ஹாபூர் படுகொலை: சாட்சியின் வாக்குமூலத்தை போலியாக தயாரித்த காவல்துறை

0

ஹாபூர் படுகொலை: சாட்சியின் வாக்குமூலத்தை போலியாக தயாரித்த காவல்துறை

ஹாபூர் படுகொலையின் முக்கிய சாட்சியான சமியுத்தீன், அந்த படுகொலை குறித்து தன்னிடம் எந்த ஒரு வாக்குமூலமும் பெறாமலேயே உத்திர பிரதேச காவல்துறை தனது பெயரில் போலியான வாக்குமூலம் ஒன்றை தயார் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், “என்னிடம் இருந்து காவல்துறை வாக்குமூலம் எதையும் பெறவில்லை. நான் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த போது சில நேரங்களில் சுயநினைவுடனும் சில நேரங்களில் சுயநினைவற்ற நிலையிலும் இருந்தேன். அப்போது நான் சரியான நிலையில் இல்லை. ஒன்றிரண்டு முறை காவல்துறை என்னிடம் வந்து வாக்குமூலம் தருமாறு கேட்டனர். அந்த நேரத்தில் நான் வாக்குமூலம் தரும் நிலையில் இல்லாததால் அவர்களிடம் தர இயலாது என்று கூறினேன்.” என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் தனது அனுமதியின்றி முறிவுற்ற தனது கையில் உள்ள விரல் ரேகையை யாரோ ஒருவர் ஒரு காகிதத்தில் பதிவு செய்தார் என்றும், அப்போது தான் முழுமையான சுய நினைவில் இருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சமியுத்தீனின் கூற்று உண்மையாக இருக்கும் பட்சத்தில் உத்திர பிரதேச காவல்துறை போலியான வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளது. இது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 192-196 இன் படி தண்டனைக்குரியதாகும்.

சமியுத்தீனின் இந்த கூற்றை குறித்து விபரம் கேட்டு அறிந்துகொள்ள ஹாபூர் காவல்துறை கண்காணிப்பாளர் சங்கல்ப் ஷர்மாவை பத்திரிகையாளர்கள் தொடர்பகொள்ள முயன்றும் பலன் இல்லை.

பசுவை அறுக்கிறார்கள் என்று போலியாக குற்றம் சாட்டப்பட்டு சமியுத்தீன் மற்றும் அவரது நண்பர் காசிம் ஆகியோர் வன்முறை கும்பலால் தாக்கப்பட்டனர். அதில் காசிம் உயிரிழந்தார். ஆனால் இந்த மோதல் இரு சக்கர வாகன விபத்தால் ஏற்பட்டது என்று கூறி உத்திர பிரதேச காவல்துறை அதனை திசைமாற்றியுள்ளது. காவல்துறையின் இந்த நிலை குறித்து கருத்து தெரிவித்த சமியுத்தீனின் வழக்கறிஞர் விரிந்தா கிறோவர், “காவல்துறையினர் பொய்யுரைகின்றனர். அவர்கள் கூறும் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை.” என்று தெரிவித்துள்ளார்.

தனக்கு நிகழ்ந்த கொடுமை குறித்து சமியூத்தீன் விளக்குகையில், “நான் அவர்களிடம் என்ன பிரச்சனை என்று தான் கேட்டேன். அதற்கு அவர்கள் உனக்கு சரியான பாடம் கற்பிக்கின்றோம் முல்லா என்று கூறி என் தாடியை பிடுங்க முயற்சித்தனர். மேலும் என் மீது உமிழ்ந்து என்னை கடுமையாக தாக்கினர்.” என்று தெரிவித்துள்ளார்.

வன்முறை கும்பலின் தாக்குதலால் நிலைகுழைந்து போன சமியுத்தீன் தனது கண்ணை கூட திறந்து பார்க்க இயலாத நிலையில் பிணம் போல தரையில் விடப்பட்டதாக தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு சுமார் ஒன்று அல்லது இரண்டு மணிநேரத்திற்குப் பிறகு வந்த காவல்துறை எழுந்து கூட நிற்க இயலாத தன்னை அவர்கள் வாகனத்தில் ஏற்றி கொண்டு சென்றனர் என்றும் அப்போது தான் கடுமையான வேதனையில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் இருந்த போது தான் சுயநினைவாற்ற நிலையில் இருந்ததாகவும் அப்போது சிலர் தனது முறிந்த கையில் இருந்து கைவிரல் ரேகையை ஒரு காகிதத்தில் பதிவு செய்ததாகவும் அவர்களின் அந்த செயல் தனக்கு கடுமையான வலியை தர அப்போது தனக்கு சிறிது நினைவு திரும்பியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜூலை மாதம் 6ஆம் தேதி வரை தேவ் நந்தினி மருத்துவமனையில் தான் அனுமதிக்கப் பட்டிருந்த்ததாகவும் அப்போது தன்னிடம் வாக்குமூலம் வாங்குவதற்கு காவல்துறையினர் எவரும் வரவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் காவல்துறை தாங்கள் சமியுத்தீனிடம் இருந்து வாக்குமூலம் பெற்றுவிட்டதாகவும் அவர் தன்னை தாக்கியவர்களில் யுதிஸ்டர் சிங் என்பவரின் பெயரை குறிப்பிட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இத்துடன் சமியுத்தீனின் குடும்பத்தினர், காவல்துறை சமியுத்தீனின் இளைய சகோதரரான யாசினை பில்குவா காவல் நிலையத்தில் போலியான முதல் தகவல் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ய வற்புறுத்தியதாக தெரிவித்துள்ளனர்.

தங்களின் சகோதரர் எங்கே என்று காவல்துறையினரிடம் தாங்கள் கேட்டதற்கு காவல்துறையினர் ஏறத்தாழ ஐந்து மணி நேரம் மீண்டும் மீண்டும் கூறியதையே கூறிக்கொண்டு இருந்தனர் என்று தெரிவித்துள்ளனர். மேலும் முதலில் தங்களது சகோதர் சாலை விபத்து ஒன்றினால் காயமடைந்ததாக அறிக்கை ஒன்றை காவல்துறையிடம் வழங்க அவர்கள் வற்புறுத்தினாகள் என்று யாசின் தெரிவித்துள்ளார். காவல்துறை கூறுவதற்கு ஒப்புக்கொள்ளவில்லையென்றால் தங்களது மொத்த குடும்பத்தையும் பசுவதை குற்றம் சுமத்தி சிறையில் தள்ளிவிடுவதாகவும் கையெழுத்து இட்டால் மட்டுமே தனது சகோதரரை காண அனுமதிப்பதாகவும் காவல்துறை மிரட்டியதாக அவர் தெரிவித்துள்ளார். தங்களுக்கு வேறு வழியில்லாத காரணத்தால் அவர்கள் கூறிய இடத்தில் கையெளுத்து இட வேண்டியதாயிற்று என்று யாசின் தெரிவித்துள்ளார்.

Comments are closed.