120வது முறையாக ஃபலஸ்தீன கிராமத்தை அழித்த இஸ்ரேல்

0

இஸ்ரேலின் தெற்கில் நஜவ் பாலைவனத்தில் அமைந்துள்ள அல் அராகிப் கிராமத்தை 120வது முறையாக இஸ்ரேலிய அதிகாரிகள் இடித்துள்ளனர். இஸ்ரேலிய நில ஆணையத்தின் அதிகாரிகள் காவல்துறையினருடன் சென்று அக்டோபர் 25 அன்று இந்த கிராமத்தில் உள்ள வீடுகளை இடித்துள்ளனர். ஒவ்வொரு முறையும் இஸ்ரேல் வீடுகளை இடித்த பிறகு, அங்குள்ள ஃபலஸ்தீனியர்கள் தங்களின் தற்காலிக வீடுகளை அமைத்துக் கொள்வது வழக்கமாக உள்ளது.

அல் அராகிப் உள்ளிட்ட 35 கிராமங்களை (நாடோடி மக்கள் வாழும் கிராமங்கள்)இஸ்ரேல் இதுவரை அங்கீகரிக்காததால் அவர்களின் வீடுகளை இடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளது. நஜவ் பகுதியில் வாழும் 1,60,000 நாடோடி மக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களை இஸ்ரேல் அங்கீகரிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. ஃபலஸ்தீன மக்களின் தேசத்தை அபகரித்துவிட்டு இப்போது அவர்களையே அங்கீகரிக்காத இஸ்ரேலின் அடாவடியை எங்கே சென்று முறையிடுவது? 1948ல் சட்டவிரோதமாக இஸ்ரேல் அமைக்கப்பட்ட போதே இந்த நாடோடிகள் தங்கள் வீடுகளை நஜவ் பகுதியில் அமைத்துள்ளனர்.
ஃபலஸ்தீனியர்களின் வீடுகளை இடிப்பதுடன் மட்டுமல்லாமல் அதற்கான செலவுகளையும் அவர்களிடம் இருந்து இஸ்ரேல் கோருவது வேடிக்கையும் வேதனையும் நிறைந்தது.

இதுபோன்ற நாடோடி மக்களை அவர்களின் இடங்களில் இருந்து அப்புறப்படுத்தி விட்டு அந்த இடங்களில் யூதர்கள் மட்டும் வாழும் குடியிருப்புகளை அமைப்பதுதான் இஸ்ரேலின் திட்டம் என்று மனித உரிமை அமைப்புகள் கூறியுள்ளன.
அல் அராகிப் கிராமத்தின் ஆறு நபர்கள் கடந்த முறை வீடுகள் இடிக்கப்பட்டதற்கு செலவாக 2,62,000 ஷெகல்கள் (ஏறத்தாழ 72000 டாலர்கள்)மற்றும் அரசு வழக்கறிஞரின் செலவுகளுக்காக 1,00,000 ஷெகல்கள் (ஏறத்தாழ 28000 டாலர்கள்) வழங்க வேண்டும் என்று இஸ்ரேல் நீதிமன்றம் ஒன்று கடந்த மாதம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது. 2010ஆம் ஆண்டில் இருந்து மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த இடிப்பு நடவடிக்கைகளுக்காக இஸ்ரேல் இந்த மக்களிடம் இருந்து இதுவரை ஏறத்தாழ ஐந்தரை இலட்சம் டாலர்களை கோரியுள்ளது.

Comments are closed.