19 வருடங்களாக தீவிரவாதி என்று முத்திரை குத்தப்பட்ட ஆலிம் நிரபராதி என்று விடுதலை

0

1998 ஆம் ஆண்டு முர்ஷிதாபாத்தை சேர்ந்த அப்துல்லாஹ்  சலஃபி என்கிற ஆலிமை தீவிரவாத குற்றம் சுமத்தி கைது செய்து சென்றது காவல்துறை. 90 நாட்கள் காவலில் வைக்கப்பட்ட இவர் பின்னர் பிணை வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

இவரது கைதின் போது அனைத்து முக்கிய ஊடகங்களும் இவரை தீவிரவாதி என்று முத்திரை குத்தி பரப்புரை செய்யத் தொடங்கின. ஆனால் அவர் எந்த குற்றமுமற்றவர் என்று நீதிமன்றத்தில் நிரூபணம் ஆனதும் அது குறித்து செய்தி வெளியிடுபவர்கள் பன்மடங்கு குறைந்துவிட்டனர்.

தன் மீதான தீவிரவாத குற்றச்சாட்டு உண்மையல்ல என்று நிரூபணமானது குறித்து கருத்து தெரிவித்த அப்துல்லாஹ், “நீதிமன்றத்தின் இந்த முடிவை நான் வரவேற்கின்றேன். ஆனால் இத்துனை காலம் இந்த குற்றச்சாட்டு தன் பெயருக்கு பல களங்கத்தை ஏற்படுத்திவிட்டது.” என்று கூறியுள்ளார்.

மேலும், “எனக்கு பிணை கிடைத்த பின்பும் என்னுடைய உறவினர்களில் பலர் என்னை விட்டு தூரமாக செல்வதை நான் காண முடிந்தது. ஆனால் பலர் நான் நிரபராதி என்று நம்பினார்கள். கடந்த 19 வருடங்களாக நான் நீதிமன்ற படியேறி ஒவ்வொரு முறையும் நான் நிரபராதி என்று நிரூபித்து வந்தேன். பலருக்கு நான் என் மகள்களுக்கு திருமணம் செய்து கொடுத்து நான் வாழந்த வாழ்க்கை ஒரு சாதாரண வாழ்க்கை போலத்தான் தோன்றியது. ஆனால் காவல்துறை என்னை இவ்வழக்கில் சிக்கவைக்க அவர்களால் இயன்று அளவு முயற்சித்து எனது வாழ்வை நரகமாக்கினர். இன்று இறைவன் எனது பிரார்த்தனைகளுக்கு பதிளித்து விட்டான்.” என்று கூறியுள்ளார்.

“காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த நேரத்தில் எனது கும்பம் கடுமையான துன்பத்திற்கு உள்ளானது. அவர்கள் பல சங்கடமான கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள். மேலும் அவர்கள் பல நேரங்களில் சமூக புறக்கணிப்பிற்கும் உள்ளானார்கள்.” என்பர் அப்துல்லாஹ் கூறியுள்ளார்

மேலும் கூறிய அவர், “பெயரில் ஏற்பட்ட சிறு குழப்பத்தினால் இவ்வளாவு பிரச்சனைகளும் ஏற்பட்டுள்ளன. எனது பெயரும் காவல்துறை தேடிவந்தவருடைய சிமி இயக்கத்துடன் தொடர்புடையவரின் பெயரும் அப்துல்லாஹ் என்பதினால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது. அவர் ருபண்டார் என்ற பெங்காலி பத்திரிகையின் ஆசிரியர். இதன் அடிப்படையில் தான் எனக்கு பிணை வழங்கப்பட்டது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் தன்னுடைய கைதிற்கு பிறகு எல்லை மீறிய வட்டார ஊடகங்கள் குறித்து அப்துல்லாஹ் மிகுந்த மனக்கசப்புடன் காணப்படுகிறார். இது குறித்து அவர் கருத்து கூறுகையில், “நான் கைது செய்யப்பட்ட போது பல பெங்காலி பத்திரிகைகள் என்னை துரோகி என்று அழைத்தனர். இன்று நான் நிரபராதி என்று விடுதலையானதும் அது குறித்த செய்தி எதையும் அவர்கள் வெளியிடுவதை விட்டும் தவிர்த்து வருகின்றனர்.” இருந்தும் இந்த தீர்ப்பு தனக்கு மட்டுமல்ல தனது சமூகத்திற்கு பெரும் நிம்மதியை தந்துள்ளது. இது நீதித்துறையின் மீது சமூகத்திற்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது என்று அவர் கூறியுள்ளார்.

அப்துல்லாஹ்வின் வழக்கறிஞர் சஞ்சாய் குப்தா, “2004 இல் நான் இந்த வழக்கை எடுத்த போது அப்துல்லாஹ் மீது இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டம் 121, 121A, 467, மற்றும் 471 ஆகிய பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. ஆனால் விசாரணை நிறுவனங்கள் அப்துல்லாஹ் மீதான குற்றபத்திரிகையை தாக்கல் செய்யத் தவறிவிட்டனர். இதனையடுத்து சிறப்பு நீதிபதி கும்கும் சின்ஹா அவரை நிரபராதி என்று கூறி விடுவித்துள்ளார்.” என்று கூறியுள்ளார்.

மேலும் இவ்வழக்கு அரசு வழக்கறிஞர்களின் இடமாற்றத்தினால் அதிக காலம் எடுத்துவிட்டது என்றும் சுமார் ஐந்து வருடகாலம் எவ்வித விசாரணையும் இன்றி இந்த வழக்கு சென்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.