11 வழக்குகளில் 10 வழக்கில் குற்றமற்றவர் என்று தீர்ப்பு: 16 வருடம் சிறையில் இருக்கும் குல்சார் அஹமத்

0

ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தை சேர்ந்தவர் என்று கூறப்பட்ட அலிகார் முஸ்லிம் பல்கலைகழத்தின் முன்னாள் ஆய்வு மாணவர் குல்சார் அஹமத் வாணியை சிறையில் அடைத்து வைத்திருப்பது வெட்கக்கேடானது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் அவர் தொடர்பான வழக்கில் முழுமையான சாட்சியங்களை விசாரணை நீதிமன்றம் நவம்பர் 1 ஆம் தேதிக்குள் விசாரிக்காவிட்டால் அவர் பிணையில் விடுவிக்கப்படுவார் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இவ்வழக்கை விசாரித்த இந்திய தலைமை நீதிபதி J.S.கேகர் அடங்கிய பென்ச், குல்சார் அஹமத் வாணி இன்னும் சிறையில் வைக்கப்பட்டிருபது குறித்து தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது. அவர் மீது சுமத்தப்பட்ட மொத்தம் 11 வழக்குகளில் 10 வழக்குகளில் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டும் அவர் கடந்த 16 வருடங்களாக சிறையில் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து நீதிமன்ற பென்ச் குறிப்பிடுகையில், “அவர் மீது சுமத்தப்பட்ட மொத்தம் 11 வழக்குகளில் 10 வழக்குகளில் அவர் குற்றமற்றவர் என்று நிரூபணம் ஆகியுள்ளது. என்ன ஒரு வெட்கக்கேடு. இங்கே பிரச்சனை என்னவென்றால் அவரை நீங்கள் சிறையில் வைத்திருக்க மட்டுமே விரும்புகிறீர்கள், விசாரணையை முடிவுக்கு கொண்டுவர அல்ல. மற்ற அனைத்து வழக்குகளிலும் குற்றமற்றவர் என்று அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.” என்று உத்திர பிரதேச வழக்கறிஞரிடம் அவர் அஹமத் வாணியின் விடுதலையை எதிர்த்த போது கூறியுள்ளது. மேலும் கடந்த வருடம் உச்ச நீதிமட்ன்ரம் இவ்வழக்கை ஆறு மாத காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்று கூறியும் இவ்வழக்கு ஆமை வேகத்தில் நடந்துள்ளது என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா பகுதியை சேர்ந்த அஹமத் வாணி தற்போது லக்னோ மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் டெல்லியில் நடைபெற்ற குண்டு வெடிப்பிற்கு வெடிப்பொருட்களை எடுத்துச் சென்றதாக இவர்மீது குற்றம்சாட்டப்பட்டது. இவர் மீது சுமத்தப்பட்ட 10 வழக்குகளில் இவர் குற்றமற்றவர் என்று நிரூபனமான நிலையில் தற்போது சபர்மதி ரயில் குண்டு வெடிப்பு வழக்கு மட்டும் நிலுவையில் உள்ளது.

இவ்வழக்கின் கோப்புகளை பார்த்த உச்ச நீதிமன்றம், சபர்மதி ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் வாதத்தரப்பு சாட்சியங்களை முழுமையாக பதிவு செய்யவில்லை என்றால் வருகிற நவம்பர் 1 ஆம் தேதி வாணி பிணையில் விடுவிக்கப்படுவார் என்று கூறியுள்ளது. இதனை எதிர்த்து வாதிட்ட மூத்த வழக்கறிஞர் P.N.மிஸ்ரா, குற்றம் சாட்டப்பட்டவர் அவர் சிறையில் இருந்த காலம் முழுவதும் இவ்வழக்கிற்காக இல்லை என்று வாதிட்டார்.

Comments are closed.