12 வருடங்கள் கழித்து குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து விடுதலை

0

ஹைதராபாத்தில் பன்னிரெண்டு வருடங்களுக்கு முன் நடைபெற்ற குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட பத்து நபர்களையும் விசாரணை நீதிமன்றம் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்துள்ளது. அக்டோபர் 12, 2005 அன்று ஹைதராபாத் காவல்துறை பணியகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். நகரில் நடத்தப்பட்ட இந்த முதல் தற்கொலை தாக்குதலில் தாக்குதல் நடத்தியவரும் கொல்லப்பட்டதாகவும் அவர் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்றும் காவல்துறை கூறியது.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் காவல்துறை, முகம்மது அப்துல் சாஹித், அப்துல் கலீம், ஷகீல், செய்யது ஹாஜி, அஜ்மல் அலி கான், அஸ்மத் அலி, மஹ்மூத் பரூத்வாலா, ஷேக் அப்துல் காஜா, நஃபீஸ் பிஸ்வாஸ் மற்றும் பிலால்தீன் ஆகிய பத்து நபர்களை கைது செய்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை காவல்துறை நிரூபிக்க தவறியதாக நீதிமன்றம் தற்போது இவர்களை விடுவித்துள்ளது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளான ஷாஹித் பிலால் பாகிஸ்தானிலும் குலாம் யஸ்தானி டெல்லியிலும் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை கூறியது.
அப்பாவிகளின் வாழ்க்கையை பொய் வழக்குகள் மூலம் சீரழித்து வரும் காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது. தீர்ப்பை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக டி.சி.பி. அவினாஸ் மொகான்தி தெரிவித்துள்ளார்.

Comments are closed.