ஹாஃபிழ் ஜூனைத் கொலை வழக்கு: டில்லி அரசு ஊழியர் உட்பட நால்வர் கைது

0

ஹாஃபிழ் ஜூனைத் கொலை வழக்கில் 50 வயது டில்லி அரசு ஊழியர் ஒருவர் உட்பட நான்கு பேரை கைது செய்துள்ளது காவல்துறை. இந்த கைது நடவடிக்கையுடன் ஜுனைத் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்தாகியுள்ளது. ஆனால் இந்த கொலையில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி இன்னும் கைது செய்யப்படவில்லை.

ஜுனைத் கொலையை அடுத்து நாடு முழுவதும் எதிர்ப்புகளும் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் கொலை நடைபெற்று ஆறு நாட்களுக்கு பிறகு இந்த கைதுகள் நடைபெற்றுள்ளது.

இந்த கைதுகள் குறித்து ரயில்வே காவல்துறை கண்காணிப்பாளர் கமல்தீப் கோயல் குறிப்பிடுகையில், “நாங்கள் இவ்வழக்கு தொடர்பாக 24 ல் இருந்து 30 வயதிற்கு உட்பட்ட மூன்று இளைஞர்கள் மற்றும் 50 வயதுடைய ஒருவர் என்று இதுவரை கைது செய்யப்பட்டவருக்கு கூடுதலாக நான்கு பேரை கைது செய்துள்ளோம். இந்த 50 வயது நபர் ஒரு டில்லி அரசு ஊழியர் ஆவார்.” என்று கூறியுள்ளார்.

அந்த அரசு ஊழியரின் விபரங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, அவர் அரசு ஊழியர் என்பதற்கு கூடுதலாக ஏந்த ஒரு தகவலையும் தன்னால் தெரிவிக்க இயலாது என்று கூறியுள்ளார். ஆனால் இந்த நபர் தான் ஜுனைதை ஜுனைத் மீதான இந்த தாக்குதலை தூண்டியவர் என்று அவர் தெரிவித்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள செய்திகளின் அடிப்படையில் இந்த படுகொலையில் ஈடுபட்டவர்களில் இருவர் அரசு ஊழியர்கள் என்றும் அதில் ஒருவர் சுகாதாரத்துறை ஆய்வாளர் என்றும் மற்றொருவர் டில்லி குடிநீர் ஆணைய பணியாளர் என்று தெரியவந்துள்ளது.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள நான்கு பேர் பல்வால் அருகே உள்ள ஹோதல் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் இந்த ரயில் வழித்தடத்தில் வழக்கமாக பயணிப்பவர்கள் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த கைதுகளால் ஜுனைத் கொலையின் போது நடைபெற்ற சம்பவங்களின் தொகுப்பு தெளிவாகி வருகிறது என்று காவல்துறை கூறியுள்ளது.

முதலில் இந்த 50 வயது நபர் ஜுனைத் மற்றும் அவரது சகோதரருடன் இருக்கை பகிர்வு தொடர்பான மோதலில் ஈடுபட்டுள்ளார் என்றும் பின்னர் அந்த நபர் இவர்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் அவர்களை மாட்டிறைச்சி உண்பவர்கள் என்றும் தேச விரோதிகள் என்றும் மீண்டும் மீண்டும் கூறி அவர்களின் தொப்பியை பிடுங்கி தரையில் எறிந்துள்ளார் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. பின்னர் ஃபரிதாபாத் புது நகர ரயில் நிலையத்தில் ஏறிய மூன்று பேர் அவருடன் இணைந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

ஜுனைத் மற்றும் அவரது உறவினர்களை கத்தியால் தாக்கியவர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று கூறிய காவல்துறை பல முனைகளில் உள்ள CCTV கேமரா மூலம் கிடைத்த வீடியோ ஆதாரங்களை வைத்து இந்த சம்பவம் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் முக்கிய குற்றவாளி விரைவில் பிடிபடுவார் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக முன்னர் கைது செய்யப்பட்ட ஒருவர் தான் இந்த தாக்குதலின் போது குடி போதையில் இருந்ததாகவும் தன்னுடன் இருதவர்கள், ஜுனைத் மாட்டிறைச்சி உண்டார் என்று கூறியதால் அவரை தாக்கியதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. (பார்க்க செய்தி)

Comments are closed.