ஹஜ் 2015: உலகை உலுக்கிய இரு விபத்துகள்

0

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளுள் ஒன்றான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த இலட்சக்கணக்கான மக்கள் சவூதி அரேபியாவின் மக்காவில் குழுமுவது வழக்கம். இவ்வருடம் ஹஜ் கிரியைகளுக்கு முன்னர் மற்றும் ஹஜ் கிரியைகளின் போது ஏற்பட்ட இரண்டு விபத்துகள் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. பத்து ஆண்டுகளாக எவ்வித விபத்துகளும் இல்லாமல் இருந்த நிலையில் இவ்வருடம் ஏற்பட்ட இரு விபத்துகளில் முஸ்லிம் உலகம் குறிப்பாக அதிர்ச்சி அடைந்தது.

ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக உலகெங்கிலிருந்தும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்துகொண்டிருந்த சமயத்தில் மஸ்ஜிதுல் ஹரமில் பெரும் கிரேன் விபத்து ஏற்பட்டது.

புனித பள்ளியின் விரிவாக்க பணிகள் நடைபெறுவதை தொடர்ந்து பள்ளியை சுற்றி 15 பெரிய கிரேன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் உலக அளவில் மிகப்பெரிய கிரேனான ஜெர்மன் தயாரிப்பில் உருவாக்கப்பட்ட லைபெர் (Liebherr Model LR 11300) பயன்படுத்தப்பட்டு வந்தது. பீரங்கியை போன்று ஊர்ந்து செல்லும் அமைப்பு கொண்ட கிரேன் இது. இந்த கிரேன் 1200டன் எடை வரை தூக்கும் சக்தி கொண்டது. 65 மீட்டர் உயரமும் 130 மீட்டர் பக்கவாட்டில் செல்லும் தன்மை கொண்டது. இந்த கிரேன் நான்கு பவுண்டேசனுடன் இணைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு பவுண்டேசனும் 1000டன் எடை கொண்டது. சம்பவத்தன்று இந்த மிகப்பெரிய கிரேன்தான் விபத்திற்குள்ளானது.

மஸ்ஜிதுல் ஹரம்

11.09.2015 வெள்ளிக்கிழமை

நேரம் மாலை 5:30மணி

ஏறக்குறைய எட்டு இலட்சம் மக்கள் அஸர் தொழுகையை முடித்திருந்த நேரம். மணற்புயலும் இடியுடன் கூடிய மழையும் அதிவேக காற்றும் வீசத் தொடங்கியது. விரிவாக்கப்பணியில் ஈடுபட்டிருந்த அந்த மிகப்பெரிய கிரேன் அதிவேக புயல் காற்றிற்கு (மணிக்கு 65 முதல் 80 கிலோ மீட்டர் வேகம்) ஈடு கொடுக்க முடியாமல் விழத்தொடங்கியது.

கட்டுப்பாடின்றி விழுந்த அந்த ராட்சத கிரேன் அல்ஸலாம் வாயிலுக்கு அருகில் ஸபா மர்வா மேல்தளத்தின் கான்கிரீட் கூரையை பிய்த்துக் கொண்டு இறங்கியது. கிரேனின் தலைப்பகுதி கஃபாவை வலம் வரும் பகுதி (மத்தாப்)க்கு அருகில் விழுந்து மிகப் பெரும் உயிர்சேதத்தை ஏற்படுத்தியது. கஃபாவைச் சுற்றி வலம் வந்தவர்கள், அதற்கருகிலிருந்து பிரார்த்தனைகளில் ஈடுபட்டிருந்தவர்கள், ஸபா மர்வாவில் தொங்கோட்டம் ஓடிக்கொண்டிருந்தவர்கள் என பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.

இந்த பெரும் விபத்தில் 111 பேர் மரணமடைந்தனர். இதில் 11 இந்தியர்கள் அடங்குவர். மேலும் 19 இந்தியர்கள் உட்பட 331 பேர் காயமடைந்தனர்.

சம்பவம் நடந்த உடன் சவூதி பாதுகாப்பு அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள், அவசர மருத்துவ குழுக்கள் அனைவரும் போர்க்கால அடிப்படையில் மீட்புப்பணிகளிலும் முதலுதவி செய்வதிலும் ஈடுபட்டனர். ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஹரமிற்குள் வரவழைக்கப்பட்டு உடனடி சிகிச்சைக்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு காயமடைந்தவர்கள் கொண்டு செல்லப்பட்டனர்.

இந்திய தூதரக அதிகாரி பி.எஸ். முபாரக் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இந்திய ஹாஜிகளுக்கு தேவையான உதவிகள் உடனடியாக கிடைக்க ஆவன செய்தார்.

மக்கா ஆளுநர் இளவரசர் காலித் அல் பைசல் மீட்புப்பணிகளை பார்வையிட்டு காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

மஸ்ஜித் ஹரமின் தலைமை இமாம் அப்துர் ரஹ்மான் அல் சுதைஸ் அவர்கள் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறி அவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடையவும் பிரார்தித்தார்.

வெளிநாட்டு சுற்றுப்பயணத்திலிருந்த மன்னர் சல்மான்  நாடு திரும்பியதும் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவரும் காயமடைந்த ஹாஜிகளை நேரில் சென்று ஆறுதல் கூறினார். இந்த விபத்து குறித்து விசாரித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

முதற்கட்டமாக ஹரம் விரிவாக்கப்பணியில் ஈடுபட்டிருந்த சவூதி பின்லாடன் குழுமத்திற்கு முழுமையான விசாரனை முடியும்வரை தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் குழுமத்தின் மேல்மட்ட பொறுப்பாளர்கள் வெளிநாடு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இக்குழுமத்திற்கு புதிய அரசு ஒப்பந்தங்கள் அளிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இத்துயர சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கும், படுகாயமடைந்து ஊனமுற்றவர்களுக்கும் தலா 1 மில்லியன் ரியால் (இந்திய மதிப்பு 1 கோடி 75 இலட்சம் ரூபாய்) நிவாரணத் தொகையும், சிறு காயமடைந்தவர்களுக்கு தலா 5 இலட்சம் ரியால் (இந்திய மதிப்பு 87 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்) நிவாரணத் தொகையும் வழங்கப்படும் என மன்னர் சல்மான் அறிவித்தார்.

மேலும் படுகாயமடைந்த ஹாஜிகள் இவ்வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்ற இயலவில்லையெனில் அடுத்த வருடம் மன்னருடைய செலவில் ஹஜ் கடமையை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்றும் இறந்தவர்களின் குடும்பத்திலிருந்து இருவர் மன்னருடைய செலவில் அடுத்த வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது

விபத்துக்கான காரணங்கள் குறித்து மன்னர் அப்துல் அஜீஸ் பல்கலைக்கழக பேராசிரியர், சுற்றுச் சூழல் ஆராய்ச்சி மைய மேலாளர் மன்சூர் அல் மசூரி தெரிவிக்கையில், மதிய வேளையில் 40 டிகிரி செல்சியசில் இருந்த வெப்பநிலை மாலை வேளையில் திடீரென 25 டிகிரி செல்சியசுக்கு குறைந்ததால் காற்றழுத்த தாழ்வுமண்டலம் உருவானது. மேலும் அத்துடன் அதிவேக காற்றும் மின்னலும் தாக்கியது கிரேன் விழக் காரணமாக இருக்கலாம் என்று கூறினார்.

இந்த விபத்து ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து மக்கள் மெல்ல விலகி, ஹஜ் நாட்களை அடைந்தனர். ஹஜ்ஜின் முக்கிய தினமான அரஃபா தினத்தை செப்டம்பர் 23 (துல்ஹஜ் 9) அன்று அரஃபா பெருவெளியில் ஹாஜிகள் கழித்தனர்.

மறுதினம், செப்டம்பர் 24 காலையில் இருந்து ஹஜ்ஜின் மற்றொரு கிரியையான ஷைத்தானுக்கு கல் எறிவதற்காக ஹாஜிகள் சாரை சாரையாக ஜம்ராவை நோக்கி சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட நெரிசலில் ஏராளமான ஹாஜிகள் சிக்கிக் கொண்டனர்.

அன்றைய தினம் வெப்பத்தின் தாக்கமும் அதிகமாக இருந்ததால் வயதான ஹாஜிகள் மயக்கமுற்றனர். எதிர்பாராத இந்த நெரிசலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். பலர் காயமடைந்தனர். காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்கிறது.

மீட்பு பணியில் சவூதி படையினரும் இந்தியா ஃபிரடர்னிட்டி ஃபோரம் (ஐஊஊ) உள்ளிட்ட அமைப்பினரும் ஈடுபட்டனர்.

நெரிசலில் சிக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இறந்ததாக சவூதி அரசாங்கம் அறிவித்தது. தமிழ்நாட்டை சேர்ந்த மூவர் உட்பட இந்தியாவை சேர்ந்த 45 பேர் இறந்துள்ளனர். மினாவின் வீதிகளில் வைக்கப்பட்டிருந்த சடலங்கள் காண்பவர்களின் கண்களை குளமாக்கின.

நெரிசலுக்கான பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. நெரிசலுக்கான காரணத்தை அறிய சவூதி அரசாங்கம் கமிட்டி ஒன்றை அமைத்துள்ளது. இதுபோன்ற விபத்துகள் இனி ஏற்படக்கூடாது என்பதே அனைவரின் பிரார்த்தனையாக உள்ளது.

 நமது நிருபர்

இதுவரை நடந்த அசம்பாவிதங்கள்

1990ல் ஹஜ்ஜின் போது மக்காவிலிருந்து மினாவிற்கு செல்லும் குகை நடைபாதையில் ஏற்பட்ட மூச்சு தினறல் மற்றும் கூட்ட நெரிசலில் 1426 ஹாஜிகள் மரணமடைந்தனர்.

1994, 1998, 2001, 2003, 2004 மற்றும் 2006 ஆகிய வருடங்களில் ஷைத்தானுக்கு கல்லெறியும் (ஜம்ராத்) பகுதியில் கூட்ட நெரிசலில் சிக்கி நூற்றுக்கணக்கான ஹாஜிகள் மரணமடைந்தனர்.

மினா நெரிசலில் IFF  தொண்டர் மரணம்!

ஹாஜிகளுக்கு சேவை செய்வதற்காக ஒவ்வொரு வருடமும் இந்தியா ஃபிரடர்னிட்டி ஃபோரம் தொண்டர்களை அனுப்பி வருகிறது. இவ்வருடம் ஏறத்தாழ ஆயிரம் தொண்டர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். செப்டம்பர் 24 அன்று மினாவில் ஏற்பட்ட நெரிசலில் IFF உறுப்பினர் நியாசுல் ஹக் மரணமடைந்தார். ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இவர் சவூதியில் பொறியாளராக பணியாற்றினார்.

(அக்டோபர் 2015 இதழில் வெளியான கட்டுரை)

Comments are closed.