ஹாதியா: இஸ்லாத்தை தழுவியதால் வேட்டையாடப்படும் பெண்!

0

 

  • ஆரூர் யூசுப்தீன்

சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற ஓர் சாதாரண மதமாற்றம் தேசிய அளவில் மிகப் பெரிய சர்ச்சைக்குரிய விவகாரமாக மாற்றப்பட்டு வருகிறது. கேரளாவில் மதமாற்றம் மற்றும் கலப்புத்  திருமணம் என்பவை சாதாரணமாக நிகழக்கூடிய நிகழ்வாக இருக்கும் நிலையில் அகிலா என்ற பெண் மதம் மாறிய விசயம் சர்ச்சைக்குரிய விவகாரமாக மாற்றப்பட்டுள்ளது.

கேரளாவின் மலப்புரம் மாவட்டம் வைக்கம் என்ற பகுதியை சேர்ந்த அசோகன் மணி மற்றும் பொன்னம்மா ஆகியோரின் மகளாக பிறந்து வாழ்ந்து வந்தவர் தான் அகிலா என்ற இளம் பெண். பள்ளிப் படிப்பை முடித்த அகிலா இளங்கலை ஹோமியோபதி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை  படிப்பை படிக்க சேலம் மாவட்டத்தில் உள்ள ஓர் கல்லூரிக்கு 2015ல் பெற்றோரின் அனுமதியுடன் சேர்ந்தார்.

சேலத்தில் தனது தோழிகளுடன் ஒரு வீட்டை வாடகை எடுத்து தங்கி படித்து வந்தார் அகிலா. எல்லோரும் கல்லூரி காலங்களில் விடுமுறைக்கு சகதோழிகளின் வீட்டிற்கு சென்று வருவதுபோல் தனது முஸ்லிம் தோழிகளின் வீடுகளுக்கும் அகிலா சென்று வந்தார். அவர்களின் மத வணக்க வழிபாடு,  பழக்க வழக்கம் ஆகியவற்றின் மீது ஆர்வம் அகிலாவிற்கு வந்தது.  இதனை அந்த தோழிகளிடம் தெரிவித்த போது அவர்கள் அகிலாவிற்கு இஸ்லாமிய நூல்களை படிக்க கொடுத்தனர்.  அதன்பின்பு இஸ்லாமிய நூல்களை படிப்பது, சொற்பொழிவுகளை இணையத்தில் கேட்பது என்று தொடர்ந்து இஸ்லாமிய மார்க்கத்தை படித்து வந்தார்.  இஸ்லாத்தின் மீது அதீத காதல் கொண்ட அகிலா இஸ்லாமிய பழக்க வழக்கங்களை ஒவ்வொன்றாக பின்பற்ற தொடங்கினார்.

அதுவரை இந்து கடவுளை வணங்கி வந்த அகிலா அதனை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திக் கொண்டார். முதலில் நட்பு வட்டத்தில் மட்டும் ஹிஜாப் அணிந்து வந்த அகிலா ஒருகட்டத்தில் அதனை கல்லூரிக்கும் அணிந்து வரத் தொடங்கினார்.

2015 டிசம்பர் மாதம் அகிலாவின் தாத்தா இறப்பிற்கு சொந்த ஊர் வந்த அகிலா அங்கு இந்து முறைப்படி நடைபெற்ற சடங்குகளில் சரியாக கலந்துகொள்ளாமல் ஒதுங்கி இருந்தார். அவளின் நடவடிக்கைகள் அகிலாவின் பெற்றோருக்கு விநோதமாக இருந்தது. கல்லூரிக்கு திரும்பிய அகிலா தன்னுடைய மனமாற்றத்தை வெளியில் பிரகடனப்படுத்த முடிவெடுத்தார். கல்லூரிக்குள்  மட்டுமல்லாமல் வெளியில் எங்கு சென்றாலும் ஹிஜாப் அணிந்தே செல்ல ஆரம்பித்தார்.

2016, ஜனவரி 2 ஆம் நாள் விடுமுறைக்கு வந்த அகிலா வீட்டில் தொழுகையை நிறைவேற்றினார். இதனைக் கண்ட அகிலாவின் தாய் அவளை கண்டித்தார். அப்போது பெற்றோர் மீது கோபம் கொண்டு சேலம் திரும்பினாள் அகிலா.

2016, ஜனவரி மாதம் 6 அன்று அகிலா ஹிஜாப் அணிந்து முஸ்லிம்களை போல் நடந்துகொள்வதை கண்ட அசோகனின் நண்பர் அசோகனுக்கு இதனை தெரியப்படுத்தினார். அவள் முஸ்லிமாக மாறியதை அறிந்து கொண்ட அசோகன் வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அப்போதைய நிலையில் வீட்டிற்கு சென்றால் தனது பெற்றோர்கள் மதம் மாறியதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை உணர்ந்த ஹாதியாவாக மாறிய அகிலா வீடு திரும்ப மனமில்லாமல் அங்கேயே இருந்தார்.

நெருக்கடிகள்  அதிகரிக்கவே, ஹாதியா தான் தங்கிருந்த வாடகை வீட்டை விட்டு தோழியின்  வீட்டிற்கு 2016, ஜனவரி மாதம் 7 அன்று சென்றார். யாருடைய நிர்ப்பந்தமும் இல்லாமல் தான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை ஹாதியா கூறிய போதும் தனது மகளை 2016 ஜனவரி 6 முதல் காணவில்லை என்று ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார் அசோகன். தனது மகளின் தோழிகள்அவளை கடத்தி இருக்கலாம் என்றும் தனது மனுவில் குறிப்பிட்டார். இதனிடையே இஸ்லாத்தின் சட்டதிட்டங்களை முறையாக கற்க ஹாதியா சத்திய சாரணி என்ற நிறுவனத்தில் சேர்ந்தார்.

ஹாதியாவின் மதமாற்றத்தில் நிர்ப்பந்தங்கள் ஏதுமில்லை என்பதை உறுதி செய்த நீதிமன்றம் அசோகனின் மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் ஹாதியா தனது இஸ்லாமிய படிப்பை சத்திய சாரணியில் தொடர அனுமதியளித்து சைனபா எனும் சமூக ஆர்வலரை ஹாதியாவுக்கு பாதுகாவலராக நியமித்தது.

அசோகன் 2016, ஆகஸ்டு மாதம் 17இல் அடுத்த ஆட்கொணர்வு மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.  இம்முறை தனது மகளை யாரோ ஏமாற்றி மதம் மாற்றிவிட்டனர் என்றும் அவளை தீவிரவாத அமைப்புகளில் சேர்த்து வெளிநாட்டிற்கு கடத்த இருப்பதாகவும் மனுவில் கூறினார். தனது நிலையை மீண்டும் விளக்கி தந்தைக்கு கடிதம் எழுதிய ஹாதியா, தான் தேச விரோத  செயல்களில் ஈடுபடுபவள் அல்ல என்றும் தந்தையின் குற்றச்சாட்டு தனக்கு மனவேதனையை அளிப்பதையும் குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே மலப்புரத்தை சேர்ந்த ஷஃபின் ஜஹான் என்பவரை  டிசம்பர் 19, 2016 அன்று ஹாதியா திருமணம் செய்தார். ஹாதியா ஏமாற்றப்பட்டு திருமணம் செய்யப்பட்டுள்ளார் என்று அசோகன் தரப்பு வழக்கறிஞர் கூறிய வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இத்திருமணத்தை செல்லாது என்று அறிவித்து தீர்ப்பளித்தனர். அத்துடன் ஹாதியாவிற்கு செல்ஃபோன் உள்ளிட்ட தொடர்பு சாதனங்களை கொடுக்கக் கூடாது என்றும் கூறி, அவரை கண்காணிக்க பெண் ஒருவரையும் நியமித்தனர். நீதிமன்றத்தின் இப்போக்கு கடும் கண்டனங்களை பெற்றது.

மனம் விரும்பி செய்து கொண்ட திருமணத்தை ‘செல்லாது’ என்று நீதி மன்றம் அறிவித்ததை பல்வேறு அமைப்புகள்,அரசியல் கட்சிகள்,வழக்கறிஞர்கள் கண்டித்தனர்.கணவர் ஷஃபின் ஜஹானின் ஃ பேஸ்புக் பதிவுகள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்றத்தின் உத்தரவை கண்டித்து முஸ்லிம்  கூட்டமைப்பு  சார்பாக உயர்நீதி மன்றத்தை நோக்கி கண்டன பேரணி நடத்தப்பட்டது.இதனை பலம் பிரயோகித்து தடுத்த காவல்துறை, ரமலான் மாதம் என்று கூட பாராமல் பேரணியில் கலந்து கொண்டவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.இதில் பலருக்கு காயம் ஏற்பட்டது.

உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக ஷஃபின் ஜஹான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.ஆகஸ்ட் 16 அன்று இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஹாதியா இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட சம்பவம் மற்றும் அவரின் திருமணம் தொடர்பாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய தேசிய புலனாய்வு குழுமமான என்.ஐ.ஏ.விற்கு உத்தரவிட்டதுடன் அந்த விசாரணையை உச்ச நீதிமன்ற நீதிபதி மேற்பார்வை செய்ய வேண்டும் என்றும் கூறியது.

18 வயதை பூர்த்தி செய்த ஒரு பெண், தான் விரும்பும் மதத்தை தேர்ந்தெடுத்து தான் விரும்பிய நபரை  திருமணம் செய்திருப்பதை நீதிமன்றம் தலையிட்டு தடை விதித்திருப்பது ஒரு மோசமான முன்னுதாரணமாக அமையும் என்பதே மக்களின் கருத்தாக உள்ளது. லவ் ஜிஹாத் என்று இல்லாத ஒன்றை கையில் எடுத்து தனது செயல்திட்டத்தை நிறைவேற்ற துடிக்கும் சங்பரிவார்களுக்கு கேரளாவை ஆளும் இடதுசாரி அரசும் இந்த விஷயத்தில் ஒத்துழைப்பு நல்கியுள்ளது தெளிவாக தெரிகிறது.

தற்போது பெற்றோர் வசம் உள்ள ஹாதியாவை மீண்டும் இந்து மதத்திற்கு திருப்புவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப் படுகின்றன. காவல் துறை பாதுகாப்பு மற்றும் ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் கண்காணிப்புடன் ஹாதியா தனது வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டுள்ளார்.அவரது உரிமைகள் முற்றிலும் மறுக்கப்படுகின்றன.அவரது மனதை மாற்றுவதற்காக  கவுன்சிலிங் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ்.யை  சேர்ந்த சிலர் முயற்சிக்கின்றனர். அனைத்து தடைகளையும் எதிர்கொண்டு ஹாதியா தனது போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார்.

(புதிய விடியல் செப்டம்பர் 16-30, 2017 இதழில் வெளியான கட்டுரை)

Comments are closed.