ஹரேன் பாண்டியா வழக்கு- விசாரணை நீதிமன்ற தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்

0

ஹரேன் பாண்டியா வழக்கு – விசாரணை நீதிமன்ற தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்

குஜராத் முன்னாள் அமைச்சர் ஹரேன் பாண்டியா கொலை வழக்கில் விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. முன்னதாக இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 நபர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை குஜராத் உயர்நீதி மன்றம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

நரேந்திர மோடி அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த ஹரேன் பாண்டியா மார்ச் 26, 2003 அன்று காலை நடைபயிற்சிக்கு சென்ற போது அவரின் காரில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். குஜராத் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டு ஒரு வருடம் கழிந்த நிலையில் நடத்தப்பட்ட இந்த கொலையை இனப்படுகொலைக்கான பழிவாங்கல் என்று கூறிய காவல்துறை சில முஸ்லிம்களை கைது செய்தது.

பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 12 நபர்களுக்கு விசாரணை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து தண்டனை விதிக்கப்பட்டவர்கள் செய்த மேல்முறையீட்டை விசாரணை செய்த குஜராத் உயர்நீதி மன்றம் ஆகஸ்ட் 29, 2011 அன்று அனைவரையும் கொலை வழக்கில் இருந்து விடுவித்து தண்டனையையும் ரத்து செய்தது. வழக்கின் விசாரணையை சீர்குலைத்ததற்காக உயர்நீதிமன்றம் சிபிஐ-யை கடுமையாக விமர்சனம் செய்தது.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் வினீத் சரண் ஆகியோர் அடங்கிய அமர்வு, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கி விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது. சிபிஐ வழக்கை நுணுக்கமாக விசாரித்ததாகவும் நீதிபதிகள் கூறினர். இதனை தொடர்ந்து முகம்மது அஸ்கர் அலி, கலீம் அகமது, அனஸ் மச்சிஸ்வாலா, ரெஹான் புத்தாவாலா, முகம்மது ரியாஸ், யுனுஸ் சர்ரேஸ்வாலா, முகம்மது பர்வேஸ் ஷேக், பர்வேஸ் கான் பத்தான் மற்றும் முகம்மது பாரூக் ஆகியோரின் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

வழக்கில் தண்டனை பெற்ற முகம்மது சைபுதீன் மற்றும் ஷாநவாஸ் ஆகியோர் தண்டனை காலத்தை அனுபவித்துவிட்டதால் அவர்களுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படவில்லை. வழக்கில் இருந்து முகம்மது ஷேக் என்பவர் விடுவிக்கப்பட்டதை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

2002 இனப்படுகொலை தொடங்கிய சமயத்தில் உயர் அதிகாரிகளுடன் நரேந்திர மோடி நடத்திய கூட்டம் குறித்த சில தகவல்களை பத்திரிகைகள் மற்றும் இனப்படுகொலை குறித்து விசாரணையை மேற்கொண்ட அக்கறையுள்ள குடிமக்கள் தீர்ப்பாயம் ஆகியவற்றிடம் சில தகவல்களை பாண்டியா தெரிவித்தது மோடிக்கு தலைவலியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்துதான் பாண்டியா கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி என்று கூறப்பட்ட அஸ்கர் அலி, சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, ஹரேண் பாண்டியாவை கொலை செய்யும் பொறுப்பை சொஹ்ராபுதீன் ஷேக் தன்னிடம் கொடுத்ததாகவும் தான் அதை மறுக்கவே துளசிராம் பிரஜாபதியை வைத்து அந்த கொலையை முடித்ததாகவும் ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட்-யிடம் தெரிவித்தார்.

பாண்டியா கொலையில் அரசியல் சூழ்ச்சி உள்ளதாகவும் தண்டனை வழங்கப்பட்ட ஒன்பது நபர்களுக்கும் கொலைக்கும் தொடர்பில்லை என்றும் ஹரேன் பாண்டியாவின் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் தொடர்ந்து கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.