2002 குஜராத் கலவரத்திற்காக படேல் இன இளைஞர்களை பயன்படுத்தினார் மோடி: ஹார்டிக் படேல்

0

படேல் இன சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்திய ஹார்டிக் படேல் கடந்த புதன் கிழமை நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் அவர், மோடி 2002 குஜராத் கலவரத்தில் படேல் இன இளைஞர்களை பயன்படுத்தினார் என்று குறிப்பிட்டுள்ளார். ராஜஸ்தானின் உதைபூரில் இருந்து எழுதப்பட்ட இந்த கடிதத்தில் மோடியால், 100க்கும் மேலான படேல் இளைஞர்கள் குற்றவாளிகளாக சிறையில் உள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது கடிதத்தில், “2002 கலவரத்தில் அரசியல் ஆதாயம் பெற்று முதல்வர் ஆகி, பின்னர் பிரதமர் ஆகியுள்ளார் மோடி. ஆனால் கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பல படேல் இன இளைஞர்கள் இன்னும் சிறையில் வாடிக்கொண்டு உள்ளனர். பிரதமராக இருக்கும் மோடி ஜனாதிபதியிடம் இருந்து இவர்களுக்கு கருணை மனு பெற்றுத் தரலாம். ஆனால் அவர் அதனை செய்யமாட்டார். ஏனென்றால் அவர் தன்னை ஒரு மதசார்பற்றவராக காட்டிக்கொள்ள விரும்புகிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குஜராத் கலவர வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட படேல் இனத்தவரின் பட்டியலையும் அவர் அந்த கடிதத்தோடு இணைத்துள்ளார். இந்த கடிதம் குறித்து மாநில பா.ஜ.க தலைவர் ஜித்து வகானி இடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, “இது போன்ற கடிதங்களுக்கு நாங்கள் முக்கியதுதுவம் தருவதில்லை” என்று கூறியுள்ளார்.

லஜ்போர் சிறையில் ஒன்பது மாதம் தேசவிரோத குற்றத்திற்காக ஹார்டிக் படேல் அடைக்கப்பட்டிருந்த நேரத்தில் கிட்டத்தட்ட 25 கடிதத்திற்கும் மேலாக படேல் தொழிலதிபர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் பா.ஜ.க வை ஆதரித்து கடிதம் எழுதியுள்ளார் என்றும் தற்போது மோடிக்கு குஜராத் கலவரம் குறித்து ஹார்டிக் எழுதிய கடிதம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் ஹார்டிக் படேலுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.