ஹைதராபாத்: திரையரங்கில் தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்காத 3 கஷ்மீரி இளைஞர்கள் கைது

0

கடந்த சனிக்கிழமை ஹைதராபாத்தின் உப்பார்பள்ளியில் உள்ள மந்த்ரா மால் வர்த்தக மையத்தில் மூன்று கஷ்மீரி இளைஞர்கள் திரைப்படம் ஒன்று காணச் சென்றுள்ளனர். திரைப்படம் திரையிடுவதற்கு முன்னதாக தேசிய கீதம் திரையிடப்பட்டுள்ளது. இதற்கு இந்த மூன்று இளைஞர்களும் எழுந்து நிற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இந்த மூன்று பேரும் 1971 ஆண்டு தேசத்தின் மீது அவமதிப்பு தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து அந்த மாணவர்கள் கூறுகையில், தாங்கள் திரைப்படத்தை பார்க்க தாமதமாக சென்றதாகவும் இருட்டில் தங்கள் இருக்கைகளை தேடி அமரும் நேரம் தேசிய கீதம் ஒலித்ததை தாங்கள் கவனிக்கவில்லை என்றும் பின்னிருந்தவர்கள் தங்களுக்கு அதனை உணர்த்தவே தாங்கள் எழுந்து நின்றதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் தேசிய கீதம் முடிந்த பின்னர் தங்களின் பின் அமர்ந்திருந்தவர் தங்களின் பெயர் முகவரிகளை கேட்டதாகவும் அவர்  ஒரு காவல்துறை உயரதிகாரி என்றும் அவர் தான் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து தங்களை கைது செய்ததாக தெரிவித்துள்ளனர்.

இதனை மறுத்த காவல்துறை இவர்களின் இந்த செயலால் திரையரங்கிற்கு வந்த பொதுமக்கள் அதிருப்தி அடைந்து திரையரங்கு உரிமையாளரிடம் தெரிவிக்க அவர்கள் இரவு ஒன்பது மணியளவில் தங்களுக்கு புகாரளித்து அதன் அடிப்படையில் தாங்கள் நடவடிக்கை எடுத்ததாக தெரிவித்துள்ளனர்.

“நாங்கள் அந்த மூன்று இளைஞர்களை கைது செய்து அவர்களுக்கு நோட்டிஸ் வழங்கி விடுவித்துள்ளோம். மேலும் அந்த மாணவர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளரின் வாக்குமூலங்களையும் பெற்றுள்ளோம். இந்த விசாரணை முடிந்த பிறகு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும். இது குறித்து அந்த மாணவர்கள் குறிப்பிடுகையில் தங்களுக்கு தேசிய கீதம் ஒலித்தது தெரியாது என்று கூறியுள்ளனர். ஆனால் திரையரங்கு உரிமையாளரின் கூற்றுப்படி பலர் அவர்களை எழுந்து நிற்க வலியுறுத்தியும் அவர்கள் எழுந்து நிற்க மறுத்துள்ளனர். பின்னர் தேசிய கீதத்தின் இறுதியில் தயக்கத்துடன் எழுந்து நின்றதாக கூறப்படுகிறது.” என்று காவல்துறை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.