ஹோலி கொண்டாடியதால் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட தலித்

0

ஜார்கண்ட் மாநிலம் கொதேராமா பகுதியில் ஹோலி பண்டிகையின் போது தலித் சமூகத்தை சேர்ந்த சிலர் வண்ணப்பொடிகளை தூவி கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டுக் காவலாளி மீதும் வண்ணப்பொடிகள் வீசப்பட்டுள்ளது. இதில் கோபமுற்ற அவர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.

இதனையடுத்து அப்பகுதிக்கு வந்த காவல்துறையினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டவர்களை தாக்க முயன்றுள்ளனர். காவல்துறையினர் வருவதை கண்டதும் அந்த கூட்டத்தில் இருந்த பெரும்பாலானவர்கள் அப்பகுதியை விட்டு தப்பியோடிவிட்டனர். துரதிர்ஷ்ட வசமாக அவர்களிடம் சிக்கிய பிரதீப் சவுத்திரி என்பவர் காவலர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.

இதில் தனது தலையில் காயமுற்ற பிரதீப் சம்பவ இடத்திலேயே மயக்கமுற்றார். பின்னர் அவர் காவலர்களால் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு பின் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட பிரதீப் அங்கும் காவலர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

தனது கணவனின் நிலை அறிந்த பிரதீப்பின் மனைவி ஜஷ்ணா தேவி  தனது உறவினரான அஷ்வினி சவுதிரியுடன் காவல் நிலையம் சென்று தனது கணவரை விடுவிக்குமாறு கூறியுள்ளார். அப்போது அவர்களின் சாதியை இழிவு படுத்தி காவல்துறையினர் மோசமான வார்த்தைகளில் வசைபாடி அவர்களை அங்கிருந்து விரட்டியுள்ளனர்.

மறுநாள் வீட்டிற்கு வந்த பிரதீபின் நிலை காவல்துறையினரின் தாக்குதல்களால் மோசமடைந்து வந்துள்ளது. இதனால் அவர் முதலில் அப்பகுதியில் உள்ள சத்கவான் மருத்துவமனைக்கும் பின்னர் கொதேர்மா மாவட்ட மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து ராஞ்சி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்படுகையில் அவரது காயங்கள் காரணமாக உயிரிழந்துள்ளார்.

அவரது உடல் முழுவதும் அவரை காவல்துறையினர் தாக்கியர்தர்கான தடையங்கள் ரத்தம் கட்டிப்போய் காட்சியளித்துள்ளன. இந்த சம்பவம் குறித்து அருகில் உள்ள SC/ST காவல் நிலையத்தின் ஜஷ்ணா தேவி புகாரளிக்க சென்ற போது காவல்துறையினர் அவரது புகாரை ஏற்கவில்லை என்று தெரிகிறது. தற்போது இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

Comments are closed.