10 இலட்சம் பொதுமக்களின் ஆதார் விபரங்கள் ஜார்கண்ட் அரசு இணைய தளத்தில் வெளியீடு

0

ஜார்கண்ட் மாநிலத்தில் தங்கள் வங்கிக் கணக்கை ஆதாருடன் இணைத்த சுமார் 1.4 மில்லியன் மக்களின் ஆதார் தகவல்கள் அரசு இணையதளம் மூலம் கசிந்துள்ளது.

மென்பொருளில் ஏற்பட்டுள்ள பிழையினால் வெளியானது என்று கூறப்பட்ட இதில் அனைவரது ஆதார் எண், வங்கிக் கணக்கு விபரம், மற்றும் ஜார்கண்ட் முதியோர் உதவித்தொகை திட்டத்தின் பயனாளர்கள் குறித்த தகவல்கள் உள்ளிட்ட பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த உதவித் தொகையை பெறும் மொத்தம் 1.6 மில்லியன் மக்களில் 1.4 மில்லியன் மக்கள் தங்கள் வங்கிக் கணக்கை ஆதாருடன் இணைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர்களின் தனிப்பட்ட தகவல்கள் அனைவருக்கும் காணக் கிடைக்கின்றது.

ஆதார் சட்டப் பிரிவு 29(4)இன் படி ஒருவது ஆதார் எண்னை வெளியிடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. முன்னதாக UIDAI ஆதார் கணக்கு விபரங்களை வெளியிட்ட நிறுவனங்களை அந்த சேவையில் மீண்டும் ஈடுபடுவதற்கு 10 வருடங்கள் தடை விதித்திருந்தது. சமீபத்தில் இந்திய கிரிக்கட் வீரர் தோணியின் ஆதார் கணக்கு விபரங்கள் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து அவரது மனைவி ஆதாரின் பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பியிருந்தார். அதற்காக அவரை வலதுசாரி குண்டர்கள் இணையத்தில் ஆதாரின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பக் கூடாது என்று ஆபாசமாக திட்டிய சம்பவங்களும் நடைபெற்றது (பார்க்க செய்தி).

மேலும் ஆதார் தகவல்களை சட்டவிரோதமாக சேகரிப்பது தொடர்பாக சுமார் 8 காவல்துறை புகார்கள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில் தற்போது ஜார்கண்ட் அரசு மூலமாகவ இந்த தகவல்கள் வெளியானது குறித்த கேள்விகளுக்கு UIDAI மெளனம் காத்து வருகிறது. மேலும் இந்த தகவல் கசிவு குறித்து தங்களுக்கு பல நாட்கள் முன்பே தெரியும் என்று ஜார்கண்ட் அதிகாரிகள் தெரிவித்துள்ளது ஆச்சர்யமளிக்கும் விதத்தில் உள்ளது. ஜார்கண்ட் மாநில சமூக மேம்பாட்டுத்துறை செயலாளர் MS.பாட்டியா தங்களுக்கு இந்த தகவல் கசிவு குறித்து ஒரு வாரகாலமாக தெரியும் என்றும் அதனை சரி செய்ய தங்களது மென்பொருள் நிபுணர்கள் பணிசெய்து வருவதாகவும் விரைவில் இது சரி செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த கசிவு குறித்த சட்ட மீறகள் குறித்து அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

ஆதார் திட்டத்தை அரசு கட்டாயமாக்கக் கூடாது என்றும் அது மக்களின் விருப்பத் தேர்வாகவே இருக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருக்க அதனை வரி செலுத்துவது உட்பட பல சேவைகளுக்கு கட்டாயமாக்கிய அரசின் முடிவுகளை சமீபத்தில் உச்ச நீதிமன்றம் கடுமையாக சாடியது.

ஆதார் கணக்கு விபரங்களின் பாதுகாப்பு குறித்து உச்ச நீதிமன்றமும் எதிர்கட்சிகளும் கணினி நிபுணர்களும் தங்களது சந்தேகங்களையும் கவலைகளையும் தெரிவித்து வரும் இந்த வேலையில் இது போன்ற ஒரு மிகப்பெரிய தகவல் கசிவு பாஜக அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல் கசிவை பல்வேறு தரப்பினரும் கடுமையாக சாடியுள்ளனர். Centre for Internet and Society யின் கொள்கை இயக்குனர் பிரனேஷ் பிரகாஷ் இது குறித்து கூறுகையில், “UIDAI இன் தலைமை நிர்வாக அதிகாரி  இந்த கசிவு குறித்து ஜார்கண்ட் அரசு மீது இந்த தகவை கசிய விட்டதற்காக எந்த நடவடிக்கையும் எடுப்பாரா என்றும், அப்படி எடுக்கவில்லை என்றால் இதனை அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்று அர்த்தமா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ஜெயராம் ரமேஷ், ஆதாரின் பாதுகாப்பு குறித்து அருண் ஜேட்லியும் ரவி ஷங்கர் பிரசாத்தும் பாராளுமன்றத்தில் கூறிய அனைத்தையும் கேலி செய்யும் விதத்தில் இந்த தகவல் கசிவு உள்ளது என்று கூறியுள்ளார்.

Comments are closed.