ஹாஷிம்புரா – ஒரு அரச பயங்கரவாதம்

0

 
ஜி.அத்தேஷ்

உத்தர பிரதேசம், மீரட் நகர் அருகில் இருக்கும் ஹாஷிம்புரா முஸ்லிம் குடியிருப்பில் இருந்த முஸ்லிம் இளைஞர்கள் 48 பேரை 1987, மே 22 ஆம் நாள் Provincial Armed Constabulary (PAC) என்ற படையினர் பிடித்துக் கொண்டு போய் சுட்டதில் 42 பேர் கொல்லப்பட்டனர்;. 6 பேர் உயிர் தப்பினர். இது தொடர்பாக 28 ஆண்டுகள் நடந்து வந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 19 PAC வீரர்களில் 16 பேரை அமர்வு நீதிமன்றம் விடுத்திருக்கிறது. அவர்களில் மூன்று பேர் விசாரணை காலத்தில் இறந்து போனார்கள். குற்றத்தை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதால் இவர்களை விடுதலை செய்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
கூடுதல் அமர்வு நீதிபதி சஞ்சய் ஜிண்டால் தனது தீர்ப்பில், குற்றவாளிகளை அடையாளம் காட்ட முடியாமல் போனதால் சந்தேகத்தின் பலனை குற்றவாளிகளுக்கு கொடுத்து 16 பேரையும் விடுவிப்பதாக கூறியிருக்கிறார். தீர்ப்பு 250 பக்கங்களில் எழுதப்பட்டிருக்கிறது.
அந்த அரச பயங்கரவாதத்தின் கதை
1987 ஆம் வருடம், மே மாதம் 22 இரவில், மீரட் நகரில் இருந்து 2 கி.மீ தூரத்தில் இருக்கும் ஹாஷிம்புரா என்ற இடத்தில் இருந்து 42 முஸ்லிம்களை அழைத்துச் சென்ற காவல் துறையினர் சுட்டுக் கொன்றார்கள். இச்சம்பவத்திற்கு முன்பு இரவு 9.30 மணியளவில் 23 வயதான பிரபாத் கௌசிக் என்ற ஆர்.எஸ்.எஸ் ஊழியர் தனது அத்தை சகுந்தலா கௌசிக் வீட்டின் மாடியில் நின்றிருந்து போது சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற ஒரு புகார் அருகிலுள்ள சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. சகுந்தலா கௌசிக் அந்த நேரத்தில் தீவிர பா.ஜ.க. தலைவராக இருந்தார். பிரபாத் கௌசிக்கை ஹாஷிம்புராவை சேர்ந்த முஸ்லிம் ஒருவர் தான் சுட்டுக் கொலை செய்திருக்க வேண்டும் என்ற செய்தி பரவியது.
இதனால் ஆத்திரமுற்ற பிரபாத்தின் சகோதரர் மேஜர் சதீஷ் சந்திரா கௌசிக் ஹாஷிம்புராவில் வீடுவீடாக சோதனை நடத்தினார். அச்சமயம் சதீஷ் சந்திரா மீரட்டில் பணியில் இருந்தார். சதீஷ் சந்திராவுடன் மேஜர் பி.எஸ். பத்தானியா, மற்றும் கர்னல் P.P.சிங் இருவரும் சோதனையில் ஈடுபட்டனர். அது சோதனையில்லை. மனித வேட்டைக்கு முந்தைய தேடுதல் வேட்டை.
முஸ்லிம் இளைஞர்களை வீடுகளில் இருந்து இழுத்து வந்து, உத்தர பிரதேச மாநில அரசு உருவாக்கியிருந்த பி.ஏ.சி. என்ற சிறப்பு காவல் படையிடம் ஒப்படைத்தார்கள். இப்படை 42 முஸ்லிம் இளைஞர்களை ரத்த வெள்ளத்தில் சுட்டுக் கொன்றனர். திட்டமிட்டும் ஆணவத்தோடும் செய்யப்பட்ட இந்த படுகொலைகள்தான் சுதந்திர இந்திய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய தடுப்பு காவல் கொலைகள். பிரபாத் கௌசிக்கின் மரணம் தான் இந்திய இராணுவமும், உ.பி.யின் பி.ஏ.சி.யும் சேர்ந்து கொடூரமான கொலைச்சதியில் ஈடுபடக் காரணம். இதற்கான ஆவணம் தன்னிடம் இருப்பதாக அவுட்லுக் வார இதழ் கூறுகிறது. எப்படியிருப்பினும், மார்ச் மாதம் தில்லி அமர்வு நீதிமன்றம், பி.ஏ.சி. வீரர்கள் 16 பேரையும் போதுமான ஆதாரம் இல்லையென்று விடுதலை செய்திருக்கிறது. இதன் மூலம் இக்கொடுங் குற்றத்தில் இராணுவத்துக்கும் பி.ஏ.சி. வீரர்களுக்கும் உள்ள பங்கை நீதிமன்றம் நறுக்கி எரிந்து விட்டது.
மேஜர் கௌசிக் சம்பவ இடத்தில் இருந்தார் என்ற தகவல், உ.பி.யின் CB-CID (Crime Branch – Crime Investigation Department) பதிவு செய்த முதல் ரகசிய ஆவணத்தில் இருந்திருக்கிறது. அது பிரதமர் அலுவலகத்திலும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அப்போது ராஜீவ் காந்தி பிரதம மந்திரியாக இருந்தார். மீரட்டில் மிகப்பெரிய சமூக கொந்தளிப்பு இருந்தது.
1989, ஜுன் 22-ல் சிபிசிஐடி பிரிவில் கண்காணிப்பாளராக இருந்த எஸ்.கே. ரிஸ்வி எழுதிய ஒரு அறிக்கையில்,
‘சம்பவம் நடந்த உடனேயே, மேஜர் சதீஷ் சந்திராவின் சகோதரர் ஒருவர் 21-05-1987 அன்று ஹாஷிம்புரா மொகல்லாவில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற ஊகம் பத்திரிக்கையாளரிடத்தில் இருந்தது. மேஜர் சதீஷ் சந்திரா கௌசிக் தனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட வருத்ததை தொடர்ந்து, ஹாஷிம்புராவில் குடியிருந்தவர்களை வட கங்கா மற்றும் ஹிண்டான் கணவாய்களில்; வைத்து கொன்று விட்டார் என்றும் சொல்லப்பட்டது’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மேஜர் கௌசிக் மீது சந்தேகத்தின் நிழல் படிந்திருந்தாலும் சிபிசிஐடி அவரிடம் விசாரணை செய்யவில்லை. அவரிடம் வாக்குமூலம் கூட பெற்று பதியவில்லை. அவரிடம் சோதனையிடுவதற்காக நீதிமன்ற ஆணையும் பெறவில்லை. கௌசிக்கின் தந்தையான தீப் சந்திர சர்மாவிடம் வாக்குமூலம் பதிவு செய்திருக்கின்றனர். அதை தாண்டி விசாரணை அதிகாரிகள் பெரிதாக எதுவும் செய்யவில்லை.
‘பிரதாப் கௌசிக்கின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை. அன்றைய கலவரச்சூழலில் அறிக்கை பெறுவதில் தாமதம் ஏற்பட்டிருக்கலாம்’ என்கிறார் பிரதாப் கௌசிக்கின் தந்தை தீப் சந்திர சர்மா. இந்த வழக்கு விசாரணையில், ஹாஷிம்புராவில் வீடு வீடாக சோதனை மேற்கொண்ட இராணுவம் மற்றும் சி.ஆர்.பி.எப். அதிகாரிகளின் வாக்குமூலங்கள் மிகவும் முக்கியமானவை. இருப்பினும் இராணுவம் மற்றும் சி.ஆர்.பி.எப். அதிகாரிகளிடம,; அதற்கான ஆவணங்கள் கேட்டு தொடர்ச்சியான வேண்டுகோள் வைத்த போதும் இதுவரை எந்த அதிகாரியும் தங்கள் வாக்குமூலங்கள் தொடர்பாக எந்த பதிலும் கொடுக்கவில்லை.
மறுபுறம், மீரட்டில் இருக்கும் சப் ஏரியா ஹெட் குவார்டர்சில் இருந்து வந்த ஒரு பதிலில், ‘இராணுவம் மற்றும் சி.ஆர்.பி.எப். அதிகாரிகளின் வாக்குமூலங்கள் பெற முயற்சி நடந்து கொண்டிருப்பதாகவும், கொஞ்சம் அவகாசம் வேண்டும்’ என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த அதிர்ச்சிகரமான தகவல்தான் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப் பட்டிருக்கிறது. இவையெல்லாம் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? அல்லது அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பதெல்லாம் தெரியவில்லை. பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட தொடர்ச்சியான ஆவணங்களில், மேஜர் கௌசிக்கின் பங்கு குறித்து எதுவும் சொல்லப்படவில்லை.
காரணமேயில்லாமல் 27 வருடங்கள் இழுத்தடிக்கப்பட்ட இந்த வழக்கிற்கு தேவையான வாக்குமூலங்கள் எதுவும் இன்று வரையிலும் எந்த இராணுவ அதிகாரியிடமிருந்தும் பதிவு செய்யப்படவில்லை. இந்த வழக்கு விசாரணை முப்பதாண்டுகளுக்கு நெருக்கமான காலத்தை விழுங்கிவிட்டது. எனினும் இந்த படுகொலைகளில் மேஜர் கௌசிக்கிற்கு இருக்கும் பங்கு முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது. ஹாஷிம்புராவில் வீடுகளை சோதனையிட உத்தரவிட்ட மேஜர் பத்தானியாவை விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக கூறி தொடர்ச்சியாக நீதிமன்ற அழைப்பானை விடுத்தும் 2013, நவம்பரில் பாதுகாப்பு அமைச்சகத்துக்கும் முறைப்படி அறிவிப்பு செய்தும் கூட இராணுவம் மேஜர் பத்தானியாவை ஆஜராக கூறவில்லை.
சமூகத்தின் கவனத்தையும், பி.ஏ.சி.யின் இரக்கமற்ற கொலைகளையும் திசை திருப்புவதற்குத்தான் சிபிசிஐடியின் அறிக்கை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறது என்று பலரும் நம்புகின்றனர். எதுவாயினும் பலமான சந்தேகங்களும் அதிகாரிகளின் கடமை விடுதல்களும் ராஜீவ் காந்தியின் பிரதமர் அலுவலகத்தின் கவனத்திற்குப் போய் இருக்கிறது. ஆனால் பிரதமர் அலுவலகம் அந்த ஆவணங்களை வெளியிடாமல் மறைத்ததுடன் படுகொலைகள் திடமாக விசாரிகப்பட வேண்டும் என்பதற்கு எந்த ஏற்பாடும் செய்யவில்லை. ஷாபானு வழக்கு மற்றும் அயோத்தியில் கோயில் கட்டும் பிரச்சனைகள் ஹாஷிம்புரா படுகொலைகளை பின்னுக்குத் தள்ளிவிட்டது.
காஜியாபாத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த விபூதி நாராயண் ராய்தான் இந்த வழக்கை முதலில் விசாரிக்கப் சென்றவர். விபூதி நாராயண் ராய், தான் எழுதும் ஒரு நூலுக்காக, இரண்டு வருடங்களுக்கு முன்னர் மேஜர் கௌசிக்கின் அத்தை சகுந்தலா கௌசிக்கை பலமுறை அவரது வீட்டில் வைத்து சந்தித்திருக்கிறார். அப்போது சகுந்தலாவுக்கு 75 வயது. 1987 மே 22ஆம் நாள் நடைபெற்ற தொடர்ச்சியான சம்பவங்களை புரிந்து கொள்ளும் முயற்சியாக ராய் சகுந்தலாவை சந்தித்திருக்கிறார். அவர் கூறுகிறார்.
‘நான் அவரிடம் சங்கடம் தராத கேள்விகளையே கேட்டேன். அதற்கு அவர், இளைய மருமகன் பிரபாத் கௌசிக் ஹாஷிம்புரா முஸ்லிம்களால் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப் பழியாக அந்த கொலைகள் எவ்வாறு நடந்தன என்று கூறினார். நான் ஒரு நூலாசிரியனாக அவரிடம் பேசும் போது ஏராளமான தகவல்களை பெறமுடிந்தது. ஹாஷிம்புரா படுகொலைகள் தனிப்பட்ட நபரின் பழிவாங்கும் செயலாக இருக்கும் போது ஒரு சட்ட அமைப்பான சிபிசிஐடி கொலைகளின் உண்மை தன்மையை கண்டு பிடிக்க முடியவில்லையென்று சொல்வதை என்னால் நம்ப முடியவில்லை’ என்கிறார் ராய். தனது நூலுக்காக 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஹாஷிம்புரா படுகொலைகள் பற்றி தனிப்பட்ட விசாரணைகளை ராய் செய்து வருகிறார்.
சட்டத்தை ஏமாற்றுவதற்காக நடந்த வெளிப்படையான பல செயல்களில் இதுவும் ஒன்று. குற்றம் செய்தவர்கள் தண்டனையில் இருந்த தப்பவேண்டும் என்பதற்காக சிபிசிஐடி வேண்டுமென்ற கடமையில் இருந்து தவறியிருக்கிறது.
அன்று உத்தர பிரதேச முதல்வராக இருந்த வீர் பகதூர் சிங்குக்கும் படுகொலைகள் செய்த பி.ஏ.சி. படைக்கும் இக்கொலைகளில் ரகசியமான கூட்டுறவு இருந்தது என்பதை பிரதமர் அலுவலகம் முழுமையாக அறிந்திருந்தது என்று ராஜீவ் காந்தியின் அரசில் மிகப் பெரிய பொறுப்பில் இருந்த அதிகாரிகளே கூறுகிறார்கள். அப்போது உ.பி.யில் பதட்ட சூழல் ஏற்பட்டதற்கும் முதல்வர் வீர் பகதூர் சிங்தான் பொறுப்பு என்றும் குற்றம் சாட்டப்பட்டது.
கொலைகள் நடந்த சிலமணி நேரங்களுக்குள் அதாவது 1987, மே 23ம் தேதி அதிகாலை 4 மணியளவில் மீரட்டில் இருக்கும் அரசு விருந்தினர் இல்லத்தில் முதல்வர் வீர் பகதூர் சிங்கும் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் 12 பேரும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பேச கூடினர். விபூதி நாராயண் ராயும் அக்கூட்டத்தில் ஒரு அதிகாரியாக கலந்து கொண்டார்.
மீரட்டில் 5000 வீரர்களை கொண்டதாக இருந்த பி.ஏ.சி. முகாமில் வெளிப்புற உதவியுடன் கொலை குற்றவாளிகளை கைது செய்வது பற்றி ராய பேசினார். அப்படி செய்திருந்தால் இதுவரையிலும் கிடைக்காத ஆதாரத்தை பெற்றிருக்க முடியும்.
‘குற்றவாளிளை உடனடியாக கைது செய்ய முடியும் என்று முதல்வருக்கு நம்பிக்கை ஊட்டினோம். இருப்பினும் அங்கு வந்திருந்த பெரும்பாலான அதிகாரிகள் சம்மதிக்காத காரணத்தால் குறித்த நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் போனது’ என்கிறார் ராய்.
காஜியாபாத் மாவட்ட ஆட்சியராக இருந்த நசீம் ஜைதியும், அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த விபூதி நாராயண் ராயும், சம்பவம் நடந்தவுடனேயே கொலையில் சம்பந்தப்பட்ட வீரர்கள் தங்கியிருந்த இராணுவ தலைமையகத்திற்கு சென்றுள்ளனர். இருப்பினும் யாரையும் கைது செய்ய அவர்கள் அனுமதிக்கப்பட வில்லை. பதிவு எண் ருசுரு 1493 என்ற மஞ்சள் நிற டிரக்கை அங்கு கண்டுள்ளார். அதில் வைத்துதான் ஹாஷிம்புரா இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அந்த வண்டி கழுவப்பட்டு இருந்தது. ரத்தம் கலந்த தண்ணீர் வாகனத்தை சுற்றிலும் கிடந்தது. அந்த டிரக் வண்டியின் பயணக்குறிப்பேடும் திருத்தி எழுதப்பட்டிருந்து. இந்த விபரம் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட சிபிசிஐடி-யின் ரகசிய குறிப்பிலும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
திடீரென ராய் காசியாபாத்தில் இருந்து மாற்றப்பட்டார். ஹாஷிம்புரா சம்பவத்தை தொடர்ந்து அடுத்த மூன்று மாதங்களுக்கு அவருக்கு எந்த பொறுப்பும் கொடுக்கப்படவில்லை. கொலைகள் நடந்;த 36 மணி நேரத்தில் ராயிடம் இருந்து சிபிசிஐடி-க்கு வழக்கு மாற்றப்பட்டது. ‘வழக்கமாக ஒரு வழக்கை சிபிசிஐடி-யிடம் ஒப்படைப்பது நல்ல முடிவுதான். இருப்பினும், இந்த வழக்கில் அவர்கள் தொடக்கத்தில் இருந்தே குற்றவாளிகளுக்கு சாதகமாக நடந்துக் கொண்டனர்’ என்கிறார் ராய்.
இதன் பின்னர், படுகொலைகள் முழுவதும் சத்தமில்லாமல் அமுக்கப்பட்டன. ஒரு வாரம் முழுவதும் பத்திரிக்கைகளுக்கே செய்தி தெரியாமல் போனது. உண்மையில், சம்பவம் நடைபெற்ற மறுநாள், மாவட்ட நிர்வாகத்தில் இருந்தவர்கள் நவபாரத் டைம்ஸ் என்ற நாளிதழுக்கு செய்தியை கசிய விட்டனர். ஆனால் அன்று அதன் ஆசிரியராக இருந்தவர் இச்செய்தியை வெளியிட மறுத்து விட்டார். இறுதியாக சௌத்தி துனியா என்ற நாளிதழ் ஹாஷிம்புரா படுகொலைகள் பற்றிய செய்தியை 1987, மே 29ஆம் நாள் வெளிப்படுத்தியது. அதன் பிறகுதான் தேசிய பத்திரிக்கைகளும் சர்வதேச பத்திரிக்கைகளும் ஹாஷிம்புரா சம்பவத்தை வெளியிட்டன.
பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக, மூத்த வழக்கறிஞர் ரெபேக்கா ஜான் என்பவர் அமர்வு நீதிமன்றத்தில் வழக்காடி வந்தார். ‘சம்பவம் நடந்து ஒன்பது வருடங்களுக்கு பின்னர்தான் சிஐடி இறுதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. சிக்கலான வழக்குகளிலும் 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று குற்றவியல் சட்டம் உத்தரவிடுகிறது. ஓன்பது ஆண்டுகள் கழித்து தாக்கல் செய்யப்பட்ட இந்த குற்றப்பத்திரிகை கூட கண் துடைப்பே அன்றி வேறில்லை. ஏறக்குறைய இந்த குற்றப்பத்திரிகையும் கூட பிஏசி இந்த வழக்கில் தவறாக சேர்க்கப்பட்டிருக்கிறது என்பதை காட்டுவதற்காகத்தான் தாக்கல் செய்யப்பட்டது’ என்கிறார் ரெபேக்கா ஜான்.
குற்றவாளிகளின் அடையாளங்களை உறுதி படுத்துவதற்கும், நீதி வழங்குவதற்கும் அவசியமான அனைத்து இணைப்பு ஆதாரங்களையும் தாக்கல் செய்ய சிபிசிஐடி தவறிவிட்டது. மேலும், சுட்டுக் கொல்வதற்கு பி.ஏ.சி. பயன்படுத்திய ஆயுதங்கள் அவர்களிடமே திருப்பி கொடுக்கப்பட்டது. அந்த ஆயுதங்களை அவர்கள் பயன்படுத்தவும் அனுமதிக்கப்பட்டது. இது முற்றிலும் பொருத்தமற்ற செயல் என்கிறார் வழக்கறிஞர் ரெபேக்கா ஜான். குற்றத்தில் சம்பந்தப்பட்ட ஆயுதங்களை பொதிந்து நீதிமன்றத்தில் ஒப்படைக்காததும் இந்த வழக்கில்தான் முதன் முறையாக நிகழ்ந்தது. பி.ஏ.சி. அந்த ஆயுதங்களை பயன்படுத்தியதால் மேற்கொண்டு ஆதாரங்கள் எதையும் சேகரிக்க முடியவில்லை. அரசு தரப்பு வாதத்திற்கு உதவக்கூடிய வகையில் சிபிசிஐடி எதனையும் வழங்கவில்லை.
இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்திலிருந்து cartridge எனப்படும் வெடிக்கலன் எதையும் கைப்பற்றவில்லை. அதிகாரி பி.கே.சதுர்வேதி உள்ளிட்ட பி.ஏ.சி.-யின் பல அதிகாரிகள் பல பாலிகிராப் சோதனைக்காக அழைக்கப்பட்டிருந்தனர் என்றே சிபிசிஐடி-யின் அறிக்கையில் பதிவு செய்கிறது. இருப்பினும் இவர்கள் விசாரணைக்கு ஆஜராக மறுத்துள்ளனர்.இதன் மீது சிபிசிஐடி மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
19 குற்றவாளிகளில் அதிமூத்த அதிகாரிகள் என்பவர்கள் உதவி ஆய்வாளர் என்ற பதவியில்தான் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொலைகள் செய்வதற்கான உத்தரவுகள் ஒரு உயரதிகாரியிடமிருந்துதான் வந்திருக்க வேண்டும். ஆனால், சிபிசிஐடி ஒரு போதும் இந்த தடத்தில் விசாரணையை தொடரவில்லை. குற்றத்திற்கு பின் இருந்த நோக்கத்தை வெளிப்படுத்த அவர்கள் அக்கறை கொள்ளவே இல்லை. ஒரு பெரிய சதி பற்றி அவர்கள் எந்த கேள்விகளையும் கேட்கவில்லை. சிபிசிஐடி-யால் பதிவு செய்யப்பட்ட அரசு தரப்பு வாதத்தை பலப்படுத்துவதற்கு பதிலாக சாட்சிகளின் விசாரணைகள் கூட அதிக பட்சமாக பி.ஏ.சி.-யை காப்பாற்றும் விதத்தில்தான் இருந்தது என்று காவல்துறை தரப்பு கூறுகிறது. குற்றவாளிகளுக்கு ஜாமீன் கூட உடனடியாக கொடுக்கப்பட்டது.
இவ்வாறாக அரசு, அரசியல் கட்சிகள், காவல்துறை, மற்றும் விசாரணை அமைப்புகளின் கூட்டுச் சதிகளால் ஆதாரங்கள் அழிக்கப்பட்டன. விசாரணைக்கு உரிய முறைகள் புறக்கணிக்கப்பட்டன. 27 ஆண்டு காலம் நீடித்த ஒரு விசாரணையில் கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்திற்கு எந்த ஒரு முடிவையும் தர அரசு மற்றும் நீதித்துறை மறுத்துள்ளது.
‘நேரில் கண்ட சாட்சிகளில் ஐந்து பேரை தவிர வழக்கு விசாரணையில் வேறு எந்த பிடிமானமும் எம்மிடம் இல்லை. இது இந்த வழக்கு விசாரணையில் நடந்த மிகப்பெரிய முறைகேடு. அதற்கு சிபிசிஐடி-யே காரணம். தீர்ப்பில் இது கூறப்பட்டிருக்க வேண்டும். இது விசயத்தில் நீதிமன்றம் ஒரு உள் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும். சிபிசிஐடி-யின் மீது பொறுப்பை சுமத்தியிருக்க வேண்டும். ஆனால் நீதிமன்றத்தின் தீர்ப்பில் இது எதுவுமே காணப்படவில்லை’ என்கிறார் ரெபேக்கா ஜான்.
‘நேரில் கண்ட சாட்சிகள் குற்றவாளிகளை அடையாளம் காட்ட தவறிவிட்டார்கள். இருப்பினும், 16 குற்றவாளிகளையும் தண்டிப்பதற்கு நம்பகமான ஆதாரங்கள் போதுமான அளவு இருக்கின்றன’ என்றுள்ளார். குற்றம்சாட்டப்பட்டவர்கள் சம்பவ தினத்தன்று தலைக்கவசம் அணிந்திருந்ததால் அவர்களை சாட்சிகளால் சரியாக அடையாளம் காட்ட முடியவில்லை.
காவலர்கள் தாறுமாறாக சுட்டதில் ஆறு பேர் உயிர் பிழைத்தனர். அவர்களில் இப்போது உயிருடனுள்ள ஐந்து பேரை சாட்சியாக ஜான் காட்டியுள்;ளார். துப்பாக்கிச் சூட்டின் போது அவர்களுக்கு ஏற்பட்ட காயங்களை ஆதாரமாக காட்டியும் நீதிமன்றம் அதனை ஏற்கவில்லை. நடந்த சம்பவங்களை இடைவிடாது கோர்ப்பதற்கு இது போதுமானதாக இல்லை என நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
‘இது குற்றவியல் நீதிமுறைக்கு ஏற்பட்ட தோல்வி. இது அரசு மற்றம் விசாரணை தரப்பு செய்த தவறு. இந்த வழக்கு வேண்டுமென்றே தோல்வி அடையச் செய்யப்பட்டிருக்கிறது. சிறப்பு அரசு வழக்கறிஞரை நியமிக்கவே 15 ஆண்டுகள் ஆனது. அந்த நேரத்தில் வழக்கு விசாரணை தில்லிக்கு வந்தது. அதற்குள்ளாகவே பலமான சாட்சிகள் அனைவரும் இறந்து விட்டார்கள். வலுவான ஆதாரங்களும், ஆவணங்களும் தொலைந்து விட்டன. நீதியை சீர்குலைக்க வேண்டும் என்பதற்காக, வேண்டுமென்றே திட்டமிட்டு ஆதாரங்களையும், ஆவணங்களையும் அரசு தரப்பு பதிவு செய்யாமல் விட்டதனால்தான் இந்த வழக்கு தோற்றுப் போனது. அதற்காகத்தான் 28 வருடங்கள் கழித்து தீர்ப்பு சொல்லப்பட்டிருக்கிறது. குற்றவியல் நீதிமுறை இந்த வழக்கை நடத்திய விதம் காவல்துறையில் இருக்கும் கயவர்களுக்கு ஊக்கம் தரும்’ என்றும் ரெபேக்கா சாடியுள்ளார்.
இந்த தீர்ப்பு பற்றி அகிலேஷ் யாதவின் உ.பி.மாநில அரசு எந்த கருத்தும் கூறவில்லை. சமாஜ்வாதி கட்சியும் அதன் தலைவர் முலாயம்சிங் யாதவும் எந்த கருத்தும் கூறவில்லை. இருவரும் திட்டமிட்டு மௌனமாக இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. எப்போதும் மதச்சார்பின்மை பேசும் சமாஜ்வாதி கட்சி இத்தீர்ப்பு பற்றி கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு, வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட பி.ஏ.சி. வீரர்கள் 16 பேரும் யாதவர் சமூகத்தவர்கள் என்ற கருத்து உத்தர பிரதேச முஸ்லிம்கள் மத்தியில் பெருகி வருகிறது. அனைத்;திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியமும் முலாயம் சிங்கின் மௌனம் பற்றி கேள்வி எழுப்பியுள்ளது. சம்பவம் நடைபெற்ற காலத்தில் முலாயம் சிங் எதிர்கட்சி தலைவராக இருந்தார். இப்பிரச்சனையை வைத்து சட்டமன்றம் நடக்க விடாமல் முடக்கினார். அவர் ஏன் இப்போது பேசாமலிருக்கிறார் என்ற கேள்வி எழுகிறது.
மாநில அரசு மேல் முறையீட்டிற்கு செல்லும் என்ற நம்பிக்கையுடன் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். ‘நாங்கள் இதுவரை தீர்ப்பை படித்து பார்க்கவில்லை. மாநில சட்டத்துறை இது விஷயத்தில் ஆலோசிக்கும். அதுதான் முறை’ என்கிறார் கூடுதல் அரசு வழக்கறிஞர் ஜபர்யாப் ஜீலானி. இவர் அணைத்;திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் சட்ட ஆலோசகர். ஆனால் முலாயம் மற்றும் அகிலேஷிடமிருந்து மாநில சட்டதுறைக்கோ, உள்துறைக்கோ அதுபற்றி எந்த உத்தரவும் வரவில்லை. ஆனால் ஒரு அதிகாரி, அரசுக்கு கொஞ்சம் அவகாசம் வேண்டுமென்று கூறியுள்ளார்.
இந்த 28 ஆண்டுகாலத்தில் உத்தர பிரதேசத்தை காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், பா.ஜ.க. என அனைவரும் ஆட்சி செய்துள்ளனர். ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் யாரும் கவனம் செலுத்தவில்லை. வழக்கை நீர்த்துப் போக செய்வதற்கான வேலைகளைதான் அனைவரும் செய்துள்ளனர்.
இப்போது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டு விட்டனர். அப்படியென்றால் அன்றைய தினம் அந்த முஸ்லிம்களை கொலை செய்தது யார்?

கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்

*  குற்றம் சாட்டப்பட்ட 16 பேரும் இதுவரையிலும் பணியில் இருந்து வருகின்றனர்.
*  குற்றம் சாட்டப்பட்டவர்கள் பணி இடைநீக்கம் செய்யப்படவில்லை.
*  ஒரு போதும் துறை ரீதியிலான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
*  1994 ஆம் ஆண்டு, சிபிசிஐடி-யின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அதை ஒரு போதும் வெளிப்படுத்த வில்லை.
*  வருடாந்திர ரகசிய அறிக்கையிலும் அவர்களுக்கு எதிரான குற்றங்கள் குறிப்பிடப் படவில்லை.
*  இந்த காலக்கட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலருக்கு பணி உயர்வு வழங்கப்பட்டது.
*  குற்றவாளிகள் அனைவருக்கும் நீண்ட காலம் பிணை வழங்கப்பட்டது.
*  குற்றத்தில் பயன்படுத்திய ஆயுதங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவே இல்லை.
*  1997-க்கும் 2000-க்கும் இடையே நீதிமன்றம் 23 அழைப்பாணைகளை அனுப்பியும் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரும் ஆஜராகவில்லை.
*  மாநில முதல்வராக இருந்த வீர் பகதூர் சிங் பி.ஏ.சி.-யுடன் கை கோர்த்துக் கொண்டு கொலைச் சதியில் ஈடுபட்டாரென்று குற்றம் சாட்டப்படுகிறது.
*  சிறுபான்மையருக்கு எதிரான கொலை சதியில் தொடர்புள்ளதாக ஒரு மாநில முதல்வர் குற்றம் சாட்டப்பட்ட முதல் சம்பவம் ஹாஷிம்புரா படுகொலைகள்.
*  முதல் கட்ட விசாரணை செய்த விபூதி நாராயண் ராய் நேர்மையாக செயல் பட்டதை தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு பொறுப்புகள் ஏதும் கொடுக்கப்படாமல் வைக்கப்பட்டார்.
*  ஒரு மதக் கலவரம் 24 மணி நேரங்களுக்கு மேல் நீடித்தால் அதில் அரசின் பங்கு உள்ளது என்ற கருத்தையும் விபூதி நாராயண் ராய் கூறியிருக்கிறார்.
*  இந்த கொலையின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மேஜர் சதீஷ் சந்திரா இந்திய ராணுவத்தில் தொடர்ந்து பணியாற்றி கர்னல் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றார்.

அடுத்து என்ன?
*  ஆதாரங்கள் இல்லாமல் மேல்முறையீட்டில் என்ன பயன்?
*  மறுவிசாரணை நடத்த முடியுமா?
*  உச்சநீதிமன்றம் தலையிடுமா? தலையிட முடியுமா?
*  கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு கிடைக்குமா?
*  நீதியை சீர்குலைத்த உயர் அதிகாரிகளை சட்டத்தின் கீழ் ஏதேனும் செய்ய முடியுமா?

(ஆதாரம்:அவுட்லுக் வார இதழ் ஏப்ரல் 06-2015)

Comments are closed.