ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் என்ன நடந்தது?

0

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் தலித் ஆய்வறிஞர் ரோஹித் வெமுலா தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வலதுசாரி இந்துத்துவ மாணவர் அமைப்பான ABVP யின் பங்கு இதில் மிக அதிகமாகவே உள்ளது. ABVP ஒரு மாணவ அமைப்பு என்பதை விட அப்பாவியின் உயிரை குடித்த தீவிரவாத அமைப்பு என்பது பொருத்தமானதாக இருக்கும்.

தற்கொலை செய்துகொண்ட ரோஹித் வெமுலா அம்பேத்கர் மாணவ அமைப்பை சேர்ந்த்தவர். அம்பேத்கர் மாணவ அமைப்பிற்கும் ABVP அமைப்பிற்கும் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முதலே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் டில்லி பல்கலைக்கழகத்தில் “முஸஃபர்நகர் பாக்கி ஹை” என்ற ஆவணப்படம் திரையிடலின் போது ABVP இயக்கத்தினர் தாக்குதல் நடத்தியதை எதிர்த்து அம்பேத்கர் மாணவ அமைப்பு போராட்டம் நடத்தியதில் இருந்து தொடங்கியது என்று கூறப்படுகிறது.

தற்பொழுது ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்புகளை ரவி குமார் என்பவர் விவரித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது…

இந்த நிகழ்வை (தலித் மாணவர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் ரோஹித் வெமுலாவை தற்கொலை செய்யதூண்டியது) ஒரு தனி நிகழ்வாக எடுத்துக்கொள்ள முடியாது. அம்பேத்கர் மாணவ அமைப்பு இந்திய அரசியல் பிரிவின் உச்சபட்ச தண்டனையான மரண தண்டனையை எதிர்த்து போராட்டம் நடத்தியது. அம்பேத்கரின் வழிமுறைகளை பின்பற்றும் மாணவர்களாகவும், பொறுப்புள்ள மனித உரிமை பாதுகாவலர்களாகவும் நடத்தப்பட்ட இந்த போராட்டம் இந்திய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே திட்டமிடப்பட்டது. இந்த போராட்டத்திற்கு வலதுசாரி இந்து மாணவ அமைப்பான ABVPயினர் எதிர்ப்பு தெரிவித்தனர், மேலும் இந்த போராட்டத்தை கொச்சைப்படுத்தினர்.

பல்கலைகழக அலுவலகத்தில் தங்களுடைய நபரான அப்பாராவ் துணை வேந்தராக பதவி ஏற்றதும் அவர்களின் பலம் இன்னும் கூடுதலானது. அதன் பின்னர் வெளியில் உள்ள தங்களது பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் கூட்டாளிகளுடன் சேர்ந்து அம்பேத்கர் மாணவ அமைப்பின் தலைவர்களை நேரடியாக தாக்க ஆரம்பித்தனர். அப்பாராவ் பல்கலைக்கழக துணை வேந்தர் ஆன உடன் மாணவர்கள் பட்டமளிப்பு விழாவில் லுங்கி மற்றும் வேஷ்டி கட்டுவதை தடை செய்தார். பின்னர் எதிர்ப்பின் காரணமாக பின்வாங்கிக்கொண்டார்.

இது போன்ற செயலினால் ABVP அமைப்பினர் அம்பேத்கர் மாணவ அமைப்பின் தலைவர்கள் மேல் தரக்குறைவான குற்றச்சாட்டுகளை அவர்களது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்து வந்தனர். இதனை பாதுகாப்பு அதிகாரியிடம் முறையிட்ட பின் ABVP தலைவர்கள் அதற்காக மன்னிப்பு கேட்டு தாங்கள் பதிந்த தரக்குறைவான பதிவுகளை நீக்கினர்.

எல்லாம முடிந்தது என்றிருந்த நிலையில் அப்பகுதி காவல்துறை மற்றும் பல்கலைக்கழக அதிகாரியிடம் தங்களின் உறுப்பினர்களை அம்பேத்கர் மாணவ அமைப்பினர் தாக்கியதாக புகார் அளித்தனர். இதனை விசாரிக்க ஒழுங்கு நடவடிக்கை குழு ஒன்றை பல்கலைக்கழகம் அமைத்தது. அந்த குழுவின் விசாரணையில் இவர்கள் கூறிய குற்றச்சாட்டு பொய் என்று தெளிவானது.

அதன் பின் மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா மனிதவள மேம்பாட்டு மந்திரிக்கு கடிதம் எழுதினார். அங்கிருந்து பல்கலைக்கழக துணை வேந்தருக்கு கடிதம் எழுதப்பட்டது. இதன் அடிப்படையில் மீண்டும் ஒரு விசாரணை மேற்கொள்ளப்பட்டு அதில் ஏற்கனவே அந்த குழு சமர்ப்பித்த அறிக்கைக்கு முற்றிலும் எதிரான ஒரு அறிக்கை பெறப்பட்டது. இதன் அடிப்படையில் அம்பேத்கர் மாணவ அமைப்பின் ஐந்து உறுப்பினர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டனர்.

அம்பேத்கர் மாணவ அமைப்பின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ABVP கேள்வி எழுப்பியது. இந்த சமயத்தில்தான் ரோஹித் தனது உயிரை விட்டார்.

இது அனைத்தும் ஒரு தனிப்பட்ட நிகழ்வல்ல. இது ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் மட்டும் நடக்கும் ஒரு நிகழ்வும் அல்ல. சமீபத்தில் நடந்த EFLU வில் தலித் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், சென்னை சட்டக் கல்லூரியில் அரங்கிற்கு அம்பேத்கர் பெயர் வைக்க கோரியதில் தலித் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இவை அனைத்திலும் ஒரு ஒற்றுமை இருக்கின்றது. இவை அனைத்திலும் தலித் மாணவர்கள் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே போராடியுள்ளனர். நீதி மற்றும் ஜனநாயகத்தில் தனி நபரின் கண்ணியம் என்பது ஒருவரின் அடிப்படை உரிமை. இவர்களின் போராட்டங்கள் அனைத்தும் இந்திய மக்களின் நலன் சார்ந்து இருந்துள்ளது.

ஆனால் இந்த அனைத்து நிகழ்வுகளிலும் அதிகாரவர்கத்தின் செயல்பாடு முன்பே சொல்லிவைத்தது போல் ஒரே மாதிரி இருந்துள்ளது. மாணவர்களை காவல்துறை மூலம் வழக்குகளில் சிக்க வைத்துள்ளனர். இதன் மூலம் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்படும். இதன் மூலம் இந்த இளைஞர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் ஒதுக்கப்படுவார்கள்.

இந்த இளைஞர்கள் குறித்த ஒரு முக்கியமான செய்தி என்னவெனில் இவர்கள் அனைவரும் அவரவர் பல்கலைக்கழகத்தில் மிகவும் சிறந்த மாணவர்கள். குறிப்பாக இதே ஹைதராபாத் பல்கலைகழகத்தில் சுமார் 15 வருடங்களுக்கு முன் தற்போதைய துணை வேந்தர் அப்பாராவ் தலைமை வார்டனாக பணியாற்றிய பொது 11 சிறந்த அறிஞர்களை சஸ்பெண்ட் செய்தார். அதில் வெறும் மூன்று அல்லது நான்கு பேரால் தான் தங்கள் கல்வியை மீட்டெடுக்க முடிந்தது. தங்களது PhD முடிந்த பின்னரும் தங்களுக்கு பணி கிடைப்பதில் சிக்கலை அவர்கள் உணர்ந்தார்கள்.

ஆகையால் இதனை ஒரு தனிப்பட்ட நிகழ்வாக கருத வேண்டாம். இது வருங்காலத்தில் கல்வித்துறையில் தலித்களின் தன்னிறைவிற்கு எதிராக முறையாக திட்டமிடப்பட்ட சதிவேலை. நமது வருங்கால சந்ததியினரின் அறிவுஜீவிகளையும் தலைவர்களையும் நாம் இழப்பதற்கு முன்னால் இந்துத்துவ அரக்கர்களுக்கு எதிராக நாம் ஒன்றிணைவோம்.

இவை தேசிய தலித் ஃபாரத்தின் செயலாளர் ஆர்.ரவி குமார் கூறியவை.

Comments are closed.