ஹாதியா வழக்கு: கேரள அரசு வழக்கறிஞர் மாற்றம்

0

கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் லவ் ஜிஹாத் என்ற குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட ஹாதியா வழக்கில் கேரள அரசு சார்பாக ஆஜரான வழக்கிஞரை மாற்ற கேரள அரசு முடிவு செய்துள்ளது. கேரள அரசின் இந்த முடிவு, உச்ச நீதிமன்ற விசாரணையின் போது மூத்த வழக்கறிஞர் V.கிரி NIA தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற காரணத்தினால் என்று கூறப்படுகிறது.

ஹாதியா வழக்கு விசாரணையின் போது ஹாதியாவின் கணவர் ஷஃபின் ஜஹான் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் இவ்வழக்கு தொடர்பாக ஹாதியாவின் கருத்தை முதலில் கேட்க வேண்டும் என்று கூறினார். அதற்கு எதிர் தரப்பு கடும் எதிர்ப்பை தெரிவித்தது. மேலும் NIA தரப்பு வழக்கறிஞர் தாங்கள் அவ்வழக்கு தொடர்பாக சமர்பித்த நூறு பக்க அறிக்கையை படித்த பின்னரே ஹாதியாவின் கருத்தை கேட்ட வேண்டும் என்று கூறினார். இந்நிலையில் இது தொடர்பாக கேரள அரசு வழக்கறிஞரின் கருத்தை நீதிபதி கேட்ட போது அவர் NIA சமர்பிக்கும் ஆவணங்களை பார்த்த பின்னர் ஹாதியாவிடம் கருத்து கேட்கலாம் என்று கூறியிருந்தார்.

மேலும் இந்த வழக்கு விசாரணையை குற்றப் பிரிவில் இருந்து NIA பொறுப்பெடுத்துக் கொள்வதற்கும் கேரளா சம்மதம் தெரிவித்திருந்தது. இதனையும் ஹாதியா வழக்கு விசாரணையின் போது NIA தரப்பு நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டியது.

இது குறித்து CPM பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் உட்பட பலர் தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளனர். கடந்த வியாழன் பத்திரிகை ஒன்றில் வெளியான பிருந்தா காரத்தின் கட்டுரை ஒன்றில் கூட ஹாதியா வழக்கில் வழக்கறிஞரின் நிலைபாடு சரி செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அக்கட்சியின் தேசிய தலைவர்கள் அந்த வழக்கறிஞரை மாற்ற வேண்டும் என்றும் மாநில அரசிடம் கலந்தாலோசித்துவிட்டு தாங்கள் இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்துளளனர். வழக்கறிஞர் கிரி அரசு தரப்பில் ஆஜராகும் போது அரசின் நிலைபாட்டையை அவர் தெரிவிக்க வேண்டுமே தவிர அவரது சொந்த விருப்ப வெறுப்பில் செயல்பட கூடாது, ஆனால் குறிப்பிட்ட இரண்டு சந்தர்பத்திலும் அது நடைபெறவில்லை என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.  இது தொடர்பாக வழக்கறிஞர் V.கிரியிடம் பத்திரிகையாளர்கள் கருத்து கேட்ட போது அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

இந்த வழக்கின் மறு விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் மூன்றாம் வாரம் வர இருக்கின்ற  நிலையில் வழக்கறிஞர் V.கிரியை மாற்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.