ஹரியானா: திருமணத்தின் போது குதிரையில் சென்ற தலித் மணமகன் மீது சாதி வெறி தாக்குதல்

0

ஹரியானாவில் திருமணத்தின் போது குதிரையில் சென்ற தலித் மணமகனை குதிரையில் இருந்து கீழே தள்ளிவிட்டு சாதி வெறியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் மணமகனின் குடும்பத்தினரையும் அவர்கள் தாக்கியுள்ளனர்.

கடந்த செவ்வாய் கிழமை இரவு மணமகன் சஞ்சய் மற்றும் அவரது குடும்பத்தினர் மணப்பெண் வீட்டிற்கு வருகை புரிந்துள்ளனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த ராஜபுத்திர சமூகத்தை சேர்ந்த சிலர் அவர்களை வழிமறித்து மணமகனை அவர் அமர்ந்திருந்த குதிரையில் இருந்து கீழே தள்ளியுள்ளனர். மேலும் தலித்கள் இது போன்று குதிரை மீது அமர்ந்து வரும் சம்பிரதாயத்தை பின்பற்றக் கூடாது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

இதனை தொடர்ந்து இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மணமகன், மணமகன் குடும்பத்தினர் மற்றும் மணமகள் குடும்பத்தினர் உயர் சாதி கும்பலால் தாக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த தாக்குதல் குறித்து மணமகள் வீட்டார் காவல்துறையில் புகாரளித்துள்ளனர்.

காவல்துறையினர் அங்கு வரவே இந்த சாதிவெறி கும்பல் அங்கிருந்து தப்பியோடியுள்ளது. இது குறித்து அப்பகுதி காவல்துறை அதிகாரி கூறுகையில், இந்த தாக்குதல் சம்பவத்தில் மணமகனுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளது என்றும் இருந்தாலும் திருமண விசேஷம் நல்ல முறையில் நடைபெற்றது என்றும் கூறியுள்ளார். இன்னும் திருமணம் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க இறுதிவரை காவல்துறை பாதுகாப்பு வழங்கியதாக அவர் கூறியுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது IPC யின் கீழும் SC/ST பிரிவின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொருவரை காவல்துறை தேடி வருகிறது.

Comments are closed.