ஹரியானா கிராமம் ஒன்றில் முஸ்லீம்கள் தொழுகை நடத்த, தொப்பி அணிய, தாடி வளர்க்கத் தடை

0

ஹரியானா கிராமம் ஒன்றில் முஸ்லீம்கள் தொழுகை நடத்த, தொப்பி அணிய, தாடி வளர்க்கத் தடை

ஹரியானா மாநிலம் ரோஹ்தாக் மாவட்டத்தில் உள்ள டிட்டோலி கிராமத்தில் அப்பகுதி மக்கள் நடத்திய கூட்டத்தில் தங்கள் கிராமத்தில் வாழும் முஸ்லீம்கள் தங்களுக்கு இந்துப் பெயர்களை சூட்டிக்கொள்ள வேண்டும் என்றும், தங்களை வெளிப்படையாக முஸ்லிம் என்று அறிவிக்கும் வகையில் தொப்பி அணிவது மற்றும் தாடி வளர்ப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், அத்துடன் வெளிப்படையாக தொழுகையில் ஈடுபடக்கூடாது என்றும் வாய்மொழியாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இந்த கூட்டத்தில் காவல்துறையினரும் பங்கெடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டம் குறித்து பத்திரிகையாளர்களிடம் தனது கருத்தை தெரிவித்த சப் டிவிசனல் மாஜிஸ்திரேட் ராகேஷ் குமார், தனது கவனத்திற்கு இந்த கூட்டம் குறித்த தகவல் கொண்டு வரப்பட்டதாகவும் அது குறித்து விசாரணை நடத்த தான் உத்தரவிட்டுள்ளதாக்வும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், “இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. இது குறித்து அந்த கிராம தலைவருடன் நான் பேச இருக்கின்றேன்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் பங்கு கொண்ட ஒருவர் இக்கூட்டம் குறித்து தெரிவிக்கையில், அனைத்து ஜாதி மற்றும் மதங்களின் உறுப்பினர்கள் அந்தக் கூட்டத்தில் பங்கெடுத்திருந்தனர் என்றும் மேற் குறிப்பிட்ட முடிவுகளுடன், கிராமத்தில் வக்ஃப் வாரியத்தின் நிலம் அளக்கும் பணியை கிராம பஞ்சாயத் செய்யும் என்றும், முஸ்லிம்களுக்கு கிராமத்திற்கு வெளியே அடக்கஸ்தளத்திற்கான இடம் வழங்கப்படும் என்று கூறப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இன்னும் பசுவதை குற்றம் சாட்டப்பட்ட இந்த கிராமத்தை சேர்ந்த யமீன் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு தங்கள் கிராம்த்திற்கு உள்ளே நுழைய அனுமதி இல்லை என்றும் இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முஸ்லிம்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட இந்த முடிவுகள் குறித்து தனது கருத்தை தெரிவித்த அப்பகுதி முஸ்லிம்களின் தலைவர் ராஜ்பிர், சமூக நல்லிணக்கத்தை காக்க இந்த தீர்மானதிற்கு கட்டுப்பட்டு தாங்கள் நடக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். “எப்படியானாலும் பிரிவினைக்கு பின் நாங்கள் இந்துப் பெயர்களைத்தான் பயன்படுத்தி வருகின்றோம். இங்கு யாரும் தாடி வளர்க்கவோ தொப்பி அணியவோ இல்லை. எங்கள் கிராமத்தில் மசூதிகளும் இல்லை. வெள்ளிக்கிழமை மற்றும் இன்ன பிற விசேச தினங்களில் சுமார் 8-10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளில் சென்றே தொழுகையில் ஈடுபடுகிறோம்.” என்று தெரிவித்துள்ளார். மேலும் குறிப்பிட்ட இந்த கூட்டத்தில் முஸ்லிம் சமூக மக்கள் சார்பாக அப்பகுதி கோசாலைக்கு 11000 ரூபாய்யை தான் நன்கொடையாக அளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த அப்பகுதி இந்து சமூகத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் கூறுகையில், தங்கள் கிராமத்தில் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்கள் ஒற்றுமையுடன் தான் வாழ்ந்து வந்ததாகவும் ஆனால் உத்திர பிரதேசத்தில் இருந்து இங்கு குடியேறிய சிலர் அங்கு நிலவி வரும் அமைதியை குலைத்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.

குறிப்பிட்ட இந்த கிராமத்தின் கட்டுப்பாடுகள் சட்ட விரோதமானது என்றும் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் முஸ்லிம் எக்தா மஞ்ச் அமைப்பின் தலைவர் ஷஷத் கான் தெரிவித்துள்ளார். அப்பகுதி முஸ்லீம்கள் வேறு வழியின்றி இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி முஸ்லிம் ஒருவரின் குடும்பம் மீது அவர்கள் கன்றுக்குட்டியை கொன்றதாக கூறி அப்பகுதி மக்கள் தாக்குதல் நடத்தினர். இந்த நிகழ்வை அடுத்து இருவரை காவல்துறை இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழும் பஞ்சாப் பசு விதை தடைச்சட்டத்தின்(1955) கீழும் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

 

Comments are closed.