1991 பிலிபிட் போலி என்கெளன்டர் வழக்கு: 47 காவல்துறையினருக்கு ஆயுள் தண்டனை

0

1991 ஆம் ஆண்டு உத்திர பிரதேசம் பிலிபிட்டில் 10 சீக்கிய யாத்திரிகளை போலி என்கெளன்டரில் கொலை செய்ததற்கு 47 காவல்துறையினருக்கு ஆயுள் தண்டனை வழங்கி சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஏப்ரல் 1 ஆம் தேதி வெளியான இந்த தீர்ப்பில் அந்த 47 காவல்துறையினரும் குற்றவாளி என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி லல்லு சிங் தீர்பளித்துள்ளார்.

1991 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12 ஆம் தேதி சீக்கிய யாத்திரிகள் நிறைந்த ஒரு பேருந்தை காவல்துறையினர் நிறுத்தி அதிலிருந்து 10 பேரை வலுக்கட்டாயமாக இறக்கினர். குற்றப்பத்திரிகையின்படி அவர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு காட்டுப்பகுதியில் வெவ்வேறு இடங்களில் வைத்து இரக்கமின்றி கொலை செய்யப்பட்டுள்ளனர். மறுநாள் காலிஸ்தானி தீவிரவாதிகளை கொன்றுவிட்டதாக காவல்துறையினர் அறிவித்தனர். மேலும் அந்த பேருந்தில் இருந்தவர்களின் சிலர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன என்றும் அவர்கள் ஆயுதம் ஏந்தி இருந்தனர் என்றும் காவல்துறை அறிவித்திருந்தது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணை செய்தது. அந்த விசாரணையில் இந்த கொலையின் நோக்கம் தீவிரவாதிகளை கொன்றுவிட்டோம் என்று கூறி பதக்கங்கள் பெறுவதே என்று சி.பி.ஐ. தெரிவித்தது.

சி.பி.ஐ.யின் அறிக்கைப்படி சீக்கிய யாத்திரிகள் சென்ற அந்த பேருந்து பிலிபிட்டை நோக்கி சென்றது என்றும் அங்கு செல்லும் வழியில் காச்லபுள் காட் எனும் இடத்தில் போலீசாரால் நிறுத்தப்பட்டது என்றும் அந்த பேருந்தில் இருந்து 11 சீக்கிய ஆண்கள் இறக்கப்பட்டு வேறு வாகனத்தில் ஏற்றப்பட்டனர் என்றும் தெரிவிகின்றது. அந்த பேருந்தில் பயணம் செய்த குழந்தைகள் மற்றும் பெண்கள் பிலிபிட்டில் உள்ள குருத்வாராவிற்கு எடுத்துச் செல்லப்பட்டனர் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

இது நடந்த அன்று மாலை மேலும் கூடுதல் படைகள் இந்த காவலர்களுடன் சேர்ந்து கொண்டது. பின்னர் ஜூலை 12 மற்றும் 13 அன்று இரவு பிடிக்கப்பட்ட சீக்கியர்களை மூன்று குழுவாக பிரித்து பில்சந்தா, நியுரியா, மற்றும் பூரன்பூர் என்ற வெவ்வேறு பகுதியில் வைத்து சுட்டுக் காவல்துறையினர் கொன்றுள்ளனர். கொலை செய்யப்பட்டவர்கள் மீது கிரிமினல் வழக்கு உள்ளது என்றும் அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது என்றும் காவல்துறை பின்னர் தெரிவித்திருந்தது. இன்னும் கொல்லப்பட்டவர்களின் உடலில் பிரேத பரிசோதனை செய்த அன்றே அவர்களின் உடல் எரிக்கப்பட்டுள்ளதாக சி.பி.ஐ விசாரணையில் தெரியவந்துள்ளது.

மொத்தம் 57 காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்ட இந்த வழக்கில் தற்பொழுது 47 பேர் தான் உயிருடன் உள்ளனர். மற்ற 10 பேர் உயிரிழந்து விட்டனர்.

Comments are closed.