20 வருடங்களில் இல்லாத அளவு உயர்வடைந்துள்ள வேலைவாய்ப்பின்மை

0

20 வருடங்களில் இல்லாத அளவு உயர்வடைந்துள்ள வேலைவாய்ப்பின்மை

அசிம் பிரேம்ஜி பல்கலைகழகத்தின் “நிலையான வேலைவாய்ப்பு மையம்” வெளியிட்டுள்ள அறிக்கையின்படி நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது என்றும் பல வருடங்களாக 2 இல் இருந்து 3 சதவிகிதம் இருந்த வேலைவாய்ப்பின்மை 2015 இல் 5% ஆக உயர்வடைந்து 2018 ஆம் ஆண்டு இது 16% ஆக உள்ளது என்றும் இந்த நிலை நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இத்தகைய அதிகப்படியான வேலைவாய்ப்பின்மை 20 வருடங்களில் இதுதான் முதல் முறை.

இத்துடன் சுமார் 82% ஆண்களும் 92% பெண்களும் மாதம் ஒன்றிற்கு 10000 ரூபாய்க்கும் குறைவான ஊதியம் பெறுகின்றனர் என்று அந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இன்றைய நிலையில் நாட்டின் GDP ல் 10% உயர்வு ஏற்பட்டால் வேலைவாய்ப்பில் வெறும் 1% மட்டுமே உயர்வு ஏற்படுகின்றது என்றும் அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

மேலும் இந்த அறிக்கையில், முன்னர் இந்தியாவின் பிரச்சனை வேலைவாய்ப்பின்மையைவிட குறைவான ஊதியத்தில் வேலை என்றிருந்தது. ஆனால் தற்போது வேலைவாய்ப்பின்மையே அப்பட்டமாக அதிகரித்துள்ளது என்றும் இது இந்தியாவின் வட மாநிலங்களில் மிகவும் அதிகளவில் உள்ளது என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. தற்போதைய இந்த வேலைவைப்பின்மை இந்தியாவின் புதிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது என்றும் அவ்வறிக்கை தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையை தயாரித்தவர்களில் ஒருவரான அமித் பசோல், “பள்ளி கல்லூரி சேர்க்கைகளும் மாணவர்கள் கல்வி கற்று வெளியேறுதலும் அதிகரித்து வருவது தொழிலாளர் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பட்டப்படிப்புகளுக்கு ஏற்ற வேலை உருவாக்கம் நடைபெறவில்லை. வேலை தேடுபவர்களில் பெரும்பாலனவர்கள் சிறந்த வேலைக்காக காத்துக்கொண்டே இருக்கின்றார்கள்.” என்று கூறியுள்ளார். இத்துடன் மாணவர்களுக்கு வழங்கபப்டும் கல்வியின் தரம் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் தெரிவத்துள்ளார்.

இத்துடன் 67% குடும்பத்தினரின் சராசரி மாத வருமானம் 10000 த்துக்கும் கீழ் உள்ளது என்றும் ஏழாவது ஊதிய கமிஷன் பரிந்துரை செய்த குறைந்தபட்ச ஊதியமான 18000 த்துக்கும் குறைவாகவே இவர்கள் பெற்றுவருகின்றனர் என்று தெரியவந்துள்ளது. ஒழுங்குபடுத்தப்பட்ட தொழில்துறைகளில் 90% இந்த குறைந்தபட்ச ஊதியத்தொகைக்கு குறைவாகவே ஊதியம் வழங்குகின்றனர் என்றும் இது ஒழுங்குபடுத்தப்படாத தொழில்துறைகளில் இன்னும் மோசம் என்று இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்திய வர்த்தக மேன்பாட்டு விமர்சகர்களின் கருத்துப்படி வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றிற்கு இடையே பெரும் இடைவெளி ஏற்பட்டுள்ளது என்று இந்த அறிக்கை தெரிவித்துள்ளது. “1970 முதல் 1980 வரை நாட்டின் GDP 3-4% உயர்வடைந்தால் வேலைவாய்ப்புகளில் 2% வளர்ச்சி எற்பட்டிருக்கும். ஆனால் தற்போது GDP 7% உயர்வடைந்த போதிலும் வேலைவாய்ப்பு வெறும் 1% தான் அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Comments are closed.