10 வருட அவமானம்!

0

10 வருட அவமானம்

(2012, மார்ச் மாதம் விடியலில் வெளியான கட்டுரை)

சாயிராபென், ரூபா மோடி ஆகிய இருவரும் அகமதாபாத் மெட்ரோபாலிடன் மேஜிஸ்ட்ரேட் கோர்ட்டினுள் உள்ள இருக்கையில் அமைதியாக அமர்ந்து ஜக்கியா ஜஃப்ரியின் வழக்கை செவிமடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த இருவரால் அந்தக் கொடூரமான நிகழ்வை மறக்கவே முடியாது. இருவரும் அந்தக் கொடூரமான நிகழ்வை நேரில் கண்டவர்கள்.

ஒருவர் தன் மகன் கொல்லப்படுவதை நேரில் கண்டவர்.

மற்றொருவர் 10 வருடமாக தன் மகனை தேடிக் கொண்டிருப்பவர். அந்த நீதிமன்றத்தில் இருந்த இன்னும் சிலரோ தங்களுடைய குடும்ப உறுப்பினர்கள், சொந்தங்கள் தங்கள் கண் முன்னாலேயே துண்டு துண்டாக வெட்டப்பட்டு தீயிலிடப்பட்டதை நேரில் பார்த்தவர்கள். இறுதியில் நீதிபதிகள் அந்த வழக்கை ஒத்தி வைக்கின்றனர். நீதிமன்றத்திற்கு வந்திருந்தவர்கள் அடுத்த விசாரணை தேதிக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இது வழக்கமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் மனம் தளராமல் போராடிக் கொண்டிருக்கின்றனர். இவ்வழக்குடன் தொடர்புடைய ஒரேயொரு முஸ்லிமல்லாத பெண்மனி ரூபா மோடி (தன் மகனை இன்றும் தேடிவருபவர்) வழக்கு தொடர்பாக இப்படி சொல்கின்றார்:

இந்த வழக்கின் ஒவ்வொரு விசாரணைக்கும் நாங்கள் வந்து கொண்டிருக்கின்றோம். நாங்கள் உயிருடன் இருக்கும் வரை இவ்விஷயத்தில் சோர்வடையப் போவதில்லை. இனியும் ஒரு 10 வருடம் ஆனாலும் பரவாயில்லை. எங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை விட மாட்டோம்.

இப்படி அவர் சூளுரைக்கிறார். வாசகர்களுக்கு இப்போது தெரிந்திருக்கும் இது எந்த வழக்கு? ஏன் இவர்கள் இப்படி போராடுகின்றார்கள்? இப்படி ஏன், யாரால், எப்படி என்ற அனைத்துக் கேள்விகளுக்கும் ஒரே பதில் இதுதான். ஆம்! அதுதான் குஜராத்தில் 2002 பிப்ரவரி இறுதியில் நடத்தப்பட்ட முஸ்லிம் இனப்படுகொலைகள்”.

இந்த முஸ்லிம் இனப்படுகொலை நடத்தப்பட்டு இந்த வருடம் பிப்ரவரி 28, 2012 உடன் 10 வருடங்கள் நிறைவடைகின்றன. வாசகர்கள் கருதலாம், 10 வருடங்களுக்குப் பிறகு ஏன் இந்தக் கட்டுரை என்று? சுதந்திரம் பெற்று 64 ஆண்டுகளாகியும் முஸ்லிம்களின் வாழ்வில் விடியல் இல்லை. தொடர் கலவரங்கள், அதனைத் தொடர்ந்த கமிஷன்கள், அறிக்கைகள் என அவர்களின் துயரம் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

அந்த வரிசையில் நம் கண் முன்னே நடந்த 2002 குஜராத் கலவரம், அதனைத் தொடர்ந்த விடைகளைத் தேடிய நீதிக்கான போராட்டங்கள், அனைத்தும் கானல் நீராகி வருகின்றன. அவல நிலையைத் தொடர்ந்து படம் பிடித்துக் காட்டி நீதிக்காக போராடி வரும் விடியல் வெள்ளி குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் நீதிக்கான போராட்டத்தை மீண்டும் பதிவு செய்கின்றது.

பிப்ரவரி 27, 2002ல் குஜராத் மாநிலம் கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸின் எஸ் 6 பெட்டி தீப்பிடித்து எரிந்தது. (பார்க்க பெட்டி செய்தி)

அதில் அயோத்தியில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்த கரசேவகர்கள் உட்பட 59 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து வி.எச்.பி. மற்றும் சங்கப் பரிவார இயக்கங்கள் பிப்ரவரி 28 அன்று நாடு தழுவிய பந்த்திற்கு அழைப்பு விடுத்தன. பிப்ரவரி 28 அன்று குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த கலவரம் பல நாட்கள் நீடித்தது. குஜராத்தில் 25 மாவட்டங்களில் 16 மாவட்டங்களுக்கு பரவிய முஸ்லிம் இனப்படுகொலையில் அரசு கணக்கெடுப்பின் படி 1000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். அரசு சாரா நிறுவனங்களின் கணக்கின் படி 2000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால், உண்மையில் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை விவரம் இன்று வரை யாருக்கும் தெரியாது. இதில் 600 குழந்தைகள் அனாதைகளாக்கப்பட்டனர். 400 குழந்தைகள் காணாமல் போய்விட்டனர்.

10 வருடங்களுக்குப் பின்பும் வழக்குகள் மிகவும் மந்தமாகவே நடந்து வருகின்றன. இந்தக் கால கட்டத்தில் முடிவுக்கு வந்த ஒரு வழக்கு சர்தார் புரா வழக்காகும். கலவரத்தில் ஒரு வீட்டினுள் வைத்து 33 முஸ்லிம்கள் உயிருடன் எரிக்கப்பட்ட அந்த வழக்கில் 31 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர். அது போக இன்னும் பல வழக்குகள் விசாரணையில் உள்ளன.

பாதிக்கப்பட்ட மக்களின் உள்ளங்களில் கலவர நினைவுகள் இன்றும் பசுமையாக உள்ளன. நீதி ஒன்றுதான் அவர்களுக்கு ஆறுதல் அளிக்க முடியும். கலவரத்தால் பாதிக்கப்பட்டு புலம் பெயர்ந்து சென்றவர்கள் இன்னும் தங்களின் வீடுகளுக்கு திரும்ப இயலாத நிலையில்தான் உள்ளனர். இதற்கிடையில் கடந்த 10 வருடங்களில் குஜராத்தில் வாழும் முஸ்லிம்களின் நிலை நாளுக்கு நாள் பரிதாபகரமான ஒன்றாக ஆகிக் கொண்டிருக்கின்றது.

கலவரத்திற்கு பிந்தைய ஆண்டுகளில் குஜராத் முஸ்லிம்கள் மேலும் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு, வீட்டு வசதி மற்றும் இன்னபிற அடிப்படை தேவைகள் அனைத்தும் அவர்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளன.

ஜக்கியா ஜாஃப்ரியின் நீதிக்கான போராட்டம்

குஜராத் அகமதாபாத்தில் மெகானி நகர் என்ற இடத்தில் அமைந்துள்ள குல்பர்க் சொஸைட்டியில் இருந்த முன்னாள் காங்கிரஸ் எம்.பி. இஹ்ஸான் ஜாஃப்ரியும் அவருடைய வீட்டில், அந்தக் குடியிருப்பில் இருந்தவர்கள் என 69 பேர் வெட்டி தீயில்வீசப்பட்டு எரிக்கப்பட்டனர்.

தன் கண் முன்னாலேயே கணவர் வெட்டிக் கொல்லப்பட்டு தீயிலிடப்பட்டதை நேரில் பார்த்தவர் அவருடைய மனைவி ஜக்கியா ஜஃப்ரி. ஜக்கியா ஜஃப்ரியும், சில மனித உரிமை ஆர்வலர்களும், நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் குழுவும் இணைந்து குஜராத் கலவரம் மற்றும் குல்பர்க் சொஸைட்டி படுகொலைக்கான ஆதாரங்களை திரட்டினர்.

அதில், கலவரத்திற்கு காரணகர்த்தா மோடிதான் என்றும், மோடியின் தலைமையில் கலவரம் நடந்ததுதான் அரசு இயந்திரங்கள் செயல்படாமல் இருந்ததற்கு காரணம்எனக் கூறி மோடியின் மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.

நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் தலைவர்கள், போலீஸ்காரர்கள், அரசு நிர்வாகத்தில் இருந்தவர்கள் என அனைவர் மீதும் ஜக்கியா ஜாஃப்ரி ஜூன் 8, 2006 ம் வருடம் குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் ஜக்கியா ஜாஃப்ரி மற்றும் படுகொலையை நேரில் பார்த்த சாட்சியங்கள் என அனைவரும் நீதிமன்றத்தில் வந்து சம்பவம் நடந்த போது இஹ்ஸான் ஜாஃப்ரி தொலைபேசி மூலம் மோடி மற்றும் போலீஸ் அதிகாரிகளை உதவிக்கு அழைத்தும் யாரும் உதவவில்லை என்பதையும் பதிவு செய்தனர்.

ஆனால், நவம்பர் 2007 ல் குஜராத் உயர்நீதிமன்றம், முதல் தகவல் அறிக்கை இல்லை எனக்     காரணம் காட்டி வழக்கை தள்ளுபடி செய்தது. அதனைத் தொடர்ந்து சிறப்பு விடுப்பு மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதன் பின்னர் மார்ச் 3, 2008 ல் சுப்ரீம் கோர்ட் இவ்வழக்கில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனை அமிகஸ் க்யூரியாக (அமிகஸ் க்யூரி என்றால்  ஒரு வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவ நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் தலைசிறந்த வழக்கறிஞர்) நியமித்தது.

அடுத்ததாக ஏப்ரல் 2009 ல் இவ்வழக்கை சி.பி.ஐ. யின் முன்னாள் டைரக்டர் ஆர்.கே. ராகவன் தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழுவிடம் ஒப்படைத்தது. அவரின் வேண்டுகோளின் படி எஸ்.ஐ.டி. யில் அவருக்குத் துணையாக ஏ.கே. மல்ஹோத்ரா மற்றும் பரம் விர் சிங் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

எஸ்.ஐ.டி. தனது விசாரணையை துவங்கிய பின் 2010 ம் ஆண்டு விசாரணைக்காக குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு சம்மன் அனுப்பியது.

ஒரு மாநிலத்தின் முதல்வர் மதக்கலவரம் தொடர்பான கிரிமினல் குற்றப்பத்திரிகை விசாரணைக்கு அழைக்கப்படுவது இந்திய வரலாற்றிலேயே இதுதான் முதல் முறையாகும்.

இதனிடையே அக்டோபர் 26, 2010 ல் அமிகஸ் க்யூரியாக இருந்த பிரசாந்த் பூஷன் அதிலிருந்து விலகிக் கொள்கின்றார். பின்னர் நவம்பர் 2010ல் ராஜு ராமச்சந்திரன் இவ்வழக்கில் அமிகஸ் க்யூரியாக நியமிக்கப்படுகின்றார்.

இடைப்பட்ட காலத்தில் எஸ்.ஐ.டி நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் குழுமத்தைச் சேர்ந்த தீஸ்த்தா செடல்வாட், குஜராத் ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் போன்றோரின் வாக்குமூலங்களை பதிவு செய்கின்றது.

குஜராத் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டும் உச்சநீதிமன்றத்தில் எஸ்.ஐ.டி. மற்றும் கலவரம் தொடர்பாக மனு ஒன்றை தாக்கல் செய்கின்றார். அதனையடுத்து உச்சநீதிமன்றம் எஸ்.ஐ.டி யின் விசாரணையையும் தாண்டி அமிகஸ் க்யூரியான ராஜு ராமச்சந்திரனிடம் சாட்சிகளை விசாரணை செய்யும்படி கேட்டுக் கொள்கின்றது. அவரும் விசாரித்து தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்கின்றார்.

செப்டம்பர் 12, 2011 அன்று உச்சநீதிமன்றம் இவ்வழக்கை அகமதாபாத் நீதிமன்றத்திற்கு மாற்றுகின்றது. இது குறித்து கருத்துத் தெரிவித்த தீஸ்த்தா செடல்வாட், இது நாங்கள் எதிர்பார்த்த மற்றும் உச்சநீதிமன்றம் எடுத்துள்ள சரியான நடவடிக்கைதான் என்கிறார். இதனிடையே எஸ்.ஐ.டி யின் விசாரணை மற்றும் நடவடிக்கைகள் குறித்து விமர்சனங்கள் எழுகின்றன.

விசாரணை ஒரு சார்பாக, அதாவது மோடிக்கு சாதகமாக இருப்பதாக செய்திகள் வெளியாகின்றன.

எனவே இது தொடர்பாக ஓர் அறிக்கை தரும்படி எஸ்.ஐ.டி தலைவர் ராகவனிடம் கேட்கின்றனர். அவர் எந்த வித பதிலும் தராமல் இழுத்தடிக்கின்றார்.

இப்படியாக இறுதியில் பிப்ரவரி 2, 2012 அன்று எஸ்.ஐ.டி அவசரம், அவசரமாக ஒரு முத்திரையிடப்பட்ட அறிக்கை ஒன்றை தாக்கல் செய்கின்றது. மீடியாவில் வந்த தகவல்களின்படி அந்த அறிக்கையில் மோடி மீது எந்தக் குற்றமும் இல்லை. அவர் மீது வழக்குத் தொடுப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என அந்த அறிக்கை கூறுவதாக இருந்தது.

இந்த வழக்கில் ஜக்கியா ஜாஃப்ரியால் ஒரு சாட்சியாக சேர்க்கப்பட்டிருக்கும் சஞ்சீவ் பட் கூறும்போது,“மோடிக்கு எதிராக இவ்வளவு நேரடி சாட்சிகள் இருக்கும்போது அவரை குற்றமற்றவர் எனக் கூறுவது அபாண்டமானதும், ஒரு சார்பானதும் ஆகும்எனக் கொந்தளிக்கின்றார். (பார்க்க சஞ்சீவ் பட்டின் பேட்டி)

சட்ட வல்லுநர்களின் கருத்துப்படி இவ்வழக்கில் எஸ்.ஐ.டி யின் அறிக்கைக்கும், அமிகஸ் க்யூரி ராஜு ராமச்சந்திரனின் அறிக்கைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. (பார்க்க : அமிகஸ் க்யூரி தனிக் கட்டுரை) ராஜு ராமச்சந்திரன் மோடியின் வாக்குமூலத்தில் உள்ள குளறுபடிகளையும், அதைத் தொடர்ந்த பல விஷயங்களையும் அடுக்கடுக்காக எடுத்து வைக்கின்றார்.

அதே சமயத்தில் ராஜு ராமச்சந்திரன் எஸ்.ஐ.டி பற்றி குறிப்பிடும் போது, உச்சநீதிமன்றம் எஸ்.ஐ.டி மீது உள்ள நம்பிக்கை குறைவினால் தன்னை அமிகஸ் க்யூரியாக நியமிக்கவில்லை என்றும், எஸ்.ஐ.டி யின் அறிக்கைக்கு அப்பாற்பட்ட ஒரு மாற்றுப் பார்வை வேண்டும் என்பதற்காகவே தன்னை நியமித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது ஒருபுறம் இருக்க, எஸ்.ஐ.டி தனது முழு அறிக்கையை முழுமையான ஆவணங்கள், சாட்சிகள் மற்றும் இன்னபிற விவரங்களுடன் சமர்ப்பிக்க மார்ச் 15 வரை அவகாசம் உள்ளது.

எஸ்.ஐ.டி தனது அறிக்கையில் இறுதியாக என்ன சொல்ல இருக்கின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்நேரத்தில் வழக்கைப்பற்றிக் குறிப்பிட்ட ஜக்கியா ஜாஃப்ரி இப்படி கூறுகின்றார்:

இந்நிலையில் வழக்கை அவ்வளவு சுலபமாக முடித்து விட அனுமதிக்க முடியாது. எவ்வளவு காலம் எடுத்தாலும் நீதி கிடைக்கும் வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம்.

கடந்த 10 ஆண்டுகளில் வழக்கில் எந்த ஒரு முன்னேற்றமும் நடைபெறவில்லை என்று சொல்லி விட முடியாது.

நடந்த இனப்படுகொலையில் மோடியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. உலகளவில் அவரின் பெயருக்கு களங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைவருக்கும் மோடியின் உண்மையான நிறம் தெரியத் தொடங்கியுள்ளது. மோடியின் கைகளில் படிந்துள்ள இரத்தக் கறையினை அவர் அவ்வளவு சுலபமாக அழித்து விட முடியாது.

மோடி போன்ற செல்வாக்கு மிக்க மனிதர்களை போதுமான உறுதியான ஆதாரங்கள், சாட்சிகள் இன்றி குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விட முடியாது என்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் அவருக்கு எதிரான அனைத்து ஆதாரங்களையும் மிகவும், உறுதியுடனும், நிதானமாகவும் திரட்டி வருகின்றோம்.

என்றாவது ஒரு நாள் அவர் இதற்கான விலையை கொடுத்தே ஆக வேண்டும் என்று கூறும் ஜக்கியா ஜாஃப்ரிமோடி தன்னுடைய குற்றங்களை ஒத்துக்கொண்டாலே போதும், அவரைப் போன்ற (முகமூடி அணிந்துள்ள) மனிதர்களுக்கு அதுவே மிகப் பெரிய தண்டனைதான்என்கிறார்.

ஆக, தன்னுடைய 70 வது வயதிலும், நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் குழுமம் போன்ற மனித உரிமை அமைப்புகளுடன் சேர்ந்து இரத்தக் கறை படிந்துள்ள ஒரு நாட்டின் முதல்வருக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் ஜக்கியா ஜாஃப்ரி நிச்சயமாக நீதிக்கான போராட்டத்தில் ஒரு முன்மாதிரி என்பதில் நீதியை விரும்பக் கூடிய எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை.

ஜக்கியா ஜாஃப்ரியின் போராட்டத்தை மாதிரியாக்கி நீதிக்கான பயணத்தின் முன் வரிசையில் நிற்க நாமும் உறுதியேற்போம்.

நினைவலைகள் பார்வை

இது ஒரு ஹிந்துவின் வீடு!

ரூபா மோடியின் கதை?!

ரூபா மோடி, அவருடைய கணவர் தாரா மோடி மற்றும அவர்களின் இரண்டு குழந்தைகள் குர்பர்க் சொஸைட்டியில் வாழ்ந்த ஒரேயொரு முஸ்லிமல்லாத குடும்பத்தினர் ஆவர்.

ஜக்கியா ஜாஃப்ரின் வழக்கு விசாரணைக்கு நீதிமன்றம் வந்திருந்த அவர், 10 வருடத்திற்கு முன்பாக குல்பர்க் சொஸைட்டியில் என்ன நடந்தது என்பதை ஃப்ரண்ட்லைன் பத்திரிகைக்கு பேட்டி அளித்திருந்தார்:

கோத்ராவில் ரயில் எரிக்கப்பட்ட செய்தியை நாங்கள் கேள்விப்பட்டபோது என்னுடைய குழந்தைகள் டியூஷன் சென்றிருந்தனர். படத் துறையில் இருந்த என்னுடைய கணவர் அவருடைய அலுவலகத்தில் இருந்து போனில் அழைத்து ஒரு சில இடங்களில் கலவரம் நடந்து கொண்டிருக்கின்றது. நாம் கவனமாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். உடனே நான் என்னுடைய குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டேன்.

அந்த நேரத்தில் என்னுடைய பக்கத்து வீட்டுக்காரர்கள் அனைவரும் அச்சமுற்று குழப்பமடைந்தவர்களாக வீடுகளை விட்டு வெளியே வந்துகொண்டிருந்தனர். எங்களுடைய வீட்டிலிருந்து பார்த்தால் பக்கத்து குடியிருப்புகளின் மாடியைப் பார்க்க முடியும்.

அப்போது அந்த மாடியிலிருந்து ஒருவர் கைகளில் கோடாரியுடன் எங்களை நோக்கி கை நீட்டி பேசிக்கொண்டிருந்ததை பார்த்த நாங்கள்பயந்தவர்களாக அருகிலிருந்த இஹ்ஸான் ஜாஃப்ரி சாஹிப் அவர்களின் வீட்டில் தஞ்சமடைந்தோம்.

அவர் காங்கிரஸ் எம்.பி என்பதால் எங்களை எப்படியாவது பாதுகாப்பார் என்பது எங்களின் நம்பிக்கை. அப்போது திடீரென நூற்றுக்கணக்கானோர் கைகளில் பயங்கர ஆயுதங்களுடன் சுவர் ஏறிக் குதித்து உள்ளே வந்தனர். அவர்களின் கைகளில் நகச்சாய பாட்டில் போன்ற சிறிய கண்ணாடி பாட்டில்கள் இருந்தன. அவர்கள் அவற்றை வீடுகளுக்குள் எறிந்தனர். அது தரையில் பட்டதும் வெடித்துச் சிதறி தீப்பிழம்பானது. அவர்கள் காலனிக்குள் நுழையும் முன்பே தண்ணீர் இணைப்பை துண்டித்து விட்டனர். எனவே எங்களுக்கு தீயை அணைப்பதற்கு வழி தெரியவில்லை. நாங்கள் கேஸ் சிலிண்டர்கள் மீது பட்டு விடாதவாறு சிலிண்டர்களை பாதுகாப்பான இடங்களில் வைத்தோம்.

அவர்கள் வெறிபிடித்தவர்களாக இஹ்ஸான் ஜாஃப்ரி சாஹிபை வெளியே வருமாறு கூச்சலிட்டனர். அப்போது எங்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் அனைவரும் துண்டு துண்டாக வெட்டப்பட்டுக் கொண்டிருந்தனர். நான் அந்நேரத்தில் பெண்களின் கூக்குரல்களை கேட்டேன். பின்னர்தான் தெரிந்தது அவர்கள் அனைவரும் கற்பழிக்கப்பட்டிருக்கின்றனர் என்று.

மாலைப்பொழுது நெருங்கும்போது கிட்டத்தட்ட எல்லா அறைகளிலும் தீப்பற்றிக் கெண்டது. நாங்கள் அனைவரும் வீட்டின் பின்புறம் இருந்த ஏணி வழியாக மொட்டை மாடிக்கு செல்ல முயன்றோம். அந்நேரத்தில் பலர் தடுமாறி கீழே விழுந்து புகை மண்டலத்தில் சிக்கி மயக்கமடைந்தனர்.

அந்நேரத்தில், “என்னுடைய மரணம்தான் உங்களை பாதுகாக்கும் என்றால் என்னை சாக விடுங்கள்என்று இஹ்ஸான் ஜாஃப்ரி சாஹிப் கத்திக் கொண்டிருந்தார். இதுதான் நான் அவரிடமிருந்து கேட்ட கடைசி சப்தமாகும். அதன்பிறகு அவர் கொல்லப்பட்டு தீயிலிடப்பட்டார்.

அப்போது என்னுடைய இரண்டு குழந்தைகளும் என்னுடன் தான் இருந்தன. நானும் கீழேவிழுந்தேன். என்னுடைய மகள் அம்மா எழுந்திரியுங்கள் என்று கத்திக் கொண்டே இருந்தாள். நான் எழுந்து பார்த்தபோது என்னுடைய மகள் மட்டும்தான் என்னுடன் இருந்தாள். ஆனால் என்னுடைய மகன் அசாரைக் காணவில்லை.

ஜாஃப்ரி சாஹிப் வீட்டில் மறைந்திருந்த நாங்கள் மொட்டைமாடி உட்பட அனைத்து இடங்களிலும் அவனைத் தேடினோம். ஆனால் அவன் எங்குமே இல்லை.

நான் வெளியே செல்ல முயற்சித்த போது என்னை அனைவரும் தடுத்தனர். வெளியே சென்றால் கொன்று விடுவார்கள் என்று சொன்னார்கள்.

அப்போது ஜகியாபென் என்பவர் சொன்னார், அவர் ஓர் தாய், அவரை விடுங்கள், அவரின் மகனை தேடட்டும் என்றார். பின்னர் சாய்பாக் போலீஸ் ஸ்டேசனில் அசார் போன்று ஒருவன் இருப்பதாகச் சொன்னார்கள். நானும் சென்று பார்த்தேன். ஆனால் அது என் மகன் இல்லை. இருப்பினும் நான் அவனை தேடிக் கொண்டிருந்தேன். (இன்றும் தேடிக் கொண்டு இருக்கிறேன்.)

கிட்டத்தட்ட இரண்டு வாரம் கழித்து நான் மீண்டும் குல்பர்க் சொஸைட்டிக்குச் சென்றேன். அங்கு அனைத்து வீடுகளும் எரிக்கப்பட்டிருந்தன. அதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் என்னுடைய வீடு மட்டும் அப்படியே இருந்தது. யாரும் என்னுடைய வீட்டை தொடக்கூட இல்லை. ஏனென்றால் நான் என் வீட்டு வாசலில் (பாரத்) மாதவன் படத்தை தொங்க விட்டிருந்தேன். ஒரு வேளை இது ஒரு ஹிந்துவின் வீடாக இருக்கலாம் என்று எண்ணி அவர்கள் விட்டு விட்டார்கள் போலும்.

 

நான் சில நேரங்களில் இப்படி சிந்திப்பதும் உண்டு. நான் என்னுடைய வீட்டை விட்டு வெளியேறி இருக்காவிட்டால் நான் என்னுடைய மகனை இழந்திருக்க மாட்டேனே!என்று.

மேலும் ரூபா மோடி சொல்லும் போது, “ஜக்கியா ஜாஃப்ரியின் வழக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில் அதில் முதல்வர் மோடி முக்கிய குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். நரேந்திர மோடி அனைத்தையும் ஆட்டிப் படைக்கின்றார் என்பது குஜராத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும். இப்படி இருக்கும் போது கலவரம் மட்டும் எப்படி மோடியின் ஆசீர்வாதம் இல்லாமல் நடந்திருக்க முடியும்?”

நநேரந்திர மோடி பர்சானியாதிரைப்படத்தை குஜராத்தில் திரையிட அனுமதிக்கவில்லை. அவர் எதைக்கண்டு பயப்படுகின்றார்என்று கேள்வி எழுப்புகிறார் மனித உரிமை ஆர்வலர் செட்ரிக் பிரகாஷ்!

இது போன்ற சம்பவத்தை மீண்டும் அனுமதியோம்!

சஞ்சீவ் பட் இந்திய போலீஸ் துறையின் குஜராத் அதிகாரியான இவர், பணியிலிருந்து மோடி அரசால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். குர்பர்க் சொஸைட்டி வழக்கில் இவர் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கின்றார். ஜக்கியா ஜாஃப்ரி தொடுத்துள்ள வழக்கில் இவரும் ஒரு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

கலவரம் நடந்ததற்கு முன்பு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தன்னுடைய இல்லத்தில் கூட்டியிருந்த சிறப்பு கூட்டத்தில் இவரும் கலந்து கொண்டிருந்தார். அது தொடர்பாக அவர் தாக்கல் செய்த அபிடவிட்டினால் வேறு வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டு பின்னர் பணி இடை நீக்கமும், கைதும் செய்யப்பட்டுள்ளார். இதனை நாம் விடியலில் தொடர்ந்து பதிவு செய்து வந்துள்ளோம்.

சஞ்சீவ் பட் சிறப்பு புலனாய்வுக்குழுவை (குஐகூ) பற்றி  சொல்லும்போது, “அது சாட்சிகளை அழித்து மறைத்து விட்டதுஎன்கின்றார். மேலும்,“குஜராத்தில் நடந்த இனப்படுகொலையை பற்றி  மோடி சொல்வது போன்று எதிர்பாராத விதமாக நடக்கவில்லை. இது திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலையாகும்என்கிறார்.

எஸ்.ஐ.டி என்னுடைய சாட்சியங்களை திசை திருப்ப முயற்சித்து வருகின்றது,என்னுடைய வேலையே போனாலும் கூட பரவாயில்லை. என்ன விலை கொடுத்தாவது குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தே தீருவேன்என்கிறார்.

சஞ்சீவ் பட்,  ஃப்ரண்ட்லைன்(ஊணூணிணtடூடிணஞு) பத்திரிகைக்கு அளித்த பேட்டியிலிருந்து,

 

கேள்வி :

ஜக்கியா ஜாஃப்ரி வழக்கில் எஸ்.ஐ., முத்திரையிடப்பட்ட தனது அறிக்கையை சமர்ப்பித்த பின்பு  முதல்வர் நரேந்திர மோடி பிப்ரவரி 272002 அன்று நடத்திய கூட்டத்தில் இருந்ததால், அவரை குற்றவாளி என நிரூபிக்கக் கூடிய உண்மைகள் தெரிந்திருந்தும் நீங்கள் ஏன் முன்பே இந்த உண்மைகளைச் சொல்லவில்லை?

 

சஞ்சீவ் பட் :

முதலில் நான் ஒரு போலீஸ் அதிகாரி. மேலும் அந்நேரத்தில் நான் கலவரம் நடந்து கொண்டிருக்கும் போது மத்திய உளவுத்துறையுடனும், நாட்டின் ஆயுதப்படைகளுடனும் உளவுத் தகவல்களை பரிமாறும் முக்கிய பொறுப்பில் நான் இருந்தேன்.

இதுபோன்ற நம்பத்தகுந்த உணர்ச்சிப்பூர்வமான தகவல்களை நாங்கள் ரகசியமாக வைத்திருக்க வேண்டும். நீதித்துறையோ, சட்டத்துறையோ எங்களிடம் கேட்காமல் நாங்களாக முன் வந்து இத்தகவல்களை வெளியிட முடியாது. நான் அழைக்கப்படாமல் நானாக முன் வந்து பேசமுடியாது.

விசாரணை அதிகாரிகள் உட்பட குஜராத்தில் உள்ள அனைவருக்கும் நான் என்ன செய்து கொண்டிருந்தேன் என்பது தெரியும்.

ஜக்கியா ஜாஃப்ரி வழக்கில் என்னுடைய பெயர் சேர்க்கப்பட்டுள்ளதால் 2009 ல் எஸ்.ஐ.டி என்னை அழைத்து நானும் என்னுடைய சாட்சியத்தை பதிவு செய்தேன்.

 

கேள்வி :

உங்களுக்கு பேச வாய்ப்பு கிடைத்த பின்பு, அதாவது உண்மைக்கான கதவுகள் திறக்கப்பட்ட பின்பு, அப்போது என்ன நடந்தது என்பதை எங்களுக்கு சொல்ல முடியுமா?

 

சஞ்சீவ் பட்:

குல்பர்க் சொஸைட்டியில் 69 பேர் கொல்லப்பட்ட வழக்கில் மோடி மீது குற்றம் சுமத்தி ஜக்கியா  ஜாஃப்ரி தொடர்ந்த வழக்கில் என்னையும் ஓர் சாட்சியாக சேர்த்திருந்தார்.

எனக்கு தெரிந்த உண்மைகளை சொல்வதற்கு இது ஓர் வாய்ப்பாக எனக்கு அமைந்தது.

அந்த வழக்கை விசாரித்து வரும் எஸ்.ஐ.டி. என்னை பலமுறை விசாரணைக்கு அழைத்தது. முதலில் நவம்பர் 2009ல் அழைத்திருந்தது. சமீபத்தில் மார்ச்2011 ல் அழைத்திருந்தது. எப்படியாயினும், தனிப்பட்ட முறையில் எனக்குத் தெரிந்தது என்னவென்றால் எஸ்.ஐ.டி. யிடம் நிறைய குறைபாடுகளும், திருப்தியின்மையும் காணப்படுகின்றது. அவர்களின் அணுகுமுறையும் சொல்லும்படியாக இல்லை.

எஸ்.ஐ.டி. விசாரணையின் போது நான் சொன்ன விஷயங்கள் சில நாட்களில் ஒரு பிரபல வார பத்திரிகையில் வெளி வந்து விட்டது. நான் எஸ்.ஐ.டி. விசாரணையில் பல நம்பிக்கைக்குரிய இரகசியமான தகவல்களை சொல்லியிருந்தேன். ஆனால் எஸ்.ஐ.டி. யில் உள்ள  யாரோ சிலர் செய்திகளை கசியச் செய்து வெளியில் கொடுத்து வருகின்றனர். எஸ்.ஐ.டி. என்னிடம் மெகானி நகர் வழக்கு (குல்பர்க் சொஸைட்டி அமைந்துள்ள இடம்)பற்றி விசாரித்தனர். அது மிகப்பெரிய சதி வலையை பின்னணியாகக் கொண்டது. நான் அதைப்பற்றி பேசத்துவங்கிய உடன் இது வழக்குக்கு தொடர்பில்லாதது என்றனர்.

ஏப்ரல் 2011 அன்று எஸ்.ஐ.டி. யுடன் நான் எதிர் கொண்டு வரும்பிரச்சனைகள் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் ஒரு அபிடவிட் தாக்கல் செய்தேன். அதிலேயே பிப்ரவரி 27 2002ல் நடந்த மீட்டிங்கிற்கு (முதல்வர் நரேந்திர மோடி நடத்திய மீட்) சாட்சியாக கே.டி.பந்த் என்ற கான்ஸ்டபிளையும், சாட்சியாக கூறி இருந்ததையும் பின்னர் அவருக்கு நேர்ந்த இன்னல்களையும் குறிப்பிட்டிருந்தேன்.

நான் ஆகஸ்ட் 2011ல் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு, கான்ஸ்டபிள் கே.டி.பந்தை போலியாக ஒரு அபிடவிட் பைல் செய்யுமாறு நான் மிரட்டியதாக காரணம் கூறப்பட்டு செப்டம்பர் 2011ல் நான் கைது செய்யப்பட்டேன். பின்னர் அக்டோபர் 172011ல் பிணையில் நான் வெளியே வந்தேன்.

 

கரெக்ஷன் போட்டது

 

கேள்வி:

எஸ்.ஐ.டி. மீது நம்பிக்கையில்லை என்று மீண்டும், மீண்டும் கூறி வருகின்றீர்கள். இந்நேரத்தில் எஸ்.ஐ.டி மோடி நல்லவர் என்று சொல்லியிருக்கின்றதே அது பற்றி உங்களின் கருத்து என்ன?

 

சஞ்சீவ் பட்:

ஆம்! எஸ்.ஐ.டி. முன்பே தீர்மானித்து வைத்த வழியில் தன்னுடைய விசாரணையை கொண்டு செல்கின்றது. எஸ்.ஐ.டி. யின் தலைவர் ஆர்.கே. ராகவன் மீது எனக்கு நம்பிக்கையில்லை. ஆர்.கே. ராகவன் தலைமையில் எஸ்.ஐ.டி நீதியான, நேர்மையான முறையில் விசாரணையை நடத்த முடியாது.அவர் குஜராத்தில் மிகவும் செல்வாக்கு மிக்கவர்.

சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த என்னுடைய அபிடவிட்டில் கூட எஸ்.ஐ.டி முக்கியமான சாட்சியங்களை அழித்தும், மறைத்தும் வருகின்றது என்று நான் குறிப்பிட்டுள்ளேன். அவர்கள் முக்கியமான ஆவணங்கள், பதிவுப் புத்தகங்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவேயில்லை. அதே போன்று அந்த ஆவணங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனில் அவை எஸ்.ஐ.டி யிடம் கொடுக்கப்படக் கூடாது.

 

கேள்வி:

பிப்ரவரி 272002 (கலவரம் துவங்கிய நாள்) அன்று என்ன நடந்தது, நீங்கள் முதல்வருடன் (மோடி) கலந்து கொண்ட மீட்டிங் பற்றி சொல்ல முடியுமா?

 

சஞ்சீவ் பட்:

நான் அப்போது உளவுப்பிரிவு அதிகாரியாக இருந்தேன். பிப்ரவரி 272002 அன்று நாங்கள் இரண்டு முறை மோடியை சந்தித்தோம். இரண்டாவது தடவை சந்திக்கும் போது குல்பர்க் சொøஸட்டி படுகொலை தொடங்கி விட்டிருந்தது. கலவர சூழ்நிலை தொடர்பாக எண்ணற்ற செய்திகள், எச்சரிக்கைகள், முதல்வருக்கு கொடுக்கப்பட்டது. நான் ஒரு பேக்ஸ் கூட செய்தேன்(பேக்ஸ் பிரதி ஃப்ரண்ட் லைன் வசம் உள்ளது).

அந்த பேக்ஸில் நடக்கவிருக்கும் அசம்பாவிதங்கள் தொடர்பாக தகவலும் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் மோடி எதிலும் கவனம் செலுத்தவில்லை. மாறாக, கடந்த கால நிகழ்வுகளில், அகமதாபாத்தில் நடந்த கலவரங்களில் இஹ்ஸான் ஜாஃப்ரி இந்துக்ள் மீது எப்போது, எங்கே துப்பாக்கியைப் பயன்படுத்தினார் என்று விசாரித்துக் கொண்டிருந்தார்.

 

கேள்வி :

இந்தப் போராட்டத்தை எப்படி முன்னெடுத்துச் செல்ல இருக்கின்றீர்கள்? உங்களின் கோரிக்கைகள் என்ன?

 

சஞ்சீவ் பட்:

நாங்கள் சட்டம் தன் கடமையை செய்யட்டும் என எதிர்பார்க்கின்றோம். ஜக்கியா ஜாஃப்ரி மோடி மீது முறைப்படி குற்றம் சுமத்தியுள்ளார். நீங்கள் குற்றவாளி இல்லை என்றால் சட்டம் தன் கடமையைச் செய்ய விடுங்கள்.

அதேபோன்று என்னுடைய சாட்சியத்தை சட்டப்பிரிவு 164ன் கீழ் ஒரு மாஜிஸ்ட்ரேட் முன் பதிவு செய்ய வேண்டும் என்றும் எஸ்.ஐ.டி. யிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.

 

கேள்வி:

கலவரங்கள் நடந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது. நீதி கிடைக்கும் என்று நம்புகின்றீர்களா?

 

சஞ்சீவ் பட்:

நீதியின் சக்கரம் மெதுவாக சுழன்று கொண்டிருக்கின்றது. நாங்கள் அது தொடர்ந்து சுற்றும்படி உறுதி செய்வோம். 2002 போன்று மீண்டும் ஒரு சம்பவம் நடக்கக்கூடாது. குற்றவாளிகள் அடையாப்படுத்தப்பட வேண்டும். எஸ்.ஐ.டி. யின் விசாரணையும் நீதியை கேள்விக்குறியாக்கிக் கொண்டிருக்கின்றது.

 

கேள்வி :

குஜராத் (போலி) என்கவுண்டர்களுக்கு தவறான முறையில் பெயபர் போனது. ஒரு போலீஸ் ஆபிஸர் என்கின்ற வகையில் உங்களின் கருத்து என்ன?

 

சஞ்சீவ் பட்:

நடந்த என்கவுண்டர்கள் இந்த மனிதரின் (மோடியின்) முக மூடியைத்தான் காட்டுகின்றன. துரதிஷ்டவசமாக நாம் ஒரு பலஹீனமான பிரதமரைக் கொண்டுள்ளோம். உறுதியான முடிவுகள் எடுப்பதற்கு கூட்டணி அரசு ஒரு தடையாக இருக்கின்றது.

துளசி பிரஜாபதி (ஷொஹ்ராப்தீன் ஷேக் என்கவுண்டருடன் தொடர்புடையது) என்கவுண்டர் வழக்கிலேயே மோடியை தண்டித்திருக்க முடியும். அதே போன்று மோடியின் சகாவான ஹரேன் பாண்டியாவின் படுகொலையிலும் விசாரணை தீவிரமாக்கப்பட்டால் ஒரு மிகப்பெரிய சதி வெளியே வரும்.

 

கேள்வி :

கடந்த பத்து ஆண்டுகளில் மோடி தன்னுடைய காவிக்கொள்கையிலிருந்து விலகி நிற்பது போன்றும், இப்போது பன்னாட்டு பகாசுர நிறுவனங்களிடம் நெருங்கி இருப்பது போன்றும் உள்ளதே அதுபற்றி?

 

சஞ்சீவ் பட்:

விஷயம் என்னவெனில் பா.ஜ.க. வுக்கு தேசிய அளவில் மோடி மிகப்பெரிய சொத்தாகும். அவரால் கட்சிக்கு நன்மை விளையாது என்றிருப்பினும் கட்சிக்கு அவரின் பணபலம் தேவை. எந்த மனிதர்களாலும் முடியாத அளவிற்கு பணத்தை கொண்டு வருவதில் மோடி திறமையானவர்.

பன்னாட்டு நிறுவனங்களும் சர்வாதிகாரிகள் போன்ற முதல்வரைத்தான் விரும்புகின்றனர். அதேபோன்று குஜராத் அரசியலில் அவருக்கு சரியான எதிரியும் இல்லை. எனவேதான் பன்னாட்டு நிறுவனங்கள் அவரை விரும்புவதுடன் அதிகளவில் முதலீடும் செய்து வருகின்றனர். சில நிறுவனங்கள் அவரை அதிகளவில் புகழ்ந்தும் வருகின்றன. இது அதிர்ச்சிகரமானதும்,

ஆபத்தானதும் ஆகும்.

 

பெட்டிச் செய்தி

 

கலவரத்தில் இடிக்கப்பட்ட சேதப்படுத்தப்பட்ட பள்ளிவாசல்கள் மீள் நிர்மாணம் செய்யப்பட வேண்டும்! குஜராத் உயர் நீதிமன்றம்

 

குஜராத் கலவரத்தின் போது அங்கு ஏராளமான பள்ளிவாசல்கள் இடிக்கப்பட்டன. குஜராத் அரசு ஒத்துக் கொண்டபடி 535 வழிபாட்டுத்தலங்கள் இடிக்கப்பட்டு அல்லது சேதப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த வழக்கு தொடர்பாக குஜராத் உயர்நீதிமன்ற பெஞ்சின் நீதிபதிகள் பாஸ்கர் பட்டாச்சார்யா மற்றும் ஜே.பி. பர்திவாலா அவர்கள் வெளியிட்டுள்ள ஆணையின்படி சிறுபான்மை சமூகத்திற்கு சொந்தமான வழிபாட்டுத்தலங்கள் கலவரக்காரர்களால் திட்டமிட்டு தகர்க்கப்பட்டுள்ளது என்றும், அதனை மீள் நிர்மாணம் செய்து கொடுப்பது அரசின் கடமை என்றும் குறிப்பிட்டுள்ளது.

அந்த பள்ளிவாசல்கள், நிறுவனங்கள், மையவாடிகள் ஏற்கனவே மீள் நிர்மாணம் செய்யப்பட்டிருந்தால் அதற்கான தொகையை அரசு அவர்களுக்கு கொடுத்து விட வேண்டும் எனவும், பழைய கட்டிடத்தை விட பெரியதாகவோ அதிகமான இடத்தை நிர்மாணிப்பதற்கு எவ்வளவு செலவாகும் என்பதை கணக்கிட்டு அந்தத் தொகை மட்டும் கொடுக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

ஆனால், குஜராத் அரசோ சட்டப் பிரிவு 27 ன் படி பொதுப்பணத்தை இதற்கு செலவிட முடியாது என்று வாதிட்டது.

ஆனால், குஜராத் உயர்நீதி மன்றமோ சட்டப்பிரிவு 21, 25,26 ஆகியவற்றைக் காட்டி, இச்சட்டப்பிரிவுகள் நாட்டின் குடிமக்களின் சுதந்திரமான வாழ்வுக்கு உரிமையளிக்கின்றது எனவும்,  அதே போன்று எந்த மதத்தை பின்பற்றவும், ஏற்றுக்கொள்ளவும் பிரச்சாரம் செய்யவும் முடியும் எனவும் ஆனால் அது இங்கு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. எனவே அவர்களுக்கு ஈட்டுத்தொகை வழங்கப்பட வேண்டும் என்பது.

மேலும் குஜராத் அரசு வாதிடும் போது 2001 குஜராத் பூகம்பத்தின் போது பாதிக்கப்பட்ட வழிபாட்டுத்தலங்களுக்கு இப்படி உதவி செய்யப்படவில்லை என்று கூறியது. ஆனால், அந்த வாதத்தை நிராகரித்த நீதிமன்றம் இறைவனின் விதியால் ஏற்படும் சம்பவங்களையும், நீங்கள் வேண்டுமென்றே செயல்படாமல், தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல், மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கத் தவறியது போன்றவற்றையும் ஒப்பீடு செய்ய முடியாது என்று கூறியது.

அது மட்டுமல்ல, அந்த வழிபாட்டுத்தலங்கள் இடிக்கப்படுவதற்கு காரணமாக இருந்தவர்கள் என்று எந்த பகுதியில் உள்ள நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகின்றதோ அந்த நீதிமன்றங்கள் மூலம் இந்தப் பணிகளுக்கு அரசு செலவிட இருக்கும் தொகையினை அந்த குற்றவாளிகளிடமிருந்தே மீட்டுக் கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இந்தப் பணிக்கென அனைத்து மாவட்ட நீதிமன்றங்களை தேவையான ஆவணங்களுடன் பாதிக்கப்பட்டவர்கள் அணுகலாம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

மேலும் குஜராத் அரசு பாதிக்கப்பட்ட 535 பள்ளிவாசல்களில் 292 ஐ சரி செய்து விட்டதாக கூறியுள்ளது. ஆனால், குஜராத் இஸ்லாமிக் ரீலிஃப் கமிட்டியோ இது உண்மைக்குப் புறம்பானது என்றும் பாதிக்கப்பட்ட இடங்களை கணக்கெடுப்பதற்கு அரசு ஒரு சர்வே நடத்த கோர்ட் உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.

 

நினைவலைகள்1

கோத்ரா விபத்து வி.எச்.பி. யின் சதி!

 

பாரத் பன்சால்

 

குஜராத் மாநிலம் ரமேரிலில் ஜந்தா நகர் பகுதியில் வாழ்ந்து வரும் பாரத் பன்சால் 49, நடந்த சம்பவங்களை பசுமையாக இன்றும் நினைவு கூறுகின்றார். அவரின் மனைவி ஜோதி காயத்ரி பரிவாருடன் (வி.எச்.பி. யின் பிரிவு) நெருங்கிய தொடர்பிலிருந்துள்ளார். அவருக்கு வி.எச்.பி. கொடுத்த விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அயோத்திக்கு செல்வதற்கு அவரின் பெயரையும் பதிவு செய்துள்ளார். விண்ணப்ப படிவத்துடன் 100 ரூபாய் கொடுத்தால் போதும், மற்ற அனைத்து ஏற்பாடுகளையும் அவர்களே கவனித்துக் கொள்வார்கள்.

ஆனால், அயோத்திக்கு சென்ற அவரின் மனைவி ஜோதி திரும்பிவரவில்லை. ஏனெனில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிந்த விபத்தில் பலியான 59 பேரில் அவரும் ஒருவர். அவரின் மரணம் பன்சால் மற்றும் அவரின் இரு குழந்தைகளான ஷிஃபாலி, தாவர் ஆகியோரை தனிமையாக்கியது. அதனைத் தொடர்ந்து பன்சால் பீலா என்ற விதவையை மணந்து கொண்டார். பீலா குஜராத் கலவரத்தில் உயிரிழந்த வி.எச்.பி. உறுப்பினர் ஒருவரின் மனைவியாவார். கடந்த காலத்தை நினைவு கூரும் பாரத் பன்சால் இப்படி கூறுகின்றார்;

பழைய நினைவுகளிலிருந்து மீண்டு வருவதற்கு எனக்கு நான்கு வருடங்களாயின. இதில் மிகவும் வேதனைக்குரிய விஷயம் என்னவெனில் ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வி.எச்.பி. உட்பட யாருமே உதவி செய்ய முன்வரவில்லை.

கோத்ரா விபத்து வி.எச்.பி. திட்டமிட்டு செய்த சதிச் செயலாகும்.

 

கோத்ரா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த 63 பேர் நிரபராதிகள் என்று வெளியே வந்தபோது நான் அளவற்ற மகிழ்ச்சியடைந்தேன். குற்றவாளிகள் எனப்பட்டு சிறையினுள் இருக்கும் 11 பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று சொன்ன பாரத் பன்சால் அதைத் தொடர்ந்து மேலும் சொல்லும் போது குஜராத் கலவரம் நடக்கும் போது லோக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் கலவரக்காரர்களிடம் உங்களுக்கு இரண்டு நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்குள்ளாக நீங்கள் என்ன செய்ய  வேண்டுமோ அதைச் செய்து கொள்ளுங்கள்என்றார்,

என்று சொல்லும் பாரத் பன்சால் மோடி எப்போது முதல்வர் பதவியிலிருந்து விலகுகின்றாரோ அப்போதுதான் நடந்த முழு உண்மைகளும் வெளியில் வரும்என்கிறார்.

 

நினைவலைகள் 2

ஆபிதா பானு பதான்

 

குஜராத் கலவரம் நடந்து கொண்டிருந்த போது ஆபிதா பானு, அவரின் கணவர் முன்னா கான் மற்றும் நான்கு குழந்தைகள் குல்பர்க் சொøஸட்டியில் காங்கிரஸ் எம்.பி. இஹ்ஸõன் ஜாஃப்ரியின் வீட்டில் தஞ்சமடைந்தனர். பலரைப் போன்று அவர்களும் அது பாதுகாப்பான இடம் என்று தப்புக் கணக்கு போட்டுவிட்டனர்.

குல்பர்க் சொஸைட்டியில் நடந்த கலவரத்தில் ஆபிதா பானுவின் கணவர் முன்னா கானும் அவர்களின் 4 வயது பெண் குழந்தையும் 69 பேருடன் சேர்த்து உயிருடன் எரிக்கப்பட்டனர்.

கணவர் முன்னாகானின் வருமானம் மற்றும் தான் செய்த தையல் தொழில் மூலம் வாழ்க்கையை ஓட்டி வந்த ஆபிதா பானுவின் வாழ்வை புரட்டிப் போட்டது கலவரம்.

அவரும் அவரின் மூன்று பெண் குழந்தைகளும் (சிறிய குழந்தைக்கு கலவரம் நடக்கும் போது 2 மாதம் தான் ஆகியிருந்தது) 11 மாதம் நிவாரண முகாமில் தங்கியிருந்த அவர் பின்பு அரசு சாரா நிறுவனம் ஒன்று கட்டிக் கொடுத்த வீட்டில் தங்கிருக்கின்றார். அவரும் அவரைப் போன்றே கலவரத்தில் கணவனை இழந்த மற்ற விதவைகளும் வாழ்க்கையை கடும் சிரமத்திற்கு மத்தியில் தான் நகர்த்தி வருகின்றனர்.

ஆபிதா பானு சொல்லும் போது எல்லாமே மாறிவிட்டது. நான் முன்பு ஒரு மாத்திரை கூட சாப்பிட்டது கிடையாது. ஆனால், இன்று மூட்டுவலி, இதயநோய், தைராய்டு என்று பல இன்னல்கள்.

இப்போது ஆபிதா பானுவின் வருமானம் என்னவெனில் ஒரு அங்கன் வாடியில் மின்சார பல்பிற்கு மின் இழை பொறுத்தும் பணியினை செய்கின்றார். கண் பார்வை மங்கிவருவதால் இப்போது அதுவும் சிரமமாக உள்ளது. 1000 மின் இழையைப் பொறுத்த குறைந்தது இரண்டு மணி நேரம் ஆகும். அதற்காக கிடைக்கும் வருமானம் ரூபாய் 6 மட்டுமே.

இங்கு வேலை கிடைப்பது மிகவும் கடினம் எனவே இது போன்ற கடினமான வேலைகளைத்தான் இவர்கள் செய்ய வேண்டியுள்ளது என்கிறார் சமூக சேவகரான நூர்ஜஹான் திவான்.

நினைவலைகள் 3

பல்கிஸ் பானு படேல்

28 வயதான பல்கிஸ் பானு யாகூப் படேல், தனக்கு நேர்ந்தவைகளை மறப்பதற்கு முயற்சித்து வருகின்றார்.

மார்ச் 2002 ல் ராந்திக் பூரிலிருந்து தன்னுடைய உறவினர்களுடன் பாதுகாப்பான இடம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது மதிய வேளையில் 30 பேர் கும்பல் கைகளில் வாள், அரிவாள் போன்ற கடுமையான ஆயுதங்களால் அவர்கள் பயணித்த வாகனத்தை தாக்கியுள்ளனர். தாக்குதலில் பல்கிஸ் பானுவின் மூன்று வயது மகள் ஸாலிஹா கொல்லப்படுகின்றார்.

குழந்தையை தூக்கி தரையில் அடித்துக் கொன்ற அவர்கள் பல்கிஸ் பானுவை கற்பழிக்கத் தொடங்கியுள்ளனர். எல்லாம் முடிந்து பல்கிஸ் பானுவிற்கு நினைவு திரும்பி விழித்துப் பார்த்தபோது அவருடன் வந்திருந்த அனைவரும் கொல்லப்பட்டு இருந்தனர். இருப்பினும் தைரியமிழக்காத பல்கிஸ் பானு ஒரு ஆதிவாசியின் வீட்டில் தஞ்சமடைந்துள்ளார்.

பின்னர் காவல் நிலையத்தில் சென்று புகார் செய்துள்ளார். அவரின் புகாரைக் ஏற்க மறுத்துள்ளது காவல்துறை. அவர் தொடர்ந்து

பிடிவாதமாக இருக்கவே 500 அடையாளம் தெரியாத நபர்கள் அவர்

குடும்பத்தினரை கொலை

செய்ததாக வழக்குப் பதிவு செய்தது

காவல்துறை.

சிறிது காலத்திற்குப் பின் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் அந்த வழக்கை முடித்துவிட்டார். அதனைத் தொடர்ந்து தேசிய மனித உரிமை ஆணையத்தில் அவர் முறையிட்டார். அதன் பிறகு சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட்டு 20 குற்றவாளிகளில் 13 பேருக்கு தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. தவறாக வழக்கு பதிவு செய்ததற்காக ஒரு ஹெட் கான்ஸ்டபிளுக்கு 3 வருட தண்டனை வழங்கப்பட்டது. எங்களுக்கு பல மிரட்டல்கள் வந்தது. இருப்பினும் நாங்கள் உறுதியுடன் நின்று போராடினோம் என்கிறார்.

பல்கிஸ் பானு தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளிலிருந்து, அதிர்ச்சியிலிருந்து மீண்டுவர இன்றும் கவுன்சிலிங் வகுப்புகளுக்கு சென்று வருகின்றார்.

பல்கிஸ் பானுவின் குழந்தை ஹாஜரா (பல்கிஸ் பானு பங்கப்படுத்தப்படும் போது இவர் 2 மாத கரு) மற்றும் படுகொலையில் தப்பிய பாத்திமா மற்றும் முஹம்மது யாசீன் ஆகியோர் இன்று பள்ளியில் பயின்று வருகின்றனர். நானும் படிக்கவில்லை என் கணவரும் 10 வரை தான் படித்துள்ளார். நாங்கள் எங்கள் குழந்தைகளை படிக்க வைப்போம் என்று உறுதியுடன் சொல்லும் அவர் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்கிறார்.

 

நினைவலைகள் 4

சலீம் முஹம்மது ஷேக்

சலீம் முஹம்மதுவின் குடும்பம் கலவரத்தில் இருந்து தப்பி விட்டது. ஆட்டோ ரிக்ஷா டிரைவரான சலீம் நரோடா பாட்டியா கலவரத்தில் நேரடியாக ஈடுபட்ட பா.ஜ.க. வை சேர்ந்த மாயா கோத்னானிக்கு எதிராக, நேரில் பார்த்த சாட்சியாவார். அங்கு 90 முஸ்லிம்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.

முஸ்லிம்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். நான் எப்படி அமைதியாக இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பும் சலீம் கலவரத்தில் தன்னுடைய சகோதரியின் மகள் மற்றும் அவளின் இரண்டு குழந்தைகளை பறி கொடுத்துள்ளார்.

நான்கு வயது குழந்தையுமா கோத்ராவிற்கு சென்றது? அவர்களுக்கு மதம் மற்றும் சமூகத்தைப் பற்றி என்ன தெரியும் என கேள்வி எழுப்புகின்றார் சலீம்.

கலவரத்திற்கு சில வருடங்களுக்குப் பிறகு நிவாரண முகாமில் இருந்து வீடு திரும்பியுள்ள சலீம், கலவரக்காரர்களுக்கு எதிராக சாட்சி சொல்ல தைரியமாக முன் வந்துள்ளார். அவரின் இந்த முடிவை வரவேற்கும் அவரின் மனைவி பாத்திமா என் கணவருக்கு நான் துணை நிற்பேன். இம்முறை நாங்கள் தப்பி விட்டோம். இது மீண்டும் நடந்தால்? என வினா தொடுக்கின்றார்.

இன்றும் எனது குழந்தைகள் நடு இரவில் முழித்து கலவரக்காரர்கள் வருகின்றார்கள் ஒடுங்கள் ஒடுங்கள் என கூக்கிகுரலிடுகின்றார்கள்.

கலவரம் நடப்பதற்கு ஒரு தினம் முன்பு ஒரு இந்து நண்பர் நடக்க இருக்கும் அபாயத்தைப் பற்றி சலீமிடம் சொல்லியுள்ளார். 1985 மற்றும் 1993 கலவரங்களில் இருந்த பகுதி பாதிக்கப்படவில்லை என்ற தைரியத்தில் இருந்த அவர் சம்பவத்திற்கு காக்கி டிரவுசர் அணிந்து வந்த கலவரக்காரர்களை கண்டு அதிர்ந்து போயுள்ளார்.

பிப்ரவரி 28 அன்று நரோடா பாட்டியா நோக்கி ஒரு கும்பல் வாள் மற்றும் ஆயுதங்களுடன் வருவதை உணர்ந்த சலீம் தன் சகோதரன் மூலம் குடும்பத்தை வேறு இடத்திற்கு மாற்றியுள்ளார். அந்நேரத்தில் அங்கு வந்த மாயாபென் கோத்னானி காவல்துறையினரிடம் ஏதோ பேசிவிட்டு சென்றார். அவர் சென்ற பிறகு கலவரம் துவங்கியுள்ளது. கலவரத்தின் போது சலீம் ஒரு பக்கமும் அவர் குடும்பத்தினர் ஒரு பக்கமும் பிரிந்து விட்டனர். இருவரும் ஒருவர் மற்றொருவரை இழந்து விட்டதாக நினைத்துள்ளனர். இறுதியில் 3 நாட்களுக்குப்பின் ஒன்று சேர்ந்துள்ள அவர்கள் இன்று பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக போராடி வருகின்றனர்.

பெட்டி செய்தி

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை ஆராய மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி யு.சி. பானர்ஜி கமிஷன் அறிவியல், தடயவியல் ஆய்வுகளை மேற்கொண்டு சபர்மதி எக்ஸ்பிரஸின் எஸ் 6 பெட்டி வெளியிலிருந்து தீ எரிக்கப்படவில்லை. அது உள்ளுக்குள் வைத்த தீயினால் தான் எரிந்துள்ளது என நிரூபித்துள்ளது. ஆனால், குஜராத் அரசு நியமித்த நானாவதி கமிஷனோ குஜராத் அரசுக்கு சார்பாக நானாவதி கமிஷனோ தீ வெளியிலிருந்து திட்டமிட்டு வைக்கப்பட்டது என்று கூறியுள்ளது. மோடி நியமித்த கமிஷன் எப்படி இருக்கும் என்பதை மோடியை புரிந்து கொண்டவர்கள் தெரிந்து கொள்வார்கள்.

 

Comments are closed.