ஹிஜாபிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ABVP

0

உத்தர கன்னடா கல்லூரி வளாகங்களில் ஆர்.எஸ்.எஸ். இன் மாணவ அமைப்பான ABVP மூலம் மதவாத அரசியல் வேகமாக பரவி வருகிறது. பள்ளி கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த அமைப்பை சேர்ந்த மாணவர்கள் காவி துப்பட்டாவை அணிந்து கல்லூரிகளில் வளம் வருகின்றனர்.

இவர்களின் இந்த நடவடிக்கைக்கு உத்தர கன்னடா எம்.பி. ஆனந்த் குமாரின் ஆதரவும் அவர்களுக்கு கிடைத்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் சிர்சியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணித்து வகுப்புகளுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மாணவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான உடை கட்டுப்பாடுகள் அமல் படுத்தப்பட வேண்டும் என்றும் மாணவர்கள் தங்களது மத அடையாளங்களை வகுப்புகளில் தெரிவிக்கக் கூடாது என்றும் கூறி ABVP யினர் காவி சால்வைகளை அணிந்து வகுப்புகளில் பங்கெடுத்துள்ளனர்.

இதற்கு ஆதரவு தெரிவித்த அனந்த் குமார் எம்.பி. சில இஸ்லாமிய சக்திகள் மாணவிகளை வகுப்பறையில் புர்கா அணியக்கூறி வற்புறுத்துகின்றனர் என்று கூறியுள்ளார். மேலும் இது மாணவர்கள் மத்தியில் மதங்களை கொண்டு வேற்றுமை படுத்துவது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இந்த பிரச்சனை சிர்சியில் உள்ள வேறு சில கல்லூரிகளிலும் பரவியது. இதில் மாணவிகளும் கலந்துகொண்டு காவி ஷால்வைகளை அணியத் தொடங்கியுள்ளனர். பின்னர் இந்த பிரச்சனை காவல்துறையினரின் தலையீட்டின் பேரில் அனைத்து மாணவ மாணவிகளும் வகுப்பறைகளுக்கு சீருடையில் தான் வர வேண்டும் என்று உத்தரவிட்டபின் சீரானது.

இது குறித்து கருத்து தெரிவித்த ஏ.பி.வி.பி.யின் ஆகாஷ் நாயக், “சில இஸ்லாமிய சக்திகள் மாணவிகளை புர்கா அணிய கட்டாயப்படுத்துகின்றன. ஒரு வருடம் முன்பு சாதாரண சீருடையில் கல்லூரி வந்த மாணவிகள் தற்போது ஹிஜாபுடன் வருகின்றனர். அவர்களை திடீரென புர்கா அணிவிக்கக் செய்தது எது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.”

இதனை மறுத்துள்ள முஸ்லிம் மாணவிகள், “நாங்கள் எங்களது மத கோட்பாடுகளை பின்பற்றுவது ஏ.பி.வி.பி.யினருக்கு ஏன் தவறாக தோன்றுகிறது” என்று கேள்வி எழுபியுள்ளனர்.

இதே போன்ற பிரச்னையை ABVP யினர் First Grade Government College யிலும் எழுப்பியுள்ளனர். அங்கு கல்லூரி விரிவுரையாளர்களும் மாணவிகளும் புர்கா அணிந்து வருவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் காவி ஷால்வைகளை அணியப்போவதாகவும் மாணவிகள் புர்காவை களைந்து சீருடையில் வரும் வரை தங்களின் இந்த போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் இவர்களின் இந்த கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்த கல்லூரி முதல்வர், மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதை தடை செய்ய முடியாது என்றும் மேலும் விரிவுரையாளர்கள் இந்த உடைதான் உடுத்தி வரவேண்டும் என்பதற்கு எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

இன்னும் பல கல்லூரிகள் இந்த பிரச்னையை எவ்வாறு கையாள்வது என்று தெரியாமல் உள்ளன. ஏற்கனவே பதற்றமான பகுதியான பட்கள் இந்த பிரச்சனையால் இன்னும் மோசமான நிலையில் உள்ளது. மாணவிகளின் வழிபாடு உரிமையை சீண்டி அதில் அநாகரீகமாக மதவாத பிளவை ஏற்படுத்த நினைக்கும் ABVP யினரால் எப்போது என்னாகும் என்ற சூழ்நிலை அங்கு ஏற்பட்டுள்ளது.

Comments are closed.