ஹரியானாவை சேர்ந்த 30 வயது முன்ஃபைத் கற்பழிப்பு புகார் ஒன்றில் குற்றம் சாட்டப்பட்டவர். காவல்துறையினரின் பணிகளை செய்வதற்காக பலமுறை இவர் காவல்துறையினரால் அழைக்கப்பட்டு வந்துள்ளார். இவர் காவல்துறையினருக்கு செய்து கொடுக்கும் பணிக்கு பகரமாக அவர் மீதுள்ள கற்பழிப்பு வழக்கை முடித்து தருவதாக காவல்துறையினர் உறுதியளித்ததாக முன்ஃபைதின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஒரு நாள் இரவு, முன்ஃபைத் தனது தந்தை மற்றும் மாமனாரிடம் தன்னை காவல்துறையினர் சில வேலைக்காக ரேவாரிக்கு வர அழைத்துள்ளதாக கூறியுள்ளார். அவர் அங்கு சென்றால் காவல்துறையினரால் அவர் தொல்லை படுத்தப்படுவது குறையும் என்ற எண்ணத்தில் முன்ஃபைதின் குடும்பத்தினரும் அவரை அங்கு அனுப்பி வைத்துள்ளனர். தனது குடும்பத்தினரிடம் விக்ராந்த், ஷக்தி சிங், சதீஷ் மற்றும் சித்தார்த் ஆகிய Crime Investigation Agency ஐ சேர்ந்த நான்கு காவல்துறை அதிகாரிகளின் பெயரை முன்ஃபைத் குறிப்பிட்டுள்ளார். தன வீட்டில் இருந்து காவல்துறையினரை சந்திக்க முன்ஃபைத் சென்ற அடுத்த நாள் முன்ஃபைத் கொல்லப்பட்டதாக அவரின் குடும்பத்திற்கு செய்தி வந்துள்ளது.
இந்த என்கெளவுண்டர் குறித்து என்ன நடைபெற்றது என்பதனை விசாரிக்க சென்ற Citizens Against Hate collective அமைப்பின் உண்மை அறியும் குழு முன்ஃபைதின் குடும்பத்தினரிடமும் அப்பகுதி மக்களிடமும் நடந்ததை பற்றி விசாரித்துள்ளது. அந்த குழுவின் கூற்றுப்படி, முன்ஃபைத் கொலை செய்யப்பட்ட போது அவர் மட்டும் அங்கு இல்லை என்றும் அவருடன் அவரது நண்பர்கள் மூன்று பேர் இருந்தனர் என்றும் முன்ஃபைத் காவல்துறையினரால் சுடப்படுவதை பார்த்த அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர் என்று ரோஸ்கீமியோ கிராமத்து மக்கள் தெரிவித்துளளனர்.
ஆனால் காவல்துறையின் கூற்றுப் படி, முன்ஃபைதின் உடல் அவரது கழுத்தில் துப்பாக்கிச் சூடு காயத்துடன் தவ்ரூ நுஹ் சாலையில் நின்ற வெள்ளை நிற பிக்அப் டிரக்கில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இது குறித்து முன்ஃபைதின் தந்தை முன்ஃபைத் குறிப்பிட்ட Crime Investigation Agency (CIA) வின் அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு புகார் எழுதியுள்ளார். ஆனால் காவல்துறையின் முதல் தகவல் அறிக்கை முன்ஃபைத்தின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் இல்லை என்றும் மாறாக CIAவின் மஸ்தானா பகுதி ஆய்வாளர் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது என்றும் தெரியவந்துள்ளது. மேலும் அதில் காவல்துறையால் முன்ஃபைத் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணம் குறித்து எதுவும் இருக்கவில்லை. இத்துடன் முன்ஃபைத்தின் பிரேத பரிசோதனையை காவல்துறை அவரசரப்படுத்தியதாகவும் தெரியவருகிறது. இதற்கென அவரது உடலை அடையாளம் தெரியாத உடல் என்று கூறி பிரேத பரிசோதனை செய்ய இரண்டு மருத்துவமனைகளை காவல்துறை அணுகியதாகவும் ஆனால் அதற்கு அவர்கள் சம்மதிக்கவில்லை என்றும் முன்ஃபைத்தின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். சட்டபப்டி அடையாளம் தெரியாத உடலை உயிரிழந்த மூன்று நாட்களுக்குப் பிறகு தான் செய்ய வேண்டும். இறுதியில் காவல்துறை கூற்றுக்கேற்ப பிரேத பரிசோதனை செய்ய ஒப்புக்கொண்ட மருத்துவரை வைத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது என்று உண்மை அறியும் குழு தெரிவித்துள்ளது.
இது குறித்து உண்மை அறியும் குழுவில் இடம்பெற்றுள்ள வழக்கறிஞர் மங்கள வெர்மா, “காவல்துறைக்கு முன்ஃபைத்தை முன்னரே நன்றாக தெரிந்திருக்க அவர்கள் ஏன் முதல் தகவல் அறிக்கையில் முன்ஃபைதின் உடலை அடையாளம் தெரியாத உடல் என்று குறிப்பிட வேண்டும்? இதில் முக்கியமானது யாதெனில் காவல்துறையினர் தான் முன்ஃபைதை அவர் மீதான வழக்கை ரத்து செய்வதற்கு பகரமாக தங்களுக்காக பணிபுரிய அழைத்துள்ளனர்.” என்று கூறியுள்ளார். மேலும் இது போன்ற சம்பவங்கள் மேவாத் பகுதியில் நடப்பது புதிது ஒன்றும் இல்லை என்றும் இது போன்ற 11 சம்பவங்கள் சமீப காலங்களில் நடைபெற்றுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது போன்று கொலை செய்யப்பட்டது முன்ஃபைத் மட்டுமல்ல, 2010 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை இங்கு சுமார் 11 என்கெளவுண்டர்கள் நடைபெற்றுள்ளதாகவும் இதில் மொத்தம் 15 பேர் கொலை செய்யப்பட்டதாகவும் கொலை செய்யப்பட்ட அத்துணை நபர்களும் முஸ்லிம்கள் என்றும் தெரியவந்துள்ளது.
முன்ஃபைதின் கொலை குறித்து தனது அடையாளத்தை மறைத்துக்கொண்ட ஒருவர் விவரிக்கும் வீடியோ காட்சி ஒன்றும் தற்போது பரவலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் செய்திகள் பரபரப்பாகவே இது தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்று இந்த விசாரணைக்கு தலைமை தாங்கும் காவல்துறை துணைகண்காணிப்பாளர் யத்ராம் தெரிவித்துள்ளார்.