ஷேக் அஹமது யாசின் – எதிர்ப்பு போராட்டத்தின் முன்னோடி

0
 – ஷஹீத்
22 மார்ச் 2004 வருடம் மிகச்சரியாக இதே நாள், அதிகாலை ஃபஜர் தொழுகைக்காக சென்று கொண்டிருந்த கண்பார்வை மங்கிய , நடக்க இயலாத உடலின் ஒரு பகுதி செயலிழந்து போன 67 வயதான ஒரு முதியவரை கொலை செய்வதற்கு உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த ராணுவ விமானமான F-16 அணி அணியாக அந்த வீதியில் சரமாரியாக குண்டுகளை வீசியது. அவர் தினமும் அதே வழியிலேயே தன்னுடைய சக்கர நாற்காலியில் தொழுகைக்கு செல்வார். இப்படி ஒரு நாள் கொல்லப்படுவோம் என்று அவருக்கு எப்பொழுதும் நம்பிக்கை இருந்தது. தன்னுடைய மக்களிடம் அதை பலமுறை ஆவலாக பகிர்ந்து கொள்வார். இறுதியாக அப்படியே கொலை செய்யப்பட்டு ஷஹீதாக்கப்பட்டார்.
ஹமாஸ் இயக்கத்தின் நிறுவன தலைவர்களில் ஒருவரான ஷஹீத் ஷேக் அஹமது யாசின் இஸ்ரேல் என்னும் பயங்கரவாத தேசத்தால் படுகொலை செய்யப்பட்டதாக ஹமாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆக்கிரமிக்கப்பட்ட ஃபலஸ்தீனத்தின் பெரும் ஜனத்தொகை மக்கள் அவருடைய இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். மற்றெந்த தலைவர்களுக்கும் இல்லாத இடத்தை அவர்கள் ஷேக் அஹமது யாசினுக்கு தங்கள் உள்ளங்களில் வழங்கியிருந்தனர்.
கூடியிருந்த லட்சக்கணக்கான மக்கள் முன்பாகவும் , உலக மீடியாக்களின் முன்பாகவும் ஹமாசின் அடுத்த தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட அப்துல் அஜீஸ் ரன்திஸி இவ்வாறு அறிவித்தார் “நீங்கள் ஒரு ஷேக் அஹமது யாசினை கொலை செய்திருக்கலாம். ஆனால் அதிலிருந்து ஓராயிரம் யாசின்கள் முளைத்து வருவார்கள்”. ஆம் அது நடக்கவும் செய்தது. பின்னர் அப்துல் அஜீஸ் ரந்திஸியும் இஸ்ரேலிய தாக்குதலால் கொல்லப்பட்டார்.
ஷேக் அஹமது யாசினை பற்றியும் அவருடைய இயக்கமான ஹமாசின் தியாகங்களை பற்றியும் சொல்வதற்கு எத்தனையோ வரலாறுகளும், சம்பவங்களும் இருக்கின்றன.
தன்னால் சுயமாக இயங்க முடியாத ஒரு முதியவரை கண்டு உலகின் மிகப்பெரிய ஜாம்பவான் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இஸ்ரேல் அஞ்சி நடுங்க வேண்டிய அவசியம் என்ன? ஷேக் யாசினின் ஆன்மீக பலம், அவரின் தெளிவான பார்வை மற்றும் சிந்தனை, எத்தகைய அடக்குமுறையிலும் எதிரியிடம் அடிபணிந்து செல்லாத பண்பு, பல்லாண்டுகளை சிறையில் கழித்த பின்னரும் தகர்க்க முடியாத அவரின் மனஉறுதி, ஃபலஸ்தீனியர்களை கிளர்ந்தெழச் செய்த அவரின் கலப்படமில்லாத பேச்சு…என எத்தனையோ காரணங்கள் இருக்கலாம்.
ஆனால், இவை அனைத்தையும் விட ஒரு மிகப்பெரிய ஒரு பாடத்தை ஷேக் யாசினின் வாழ்க்கை நமக்கு கற்றுத் தருகிறது. சக்கர நாற்காலியுடன் கட்டுண்ட ஒருவருக்கு ஷஹாதத் என்ற உயர் பதவி கிடைக்குமா என்று கேட்டால் இல்லை என்றே நம்மில் பலரும் கூறுவோம். ஆனால் தூய்மையான உள்ளத்துடன் உறுதியாக பயணித்தால் அதுவும் சாத்தியம்தான் என்பதை ஷேக் யாசினின் வாழ்வும் மரணமும் நமக்கு உணர்த்துகின்றன.

Comments are closed.