ஹிஜாப் அணியும் பெண்களை அடிமைகளோடு ஒப்பிட்ட ஃபிரெஞ்ச் அமைச்சர்

0

ஃபிரான்ஸ் நாட்டின் பெண்கள் உரிமை அமைச்சர் லாரென்ஸ் ரோசிக்னோல் ஹிஜாப் அணியும் பெண்களை அடிமைத்தனத்தை ஏற்றுக்கொண்ட கருப்பினர்களைப் போலானவர்கள் என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து பல்வேறு தரப்பினரின் கண்டனத்தை பெற்று வருகிறது.

RMC வானொலி மற்றும் BFM TV ஆகியவற்றிற்கு பேட்டியளித்த அவர் இந்த கருத்துக்களை கூறியுள்ளார். இதனையடுத்து அவரை பதவி விலக கோருமாறு கையெழுத்து இயக்கம் ஒன்று தொடங்கப்பட்டது. இதில் சிலமணி நேரங்களிலேயே 10000 க்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளனர்.

இஸ்லாமிய ஃபேஷன் தொழிற்சாலை குறித்த ஒரு விவாதத்தில் பங்கேற்க இவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த விவாதத்தில் தான் கூறிய கருத்துக்களுக்கு எதிர்ப்பு கிளம்பவே தான் கூறியதில் “நீக்ரோ” என்ற வார்த்தை பயன்பாடு மற்றும் தவறானது என்று அவர் கூறியுள்ளார். மற்றபடி அவர் தன் கருத்துக்களை திரும்பப் பெறவில்லை அதற்காக மன்னிப்பு கேட்கவும் இல்லை. மேலும் தனது உரையாடலின் போது தலையில் இருந்து கால் வரை முழுதாக மறைக்கும் நீச்சல் உடைகளை தாயாரிப்பவர்கள் பொறுப்பற்றவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

வியாபார ரீதியில் 2015- 2016 வரையிலான உலக இஸ்லாமிய பொருளாதார அறிக்கையின்படி முஸ்லிம் நுகர்வோர் ஏறத்தாள 230 பில்லியன் டாலர்கள் உடைகளில் செலவிடுகின்றனர். இது 2019 இல் 327 பில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முஸ்லிம் நுகர்வோரின் இந்த சந்தை யு.கே., ஜெர்மெனி மற்றும் இந்தியாவின் மொத்த சந்தையைக் காட்டிலும் பெரியது. இந்த வருடத்தின் தொடக்கத்தில் இத்தாலியின் மிகச்சிறந்த பிராண்டுகளில் ஒன்றான Dolce & Gabbaana தங்களின் புதிய ஹிஜாப் மற்றும் அபயா வகைகளை சந்தையில் அறிமுகம் செய்திருந்தது.

ஐரோப்பாவில் முஸ்லிம் சமுதாய மக்களை அதிகளவில் கொண்டுள்ள நாடு ஃபிரான்ஸ் ஆகும். இங்கே இஸ்லாமிய பெண்கள் அணியும் முகத்திரை கடந்த 2011 ஆம் வருடம் தடை செய்யபப்ட்டது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.