ஹரியானா: இளம்பெண் கடத்தல் முயர்சி, அதிகாரத்தை பயன்படுத்தி தப்பிக்க நினைக்கும் பாஜக தலைவர் மகன்?

0

ஹரியானா மாநில பாஜக தலைவர் சுபாஷ் பரலா வின் மகன் விகாஸ் பரலா மற்றும் அவரது நண்பனான ஆஷிஷ் குமார் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இளம் பெண் ஒருவரை தங்களது வாகனத்தில் துரத்திச் சென்று கடத்த முயற்சித்துள்ளனர்.

IAS அதிகாரியின் மகளான வர்ணிகா குந்து என்ற பெண் தனது சமயோசித புத்தியை பயன்படுத்தி இவர்களின் தொடர் துரத்தலில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பித்ததாகக் கூறியுள்ளார். தன்னை துரத்தியவர்களிடம் இருந்து தான் தப்பித்ததற்கு தான் ஒரு IAS அதிகாரியின் மகள் என்பதே காரணம் என்றும் இதுவே தான் ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்த பெண்ணாக இருந்தால் இந்நேரம் கற்பழிக்கப்பட்டு எங்காவது ஒரு புதரில் தன்னை பிணமாகத் தான் கண்டெடுக்க நேர்ந்திருக்கும் என்று கூறியுள்ளார்.

தன்னை டாட்டா சஃபாரி வாகனத்தில் துரத்தி வந்த பாஜக தலைவரின் மகனான விகாஸ் பரலாவிடம் இருந்து தப்பிக்க பல போக்குவரத்து நிறுத்தங்களில் நிற்காமல் தான் சென்றதாகவும் அப்படியும் கூட அவர்கள் தன்னை பின் தொடர்ந்து வந்ததாகவும் ஒரு முறை விகாஸ் பரலாவின் நண்பர் தனது வாகனத்திற்குள் நுழைய முயற்சித்ததாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார். இந்த சம்பவங்கள் அனைத்தும் தான் தப்பிச் சென்ற வழியில் உள்ள CCTV கேமராக்களில் பதிவாகியுள்ளது என்றும் அதனை சோத்தித்து பார்த்தாலே தன் நிலை எவ்வாறு இருந்தது என்று தெரிந்துவிடும் என்றும் அப்பெண் கூறியுள்ளார்.

தனது மகள் இவர்களிடம் சிக்கிய இந்த மோசமான அனுபவத்தை சரி செய்ய இயலாது என்று தனக்குத் தெரியும் என்றும் ஆனால் குற்றவாளிகள் தண்டிக்கப்படாவிட்டால் இது போன்று மேலும் பல மகள்கள் இந்த துன்பத்தை அனுபவிக்க நேரிடும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் செல்வாக்கு மிகுந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தன் மகளுக்கு நீதி கிடைக்குமா என்பது கேள்விக்குறி தான் என்று கருதும் அவர் அவ்வாறு இந்த வழக்கை நீர்த்துப் போகச்செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்படுமாயின் தான் நீதிமன்ற உதவியை நாடப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த குற்றவாளிகள் சட்டக் கல்லூரி மாணவர்கள் என்பதால் தாங்கள் செய்யும் குற்றத்தின் விளைவுகள் குறித்து அவர்கள் நன்கு அறிந்தவர்கள் தான் என்றும் இருந்தும் அவர்கள் இந்த செயலை செய்யத் துணிந்துள்ளனர் என்று அவர் கூறியுள்ளார். இவர்களுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கும்வரை தான் ஓயப்போவதில்லை என்று கூறிய அவர் தங்கள் குடும்பம் இந்த வழக்கு விசாரணையில் எவ்விதத்திலும் தலையிடாது என்று தெரிவித்துள்ளார். அது போன்றே குற்றவாளிகளின் குடும்பத்தினரும் இந்த வழக்கில் தலையிட மாட்டார்கள் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது போன்று தெள்ளத்தெளிவான ஒரு வழக்கில் நீதியை நிலைநாட்ட இந்த அமைப்பு தவறிவிட்டால் நம் சமூகம், அரசு மற்றும் நாட்டு மிக மோசமான நிலையில் உள்ளதாக அர்த்தம் என்று அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவத்தை தொடர்ந்து குற்றவாளிகளான விகாஸ் பரலா மற்றும் ஆஷிஷ் குமார் ஆகியோரை சம்பவ இடத்திலேயே கைது செய்த போலீசார் அவர்களை தற்போது பிணையில் விடுவித்துள்ளனர். இவர்கள் பிணையில் வெளியானதற்கு காரணம் அவர்களின் குடும்ப அரசியல் பின்பலம் என்றும் அவர்கள் மீது பிணையில் வெளிவரக்கூடிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது தான் என்றும் கூறப்படுகிறது.

தற்போது விரேந்தர் குந்து எது நடக்கக் கூடாது என்று அச்சமுற்றாரோ அதுபோலவே பாஜக தலைவரின் மகனை காப்பாற்ற அனைத்து முயற்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. இதில் முதன்மையாக குற்றவாளிகள் மீது பிணையில் வெளிவரக்கூடிய பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது தொடங்கி இந்த வழக்கில் முக்கிய ஆதாரமான  CCTV கேமரா பதிவுகள் அழிப்பு வரை நடைபெற்றுள்ளது.

விகாஸ் பரலா வால் வர்ணிகா குந்து துரத்தப்பட்டது ஹரியானாவின் முக்கிய பகுதியான செக்டார் 7 இல் இருந்து ஹவுஸின் போர்ட் போக்குவரத்து நிறுத்தம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் நடைபெற்றுள்ளது. மேலும் வர்ணிகா குந்து தனது இந்த அனுபவத்தை அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த போது அவர் துரத்தப்பட்ட சாலையில் ஒவ்வொரு 200 மீட்டர் தொலைவிலும் காவலர்கள் இருந்தனர் என்றும் போக்குவரத்து கேமராக்களும் இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் செக்டார் 7 இல் இருந்து ஹவுஸின் போர்ட் போக்குவரத்து நிறுத்தம் வரையிலான பகுதிகளில் உள்ள  9 போக்குவரத்து கண்காணிப்புக் காமிராக்களும் (குற்றவாளிகளை தப்புவிக்க வசதியாக) செயல்படாத நிலையில் இருந்தது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த ஒற்றை அறிவிப்பு இவ்வழக்கின் விசாரணை செல்லும் கோணத்தை நமக்கு தெளிவாக உணர்த்துகிறது.

இத்துடன் நில்லாது சமூக வலைதளங்களில் பாஜக ஆதரவு இணைய குண்டர் படை வர்ணிகா குந்துவின் நடத்தை குறித்து அவதூறு பரப்பிவருகின்றனர். இதில் இன்னும் ஒரு படி மேலே சென்ற பாஜகவின் ராம்வீர் பட்டி என்பவர் இரவு 12 மணிக்கு வர்ணிகா வெளியில் என்ன செய்து கொண்டிருந்தார் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பார்த்துக்கொள்ள வேண்டும்” என்றும் “தங்கள் குழந்தைகளை இரவு நேரங்களில் உலாவ அனுமதிக்கக் கூடாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாஜக செய்தித் தொடர்பாளர் ஷைனா NC தானும் ஒரு பெண் என்பதையும் இன்னும் பாதிக்கப்பட்டது ஒரு பெண் என்பதையும் இந்த சம்பவத்தில் கேள்விக்குரியாக்கப்பட்டிருப்பது பெண்களின் பாதுகாப்பு என்பதையும் மறந்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். பாதிக்கப்பட்ட வர்ணிகா இரண்டு ஆண்களுடன் இருப்பது போன்று இருக்கும் அந்த புகைப்படத்தை பகிர்ந்த அவர், “பாதிக்கப்பட்டதாக கூறப்படும் வர்ணிகா அவரை துரத்திய விகாஸ் பரலா உடன்” என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து பத்திரிகையாளர்களுக்கு வர்ணிகா விளக்கம் அளிக்கையில் இந்த புகைப்படம் பல வருடங்களுக்கு முந்தையது என்றும் மேலும் அதில் இருக்கும் எவரும் விகாஸ் பரலா இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

 

ஷைனா தனது இந்த பதிவை பின்னர் தன் பக்கத்தில் இருந்து அழித்துவிட்டு தன்னுடைய கணக்கை சிலர் ஹாக் செய்து விட்டதாகவும் முந்தைய சில பதிவுகள் அவருடையது அல்ல என்றும் தன் பக்கம் சற்று முன் தான் தனது கட்டுப்பாட்டிற்குள் வந்தது என்றும் அவரது பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதன் உண்மைத் தன்மையை குறித்து கேள்வி எழுப்பிய ட்விட்டர் வாசிகள், அவரது கணக்கு ஹாக் செய்ப்பட்டு பின்னர் சரி செய்யப்பட்டதை அறிவிக்கும்  ட்விட்டரின் மின்னஞ்சலை பதிவிட முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஷைனாவின் இந்த பதிவு அவரது பக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட போதும்  அவரது அந்த பதிவை உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரஷாந்த் படேல், போலிச் செய்தி தளங்களில் ஒன்றான போஸ்ட்கார்ட் நியுஸ் ஆசிரியர் ரூபா மூர்த்தி மற்றும் இன்ன பிற வலது சாரி பாஜக வினர் மற்றும் பாஜக ஆதரவாளர்கள் தம் தமது பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். இன்னும் சிலர் வர்ணிகாவின் ஒழுக்கம் குறித்தும் அநாகரீக கேள்விகளை எழுபியுள்ளனர்.

ஒருவர் வர்ணிகாவை கடத்த முயன்ற விகாஸ் பரலா நாகரீகமானவர் போன்று தோற்றமளிப்பதாகவும் வர்ணிகாவோ மும்பையின் தாராவியின் சேரிப் பகுதியை சேந்தவர் போன்று இருப்பதாகவும் இதிலிருந்தே விகாஸ் பரலாவின் புகழை கெடுக்க நடக்கும் முயற்ச்சி இது என்றும் கூறியுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, இவ்வழக்கில் பாஜக மாநில தலைவரை உள்துறை அமைச்சகம் பாதுகாக்க நினைக்கிறது என்று கூறியுள்ளது. “சண்டிகார் நிர்வாகம் மற்றும் காவல்துறையை நேரடியாக கையாளும் உள்துறை அமைச்சகம் இந்த விவகாரத்தை மூடி மறைத்து ஹரியான பாஜக தலைவர் மகனை பாதுகாக்க முயற்சிக்கின்றது.” என்று ஹரியான காங்கிரஸ் தலைவர் RS.சுர்ஜவாலா தெரிவித்துள்ளார். CCTV கேமராக்கள் வேலை செய்யவில்லை என்ற காவல்துறை கூற்றை குறிப்பிட்ட சுர்ஜெவாலா அது எப்படி திடீர் என்று அனைத்து கேமராக்களும் செயலிழந்தன என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இதன் மூலம் இவ்வழக்கின் முக்கிய ஆதாரம் அழிந்துவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“பாஜக அதிகார போதையில் உள்ளது”என்று கூறிய அவர் இந்த குற்றத்தை மூடி மறைக்க நினைக்கும் மத்திய அரசின் வழிகாட்டுதலில் காவல்துறை குற்றவாளிகள் மீது பிணையில் விடுதலையாகும் சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளது என்று கூறியுள்ளார். மேலும் “தையிரிமான அந்த பெண்ணிற்கும் அவரது பெற்றோர்களுக்கும் வணக்கங்கள். உங்களுடைய உறுதி எங்களை பெருமைகொள்ளச் செய்கிறது.”என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹரியானா காங்கிரஸ் தலைவர் அசோக் திவாரி, “பாஜகவின் அதிகார திமிர் எத்தகையது என்றால், பெண்குழந்தைகளை காப்பாற்ற வேண்டும், கல்வி கொடுக்க வேண்டும் என்றும் கூறும் அந்த கட்சியின் மாநிலத் தலைவரின் மகன் இத்தகைய குற்றத்தை புரிந்துள்ளார்.” என்று கூறியுள்ளார்.

பெண்களை கண்ணியக் குறைவாக பேசுவதும் பெண்கள் இரவில் நடமாடக் கூடாது என்று கூறுவதும் பாஜகவினருக்கு புதிது ஒன்றும் அல்ல. தற்போதைய ஹரியானாவின் முதல்வர் மனோகர் லால் கட்டார், “பெண்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்றால் அவர்கள் ஏன் நிர்வாணமாக நடமாடக் கூடாது?” என்று கேள்வி எழுப்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.