20 போலி தீவிரவாத வழக்கு: 14 வருடம் சிறையில் தொலைத்த இளைஞர்

0

19 வருடங்கள் முன்னர் சாதாரண உடுப்பில் வந்த காவல்துறையினரால் கடத்தப்பட்டு சுமார் ஒரு வார காலம் அவர்களால் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார் (அப்போது) 19 வயதான முஹம்மத் ஆமிர் கான்.

தற்போது 37 வயதாகும் இவர் காவல்துறையினரால் உள்ளாக்கப்பட துன்புறுத்தல்களை பற்றி விவரிக்கும் போது நெஞ்சம் பதறுகின்றது. சோப்பு தண்ணீரை குடிக்க வைப்பது, மரப்பலகைகளால் அடித்து துன்புறுத்துவது, உடலில் மின்சாரம் பாய்ச்சி துன்புறுத்தியது என்று காவல்துறையின் காட்டுமிராண்டித்தனகளுக்கு உள்ளக்காப்பட்ட இவர் இவை அனைத்தும் அவர்களுக்கு தேவையான வாக்குமூலங்களை பெறுவதற்காக காவல்துறையினர் செய்த சித்திரவதைகள் என்று விவரிக்கின்றார்.

19 வயதில் கிட்டத்தட்ட 20 தீவிரவாத வழக்குகளில் இவர் குற்றம் சாட்டப்பட்ட நபரானார். இந்த போலி குற்றச்சாட்டுகளால் இவர் தனது 14 வருடங்களை இவர் சிறையில் கழித்தார். தற்போது இவர் மீது சுமத்தப்பட்ட 20 வழக்குகளில் 18 வழக்குகளில் இருந்து இவர் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டுள்ளார். தற்போது சுமார் 12 ஆண்டுகள் கழித்து சிறையில் இருந்து நிரபராதி என்று விடுவிக்கப்பட்ட ரஃபிக் ஷா வைப் போலவே (பார்க்க செய்தி) ஒவ்வொரு முறையும் இவர் தொடர்பான வழக்கில் இவர் இவரை குற்றவாளி என்று நீதிமன்றத்தில் நிரூபிக்க காவல்துறையினருக்கு எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கப்பெறவில்லை. ஆனாலும் மீதம் உள்ள இரண்டு வழக்குகளினால் ஆமிர் கான் மீதான தீவிரவாத பட்டம் இன்னும் நீங்கவில்லை.

இவர் தான் செய்யாத குற்றத்திற்காக தனது ஆயுளில் 14 வருடங்களை சிறையில் கழித்த போதும் இவரது வாழ்வை சரி செய்வதற்காக இந்திய அரசு இதுவரை எதுவும் செய்யவில்லை.இவ்வருடம் ஜனவரி மாதம் தேசிய மனித உரிமை கழகம், டில்லி அரசின் தலைமை செயலாளர் எம்.எம்.குட்டியிடம் கானிற்கு தற்காலிக நிவாரணமாக ரூபாய் 5 லட்சத்தை வழங்குமாறு உத்தரவிட்டிருந்தது. அதில், “மீதம் உள்ள இரண்டு வழக்குளின் மீதான விசாரணை குறித்து கழகம் கவலை கொள்ளவில்லை. எந்த ஒரு காரணமும் இல்லாமல் பாதிக்கப்பட்டவர் தன் வாழ்வில் 14 வருடங்களை சிறையில் கழித்ததே மனித உரிமை மீறலாகும். இது போன்ற சூழ்நிலைகளில் காவல்துறை துணை கண்காணிப்பாளரின் அறிக்கையில் எந்த ஒரு நலனையும் மனித உரிமை கழகம் பார்க்கவில்லை.” என்று கூறியுள்ளது.

இந்நிலையில் மனித உரிமை கழகம் வழங்கக் கூறிய நிதி இன்னும் கானின் கைகளுக்கு வந்து சேரவில்லை. மேலும் அவரின் வாழ்வை சரி செய்ய அரசு எந்திரத்தில் இருந்து எந்த ஒரு உதவியும் அவருக்கு கிடைக்கவில்லை. இவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட உடன் பல மாநில ஆரசின் அதிகாரிகள் அவரை சந்தித்து அவருக்கு உதவுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. 2013 இல் கான் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை பிரகாஷ் காரத் தலைமையிலான குழு ஒன்றுடன் சந்தித்தார். அப்போது உள்துறை அமைச்சகத்திடமும் பல்வேறு மாநில அரசுகளிடமும் இது போன்று காவல்துறையினரால் போலியாக குற்றம்சாட்டப்பட்டவர்களின் மறு வாழ்வு குறித்து பேசுவதாக கூறியிருந்தார்.

2014 ஆம் ஆண்டு அப்போதைய டில்லி முதல்வர் ஷீலா திக்சித்தையும் அவர் சந்தித்து பேசினார். அவரும் கானிடம் ஆவன செய்ததாக உறுதியளித்தார். ஆனால் அந்த உதவிகள் அனைத்தும் இன்னும் கானிடம் வந்து சேரவில்லை.

இது குறித்து அவர் கூறுகையில், “எனக்கு தேவை எல்லாம் எனக்கு கண்ணியத்தை தரவும் என் கல்வியை தொடரவும் உதவும் ஒரு அரசு பணித்தான்.” என்று கூறியுள்ளார். 2012 இல் அவர் விடுதலையானதில் இருந்து பல்வேறு அரசு சாரா பணிகளில் பணியாற்றினார். மேலும் “Framed As a Terrorist: My 14 Year Struggle to Prove My Innocence” என்ற ஒரு புத்தகத்தை மனித உரிமை வழக்கறிஞர் நந்திதா ஹஸ்கர் உடன் இணைத்து எழுதியுள்ளார்.

தற்போது திருமணம் ஆகி மூன்று வயது மகளுடன் வாழும் கான், அனைவரையும் போல் ஒரு வாழ்க்கையை வாழ விரும்பும் அவர் தனக்கு அரசு செய்ய வேண்டியதை பொது சமூகம் செய்கிறது என்று கூறியுள்ளார். ஆனால் இப்போதும் காவல்துறையினர் தன் வீட்டின் கதவுகளை தட்டும் போது தன் மீது சுமத்தப்பட்ட போலி குற்றங்களை விட்டு தப்பித்துவிடமாட்டோமா என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார் ஆமிர் கான்.

Comments are closed.