ஹாபுர் வழக்கு – முக்கிய குற்றவாளிக்கு பிணை

0
ஹாபுர் வழக்கு – முக்கிய குற்றவாளிக்கு பிணை
உத்தர பிரதேசம் மாநிலம் ஹாபுரில் பசு பயங்கரவாதிகளால் கடந்த மாதம் 19ஆம் தேதி காசிம் என்ற நபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். (பார்க்க புதிய விடியல் ஜூன் 16-30). இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான யுதிஸ்டர் சிசோதியாவிற்கு செசன்ஸ் நீதிமன்றம் அவர் கைது செய்யப்பட்ட 20 நாட்களில் பிணை வழங்கியுள்ளது.
வீடியோ பதிவுகள் மற்றும் இச்சம்பவத்தில் கடுமையாக தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சம்சுதீனின் வாக்குமூலம் ஆகியவற்றின் அடிப்படையில் 11 நபர்களுக்கு எதிராக காவல்துறை வழக்கு பதிவு செய்தது. பொதுவாக இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 302ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நபருக்கு எளிதில் பிணை கிடைக்காது. நீதிமன்றத்தின் உத்தரவில் தான் கருத்து கூற விரும்பவில்லை என்று ஹாபுர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சங்கல்ப் சர்மா கூறியுள்ளார். அடித்துக் கொலை செய்த வழக்காக காவல்துறை இதனை பதிவு செய்யாமல், தெருச் சண்டை வழக்காக பதிவு செய்ததுதான் குற்றவாளி எளிதாக பிணை கிடைக்க காரணமாக அமைந்தது என்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
முக்கிய குற்றவாளி வெளியே வந்ததை தொடர்ந்து மற்றவர்களும் விரைவில் வெளியே வந்துவிடுவார்கள் என்று கூறும் அவர்கள் தங்களின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை என்றும் அஞ்சுகின்றனர். எதிர் தரப்பினர் தங்களுக்கு எதிராக ஒரு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து கொலை வழக்கை ரத்து செய்ய எங்களுடன் பேரத்தில் ஈடுபடலா ம் என்று சம்சுதீனின் சகோதரர் யாசின் கூறினார்.
இந்த வழக்கில் யுதிஸ்டருடன் சேர்த்து நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டனர். ஏழு நபர்கள் இன்னும் தலைமறைவாக உள்ளனர்.

Leave A Reply