ஹாஃபிழ் ஜூனைத் கான் கொலையில் சிபிஐ விசாரணை கோரி தந்தை ஜலாலுதீன் மனு: மாநில அரசு மற்றும் சிபிஐ க்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

0

ஹாஃபிழ் ஜூனைத் கான் கொலையில் சிபிஐ விசாரணை கோரி தந்தை ஜலாலுதீன் மனு: மாநில அரசு மற்றும் சிபிஐ க்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

ஹாஃபிழ் ஜூனைத் கான் கொலை வழக்கு விசாரணையை காவல்துறை அதிகாரிகள் சரிவர நடத்தவில்லை என்று குற்றம் சாட்டிய ஜூனைத் கானின் தந்தை ஜலாலுதீன் இந்த வழக்கு விசாரணையை சிபிஐ க்கு மாற்றம் செய்யுமாறு முன்னர் பஞ்சாப் ஹரியானா நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். ஆனால் அவரது மனுவை பஞ்சாப் ஹரியானா நீதிமன்றம் ரத்து செய்தது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தனது மனுவை அவர் தாக்கல் செய்ததை அடுத்து இவ்வழக்கின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் திங்கள் கிழமை தடை விதித்துள்ளது. மேலும் ஜலாலுதீனின் மனு தொடர்பாக மாநில அரசு மற்றும் சிபிஐ பதிலளிக்க  வேண்டும் என்று நீதிபதி குரியன் ஜோசப் மற்றும் மோகன் சதானந்தகெளடர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த வழக்கு விசாரணை குறித்து தனது மனுவில் குறிப்பிட்ட ஜூனைத் கானின் தந்தை ஜலாலுதீன், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது காவல்துறை இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டப் பிரிவு 153A (மத அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்துவது), 153 B (தேசிய ஒருமைப்பாட்டிற்கு பங்கம் விளைவிப்பது), 120 B (கிரிமினல் சதித்திட்டம் தீட்டுதல்), மற்றும் 149 (சட்டவிரோத ஒன்றுகூடல்) ஆகிய பிரிவில் வழக்கு பதிவு செய்யவில்லை என்றும் இந்த வழக்கை விசாரிக்கும் மாநில காவல்துறை விசாரணை முறையில் குறை உள்ளது என்றும் கூறியிருந்தார். மேலும் இந்த வழக்கை ஏதோ இரு தரப்பினருக்கு இடையே நடைபெற்ற மோதல் போல காவல் துறை சித்தரிக்க முயல்கிறது என்றும் ஆனால் உண்மையில் தங்களால் எதுவும் செய்ய முடியாத அப்பாவிகளை குற்றம் சாட்டப்பட்ட கும்பல் மத அடிப்படையிலான வெறுப்பின் பேரில் தாக்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த வழக்கை பலகீனமடையச் செய்வதற்காக உண்மையான சாட்சிகளிடம் இருந்து பெயரளவில் மட்டுமே வாக்குமூலங்களை பெற்று முக்கிய தகவல்களை தவிர்ப்பதும், போலியாக பல சாட்சிகளை வழக்கில் சேர்த்து அவர்களிடம் வாக்குமூலங்களை பெற்று வழக்கை திசை திருப்பும் வேலையையும் காவல்துறை செய்து வருகிறது என்றும் ஜலாலுதீன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக இந்த கொலையில் குற்றம் சாட்டப்பட்ட பலர் தற்போது பிணையில் வெளியாகியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இத்துடன் இவ்வழக்கில் மாநில கூடுதல் அட்வோகேட் ஜெனெரல் நவீன் கௌஷிக் குற்றவாளிகள் தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞருக்கு உதவுகிறார் என்று கூடுதல் செஷன்ஸ் நீதிபதி Y.S.ரத்தோர் குற்றம் சாட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Comments are closed.