ஷஹித் ஆஸ்மி சுட்டுக் கொல்லப்பட்ட 7 வருடங்கள் ஆகியும் தொடங்கப்படாத விசாரணை

0

2010 பிப்ரவரி 11 ஆம் தேதி குர்லா பகுதியில் உள்ள டாக்சிமேன் காலனியில் வைத்து ஷஹித் ஆஸ்மி சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

நீதியின் போராளியாக வாழ்ந்த ஆஸ்மியின் வழக்கறிஞர் பணி நோக்கிய பயணம் மிகவும் கடினமானது என்று அவரது சகோதரர் காலித் தெரிவித்துள்ளார். மும்பை தாக்குதல் வழக்கில் எதிர்தரப்பு வழக்கறிஞராக பணியாற்றியவர் ஷஹித் ஆஸ்மி. தனது சகோதரர் குறித்து காலித் கூறுகையில், “எனது சகோதரர் மிகவும் கடினமாக உழைப்பவர், மனவலிமை மிக்கவர். என்னால் அவரை போன்று இருக்க இயலாவிட்டாலும் என்னிடம் உதவி கேட்டு யாரேனும் வந்தால் நான் அவர்களுக்கு உதவவே முயற்சிக்கிறேன்.” என்று கூறியுள்ளார். மேலும் ஷஹித் ஆஸ்மியின் மரணம் அவரது குடும்பத்தை இன்னும் நெருக்கமாக ஆக்கியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். “அவர் தான் எங்கள் குடும்பத்தின் முதுகெலும்பு. அவரது இழப்பை ஈடு செய்ய நாங்கள் இன்னும் முயற்சித்து வருகிறோம். நாங்கள் சமாளித்து வருகிறோம். வாரம் ஒருமுறையாவது நாங்கள் கூடி ஒரு குடும்பமாக விஷயங்களை பகிர்ந்து வருகிறோம்.” என்று அவர் கூறியுள்ளார்.

தனது சகோதரின் கொலை வழக்கு மகாராஷ்டிரா ஜாமியத் உலமாவால் கண்டுகொள்ளப்படாமல் இருப்பது குறித்தும் அவர் கவலை தெரிவித்துள்ளார். இது குறித்து கூறிய அவர்,” அந்த கொலை நடந்த சமயத்தில், மகாராஷ்டிரா ஜாமியத் உலமா எங்களிடம் இந்த கொலைக்கு நீதி கிடைக்க அவர்கள் ஆவன செய்வதாக உறுதியளித்தனர். நானும் அவர்களுடன் இணைந்து பிற வழக்குகளிலும் பணியாற்றினேன். அவர்கள் உறுதியளித்ததின் பேரிலேயே நான் எனது சகோதரரின் கொலை வழக்கில் கவனம் செலுத்தாமல் இருந்தேன். ஆனால் இந்த வழக்கு புறக்கணிக்கப்பட்டு வந்த போது ஜமியத் உலமா எந்த ஒரு மனுவும் அளிக்க முன்வரவில்லை. அப்போது தான் நான் அங்கிருந்து விலக முடிவு செய்தேன்.” என்று தனது வருத்தத்தை அவர் தெரிவித்துள்ளார்.

ஷஹித் ஆஸ்மி அவரது அலுவலகத்தில் வைத்து கொலை செய்யப்பட்டு  ஏழு வருடங்கள் ஆகியும் அவரது கொலை வழக்கு இன்னும் விசாரிக்கப்படாமல் உள்ளது. கடந்த மாதம் இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான தேவேந்திர ஜக்தாப்பின் பிணை மனுவை செஷன்ஸ் நீதிமன்றம் நிராகரித்தது. இந்த வழக்கின் மற்றொரு குற்றவாளி ஹஸ்முக் சோலங்கியும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஆனால் இவ்வழக்கில் இரண்டு குற்றவாளிகளுக்கு பிணை வழங்கப்பட்டு மற்றும் ஒருவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என்று ஷஹிதின் சகோதரர் தெரிவிக்கின்றார்.

கொலை நடந்து ஏழு ஆண்டுகள் ஆகிய நிலையில் வழக்கு தாமதிக்கப்படுகிறது என்ற காரணத்தில் தங்களுக்கு பிணை வழங்க வேண்டும் என்று குற்றவாளிகள் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். மேலும் தங்களின் பிணை மனு மீதான விசாரணை நடைபெறும் வரை இவ்வழக்கின் விசாரணையும் நடைபெறக்கூடாது என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் இவர்களின் இந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளதாகவும் இதனை கொண்டு தாங்கள் தற்போதைக்கு அமைதி கொண்டுள்ளதாகவும் காலித் தெரிவித்துள்ளார்.

Comments are closed.