான் செய்யும். அத்துடன் நிஜத் தீவிரவாதிகளுக்கு இது உத்வேகத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Comments are closed.