ஹாதியாவும் லவ் ஜிஹாத் பூதமும்

0

சிவராஜ் ஹோமியோபதி மருத்துவ கல்லூரியின் மாணவியான அகிலா தனது சக மாணவியான ஜசீனா மூலமாக இஸ்லாத்தை குறித்து தெரிந்துகொள்கிறார். இந்துமத வம்சாவழியை கொண்ட அவர் இஸ்லாமிய மார்க்கத்தால் ஈர்கப்படவே இஸ்லாமியராக மாறி தனக்கு ஹாதியா என்று பெயர் சூட்டிக் கொண்டார். தனது இந்த முடிவை தீவிர இந்துக்களான தன்னுடைய குடும்பம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று ஹாதியாவிற்கு நன்றாகவே தெரிந்திருந்தது. அதனால் தனது மதமாற்றம் குறித்த தகவலை தன்னுடைய குடும்பத்தினரிடம் தெரிவித்த ஹாதியா இனிமேல் தான் வீட்டிற்கு வரப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ஹாதியாவின் இந்த முடிவை அடுத்து, அகிலா அவரது விருப்பத்திற்கு மாறாக இஸ்லாமிய மதத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று கூறி அவரின் தந்தை ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். இங்கிருந்து தான் ஹாதியாவின் வாழ்க்கையில் சிக்கல் ஆரம்பமாகின.

இந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், ஹாதியா ஒரு மேஜர் என்பதாலும் நீதிமன்றத்தில் தன்னுடைய விருப்பத்தின் பேரிலேயே மதம் மாறியதாக அவர் தெரிவித்ததால் இந்த வழக்கை தள்ளுபடி செய்து அவரை கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள மார்கஸுல் ஹிதாய சத்தியசாரணி அறக்கட்டளையின் விடுதியில் தங்க அனுமதித்தது.

தனது மகள் அவரது சொந்த விருப்பத்தின் பேரிலேயே மதம் மாறியுள்ளார் என்பதை அறிந்தும் அதனை ஜீரணிக்க முடியாத ஹாதியாவின் தந்தை மற்றொரு ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த முறை தனது மகள் அகிலா சைனபா என்ற பெண்ணால் தீவிரவாதியாக மாற்றப்பட்டுள்ளார் என்றும் அந்தப் பெண்ணிற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் மற்றும் இன்ன பிற தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு உள்ளது என்றும் கூறியிருந்தார். அவரின் இந்த கூற்றுக்கு ஆதாரம் எதுவும் இல்லை என்று  நீதிமன்றம் கூறியது.

இந்த விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்த வேலையில் ஹாதியா திருமண வலைத்தளம் ஒன்றில் மணமகன் தேவை என்று விளம்பரம் செய்திருந்தார். இதில் அவருக்கு கிடைத்த 50க்கும் மேற்ப்பட்ட பதில்களில் இருந்து ஷஃபின் ஜின்னா என்ற ஒருவரின் தொடர்பு கிடைத்து அவரின் குடும்பத்தினரை சந்தித்த பின்னர் அவரை மணக்க முடிவு செய்தார் ஹாதியா. அதனடிப்படையில் 2016 டிசம்பர் 19 ஆம் தேதி அவர்களின் திருமணமும் நடைபெற்றது.

இது நாள் வரையில் ஹாதியா ஒரு மேஜர் என்றும் அவர் தனது சுய விருப்பத்தில் தான் இஸ்லாமிய மதத்திற்கு மாறினார் என்றும் கூறிவந்த கேரள உயர்நீதிமன்றம் ஹாதியாவின் திருமணத்திற்கு பிறகு ஏனோ தனது நிலையை மாற்றிக்கொண்டது. ஹாதியாவை திருமணம் செய்து கொண்டவர் SDPI கட்சியின் தொண்டர் என்பதால் இந்த நிலை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு வரை ஹாதியாவின் தந்தை கூறிய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் எதுவும் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் தற்போது முன்பு போலவே எந்த ஒரு ஆதாரம் இல்லாத நிலையில் அதே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

பின்னர் 2017 மே மாதம் 24 ஆம் தேதி ஹாதியா ஷஃபின் இருவருக்கும் இடையேயான திருமணத்தை நீதிமன்றம் ரத்து செய்தது. இதில் ஹாதியாவின் கணவரான ஷஃபினின் கருத்து எதவும் கேட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஹாதியாவை அகிலா என்று குறிப்பிட்ட நீதிமன்றம் அவரை அவரது விருப்பத்திற்கு மாறாக அவரது பெற்றோருடன் வாழுமாறு கூறி அனுப்பியது.

கேரள உயர் நீதிமன்றத்தின் இந்த முடிவை எதிர்த்து ஹாதியாவின் கணவர் ஷஃபின் உச்சநீதிமன்றத்தின் உதவியை நாடினார். அதில் ஒரு மேஜரான பெண் தனது சுய விருப்பத்துடன் செய்துகொண்ட திருமணத்தை கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார்.

நாட்டின் குடிமகானான ஒருவர் தன் மீது எந்தவித குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படாத நிலையில் நீதிமன்றம் தானே ஒரு முடிவு செய்து தன்னிடம் இருந்து பிரித்த தனது மனைவியை மீட்டுத் தரும்படி கோரினார். கேரள உயர்நீதிமன்றம் தங்களது திருமணத்தை லவ் ஜிஹாத் என்று குறிப்பிட்டுள்ளது என்றும் ஆனால் ஹாதியாவோ தனது சொந்த விருப்பத்தின் படியே மதம் மாறினார் என்றும் பின்னர் திருமண இணையதள பக்கத்தில் இருந்து தன்னை தேர்வு செய்து திருமணம் செய்துகொண்டார் எனவும் தனது மனுவில் குறிப்பிட்டார் ஷஃபின். இன்னும், நீதிமன்றத்தின் இந்த முடிவு இந்திய அரசியல் சாசனப்பிரிவு 21 மற்றும் 25 வழங்கிய வயதிற்கு வந்த ஒருவர் தனது மதத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை மற்றும் தனது வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் உரிமை ஆகியவற்றை மீறியுள்ளது. என்றும் தனது மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கில் மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல் மற்றும் இந்திரா ஜெயசிங் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் ஹாதியாவை அழைத்து இவ்வழக்கு தொடர்பாக அவரின் கருத்தை கேட்குமாறு வேண்டினர். ஆனால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கெஹர் ஹாதியாவை சிறுமி என்று கூறி சமீபத்தில் பருவ வயதுடையவர்களை தற்கொலைக்குத் தூண்டும் BLUE WHALE விளையாட்டுடன் இந்த வழக்கை ஒப்பீடு செய்துள்ளார்.

25 வயதை உடைய தகுதிவாய்ந்த ஒரு மருத்துவர் தன்னுடைய விருப்பப்படி தனது கணவரை தேர்ந்தெடுத்துள்ள நிலையில் அவரது கணவர் மீது ஆதாரமற்ற தீவிரவாத குற்றம் சுமத்தி அவர்களின் திருமணத்தை எவ்வாறு ரத்து செய்ய இயலும் என்ற கேள்வி எழுந்தது. நீதிமன்றத்தின் இந்த கருத்து உண்மை எனில் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்காக விசாரிக்கப்படலாமே அல்லாது அவர்கள் திருமண பந்தத்தை ரத்து செய்து மீண்டும் அவரை அவரது பெற்றோரின் மதத்திற்கு திரும்பும்படி வற்புறுத்துவது எவ்விதத்திலும் சரியாகாது.

இந்நிலையில் இவ்வழக்கில் ஹாதியாவின் கருத்தை கேட்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது, ஆனால் அது லவ் ஜிஹாத் குறித்து தேசிய புலனாய்வுத்துறை அறிக்கை தாக்கல் செய்த பின் தான் என்று கூறியுள்ளது. மேலும் இந்த அறிக்கை ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் மேற்பார்வையிடுவார் என்று கூறியுள்ளது.

இந்நிலையில் கேரளா காவல்துறையோ தங்களிடம் இதுவரை லவ் ஜிஹாத் குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை என்று கூறியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த கேரள DGP லோக்நாத் பெஹெரா, கேரளாவில் லவ் ஜிஹாத் உள்ளது என்று தான் கருத்து கூறியதாக பத்திரிகையில் வெளியான செய்திகளுக்கு அவர் மறுப்புத் தெரிவித்துள்ளார். ஆயினும் இது போன்ற குற்றச்சாட்டுகளின் மேல் காவல்துறை கண்காணிப்புடன் இருந்து வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். லவ் ஜிஹாத் குறித்து உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ள வேலையில் லவ் ஜிஹாத் என்ற ஒன்று உள்ளதா இல்லை என்பதை கண்டறியும் கடமை தங்களுக்குள்ளது என்று அவர் கூறியுள்ளார். ஆனால் இதுவரை லவ் ஜிஹாத் என்று கூறப்படும் ஒன்று கேரளாவில் இருப்பதற்கு எந்த ஒரு ஆதாரங்களும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

தற்போது ஹாதியா வழக்கில் புதிய திருப்பமாக ஹாதியாவைக் காண அவரது வீட்டிற்கு சென்ற பெண்களிடம் அவரை காப்பாற்றுமாறும் அவர் தாக்கப்படுவதாகவும் ஹாதியா கூறி கூக்குரலிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது பெற்றோர் வீட்டில் அவரது விருப்பத்திற்கு மாறாக வைக்கப்பட்டிருக்கும் ஹாதியாவைக் காண பெண்கள் குழு ஒன்று புத்தகங்கள் மற்றும் இனிப்புகளுடன் சென்றுள்ளது. ஆனால் அந்த பெண்கள் குழுவை ஹாதியாவைப் பார்க்க அவரது தந்தை அசோகன் அனுமதிக்கவில்லை என்று தெரிகிறது. இது குறித்து அந்த பெண்கள் குழு அசோகனிடம் பேசிக்கொண்டிருக்கும் வேலையில் வீட்டினுள் உள்ள ஹாதியா தான் தனது குடும்பத்தினரால் தாக்கப்படுவதாகவும் தன்னை அங்கிருந்து காப்பாற்றுமாறும் சப்தமிட்டு அழுதுள்ளார்.

ஹாதியாவை காணச் சென்ற பெண்கள் குழுவின் ஒருவரும் ஆவணப் பட இயக்குனருமான அனுஷா பால் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “ஹாதியாவை காண அவர்களின் பெற்றோரிடம் இருந்து அனுமதி கிடைப்பது கடினம் என்பதை நாங்கள் உணர்ந்தே இருந்தோம். ஆனால் அவர்களின் பெற்றோரிடம் பேசி ஹாதியாவிற்கு இந்த இனிப்புகளை கொடுக்கச் செய்ய நினைத்தோம். தற்போது ஓணம் வருகிறது என்பதால் அவருக்கு புத்தாடைகளையும், பூக்களையும், இனிப்புகளையும், மேலும் அவர் எழுதுவதற்கு புத்தகம் ஒன்றையும் நாங்கள் வழங்க நினைத்தோம்.” என்று கூறியுள்ளார். ஆனால் ஹாதியாவின் பெற்றோரோ அவருக்கு தேவையானவற்றை தாங்கள் தருவதாகவும் வேறெவரும் அவருக்கு எதுவும் தரத் தேவையில்லை என்று கூறியுள்ளனர். அப்போது தான் ஹாதியா தான் தாக்கப்படுவதாகவும் தன்னை காப்பாற்றுமாறும் சப்தமிட்டுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியுற்ற பெண்கள் குழு ஹாதியாவை காண தங்களை அனுமதிக்குமாறு சாலை மறியலில் ஈடுபட்டு ‘ஹாதியாவை வீட்டுக் காவலில் இருந்து விடுவி” என்று கோஷங்களை எழுப்பியுள்ளது. இது தொடர்பாக அந்த பெண்கள் குழு வீடியோ காட்சிகளையும் வெளியிட்டுள்ளது. ஹாதியா மீது நடத்தப்படும் இந்த அடக்குமுறை மனித உரிமை மீறல் என்றும் அந்த குழு தெரிவித்துள்ளது. மேலும் ஹாதியா வீட்டிற்கு பாதுகாப்பு இருந்த காவல்துறையினர் இந்த பெண்கள் குழுவிடம் மிக மோசமாக நடந்துகொண்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த பெண்கள் குழுவில் இடம்பெற்ற ஆறு பெண்களையும் அந்த பெண்களில் ஒருவரின் கணவரையும் கலவரம் செய்ததாக கூறி வைக்கம் காவல்துறை கைது செய்துள்ளது.

லவ் ஜிஹாத் குறித்து NIA தாக்கல் செய்யும் அறிக்கையை ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி RV.ரவீந்திரன் மேற்பார்வையிடுமாறு பணிக்கப்பட்ட நிலையில் அவரோ இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். இந்நிலையில் ஹாதியாவின் குடும்பம், சமூகம் மற்றும் அரசின் இத்துனை அழுத்தங்களை தாண்டி ஹாதியாவின் மனஉறுதி நிலைத்திருக்குமா என்பது கேள்விக்குறி. முஸ்லிமாக வாழ்ந்து முஸ்லீமாக மரணிப்பேன் என்று கூறிய ஹாதியா, மூளைச்சலவை செய்யப்பட்டு இஸ்லாமிய மதத்தை தேர்வு செய்து ஒரு முஸ்லிமை மணந்துள்ளார் என்று குற்றச்சாட்டு வைக்கப்படும் வேலையில், தற்போது மேற்கூறிய இந்த அனைத்து சக்திகளும் அவருக்கு அழுத்தம் கொடுத்து, மிரட்டி மூளைச்சலவை செய்து மதம்/மனம் மாற்ற முயற்சிக்கின்றனவா என்று கேள்வி எழுகிறது.

Comments are closed.