ஹைதராபாத் குண்டுவெடிப்பு:22 ஆண்டுகளுக்கு பிறகு ஜலீல் அன்ஸாரி குற்றமற்றவர் என நீதிமன்றம்!

0

ஹைதராபாத்:பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட முதல் நினைவு தினத்தில் ஹைதராபாத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடையவர் என்று குற்றம் சாட்டி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட டாக்டர் ஜலீல் அன்ஸாரியை 22 ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்றம் குற்றமற்றவர் என்று கூறி விடுதலைச் செய்துள்ளது.7-வது மாநகர அமர்வு நீதிமன்றம் விசாரணையின் இறுதியில் அன்ஸாரியை விடுதலை செய்துள்ளது.

1993-ஆம் ஆண்டு டிசம்பர் 5 மற்றும் 6 தேதிகளில் ஹைதராபாத் நகரத்தின் மக்கள் நெரிசல் மிகுந்த அபித், ஹிமாயூன் நகர் போலீஸ் ஸ்டேஷன், கோபாலபுரம் ரெயில்வே ஸ்டேஷன் செண்டர், மதீனா எஜுகேஷன் செண்டர் ஆகிய இடங்களில் குண்டுகள் வெடித்தன.இச்சம்பவங்களின் பின்னணியில் முக்கிய சூத்திரதாரியாக செயல்பட்டவர் என்று குற்றம் சாட்டி 1994-ஆம் ஆண்டு ஜனவரியில் மும்பையில் வைத்து டாக்டர் ஜலீல் அன்ஸாரி கைது செய்யப்பட்டார்.விசாரணையின்போது அன்ஸாரி குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீஸ் விளக்கம் அளித்தது.பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டு முதல் நினைவு தினத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களின் சூத்திரதாரியும் அன்ஸாரி தான் என்று புலனாய்வு அமைப்புகளும் குற்றம் சாட்டின.இந்நிலையில் ஹைதராபாத் குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பான வழக்கின் விசாரணையின் இறுதியில் மாநகர அமர்வு நீதிமன்றம் அன்ஸாரியை குற்றவாளி என நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி விடுதலைச் செய்துள்ளது.

அன்ஸாரி மீது இதுபோல 64 வழக்குகள் சுமத்தப்பட்டுள்ளன.ரெயில் குண்டுவெடிப்பு வழக்கு ஒன்றில் அஜ்மீர் நீதிமன்றம் அன்ஸாரிக்கு ஆயுள்தண்டனை விதித்திருந்தது.இதற்கு எதிராக அன்ஸாரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடுச் செய்துள்ளார்.மேலும் மஹராஷ்ட்ரா மாநிலத்தில் டாக்டர் ஜலீல் அன்ஸாரி மீது 24 வழக்குகள் உள்ளன.இவ்வழக்குகளில் வழங்கப்படும் தண்டனைகளை விட அதிக காலம் சிறையில் கழித்ததன் காரணமாக டாக்டர் ஜலீல் அன்ஸாரி விரைவில் விடுதலைச் செய்யப்படலாம் என்று கருதுவதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா மாநிலம் குல்பர்காவில் மருத்துவராக பணியாற்றி வந்த ஜலீல் அன்ஸாரிக்கு இப்போது வயது 58.அவரது மனைவியும், மகளும் மும்பையில் வசிக்கின்றனர்.

Comments are closed.