ஸ்மார்ட்போன்களுடன் ஆதார் கணக்கை இணைக்க அரசு திட்டம்

0

இந்திய குடிமக்களின் ஆதார் கணக்கை அவர்களின் ஸ்மார்ட்போன்களுடன் இணைப்பது குறித்து இந்திய அரசு முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

ஸ்மார்ட்போன்களில் ஆதார் கணக்கை இணைக்கு பிரத்யேக சிப்களை ஸ்மார்ட்போன்களில் பொருத்துவது குறித்து ஆப்பிள், சாம்சங், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் ஆனால் அவர்களின் சர்வதேச குழுக்களுடன் இது குறித்து ஆலோசிக்க வேண்டியுள்ளது என்று கேட்டுகொண்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இப்போது சந்தையில் வெளியாகும் ஸ்மார்ட்போன்கள் பலவற்றில் கைவிரல் ரேகை சென்சார்கள் பொருத்தப்பட்டே வருகின்றன. இது ஸ்மார்ட்போன்களுடன் ஆதார் இணைப்பை எளிதாக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் கண் விழித்திரை சென்சார்கள் பொருத்தப்பட்ட டேப்லட்களை சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆதார் இணைப்பு உறுதியானால் இது மொபைல் போன்களிலும் அறிமுகப்படுத்தப்படும்.

ஆதார் கணக்கை ஸ்மார்ட்போன்களுடன் இணைப்பதால் பெறப்படும் நன்மைகள் குறித்து தற்போது எந்த ஒரு தகவலும் இல்லை. மேலும் இந்த இணைப்பு மூலம் ஸ்மார்ட்போன்களில் உள்ள எந்தெந்த தகவல்கள் ஆதார் கணக்குடன் பங்கிடப்படும் என்ற தகவலும் இல்லை.

இந்தியாவை பொறுத்தவரை ஸ்மார்ட்போன்கள் ஏழைகளின் கணினி என்றாகிவிட்டது. பல இந்தியர்களின் இணையதள வாசல்களாக ஸ்மார்ட்போன்கள் விளங்குகின்றன. இந்நிலையில் ஆதார் கணக்குடன் ஸ்மார்ட்போன்களின் தகவல்கள் பகிரப்படுமாயின் அந்த தகவல்களின் பாதுகாப்பு குறித்த அச்சங்களும் எழுகின்றது. தனி மனித அந்தரங்கங்கள் குறித்த தெளிவான பார்வை மக்களிடம் ஏற்பாடாத இந்நேரம் இது போன்ற தொழில்நுட்பங்கள் மக்களுக்கு வரமா சாபமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Comments are closed.