20 ஆண்டுகள் பதவியில் இருந்த அல்ஜீரியா அதிபர் ராஜினாமா!

0

20 ஆண்டுகள் பதவியில் இருந்த அல்ஜீரியா அதிபர் ராஜினாமா!

வட ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில் 20 ஆண்டுகள் அதிபர் பதவியில் இருந்த அப்துல் அஜீஸ் பூதல்ஃபிகா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதிபர் பதவியை ராஜினாமா செய்ததை அரசு செய்தி நிறுவனம் ஏப்ரல் 2 அன்று அறிவித்தது. 20 ஆண்டுகள் பதவியில் இருந்து வரும் அப்துல் அஜீஸ் ஏப்ரல் மாதம் நடைபெறுவதாக இருந்த அதிபர் தேர்தலில் தான் ஐந்தாவது முறையாக போட்டியிடுவதாக அறிவித்து இருந்தார். பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ள அதிபரை 2013 க்கு பிறகு மக்கள் பொதுவெளியில் காணவே இல்லை. இந்நிலையில் மீண்டும் அதிபர் பதவிக்குப் போட்டியிடுவதாக அப்துல் அஸீஸ் அறிவித்ததை தொடர்ந்து மக்கள் வீதிகளில் இறங்கி தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.

மக்கள் போராட்டங்களை தொடர்ந்து அதிபர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்த அப்துல் அஜீஸ் அத்துடன் ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த தேர்தலை ரத்து செய்து இவ்வருட இறுதியில் தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்தார். பதவியை தொடர்ந்து தன்வசம் தக்க வைக்கும் அதிபரின் முயற்சியே இந்த அறிவிப்பு என்று தெரிவித்த மக்கள் தொடர்ந்து தங்கள் போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.
இதனிடையே அப்துல் அஜீஸ் அங்கம் வகிக்கும் கட்சியிலும் ராணுவத்திலும் அவருக்கு எதிர்ப்பு வலுத்தது. இதனை தொடர்ந்து தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்துள்ளார்.

அதிபர், பதவியை ராஜினாமா செய்து உள்ளதை மகிழ்ச்சியுடன் வரவேற்கும் மக்கள் மொத்த நிர்வாக கட்டமைப்பையும் சீர் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிபர், பதவியை ராஜினாமா செய்தால் அடுத்த 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற அல்ஜீரியாவின் சட்டத்தின் அடிப்படையில் விரைவில் நாட்டில் தேர்தல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.