2002 குஜராத் கலவரம்: தாமதப்படுத்தப்பட்ட இராணுவம்

0

2002 குஜராத் கலவரம்: தாமதப்படுத்தப்பட்ட இராணுவம்

2002 குஜராத் கலவரத்தை கட்டுப்படுத்த 3000 படை வீரர்களை கொண்ட இராணுவம் அகமதாபாத் நகருக்கு வரவழைக்கப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் ஒரு நாள் முழுவதும் வாகனத்திற்காக மோடி அரசால் காக்க வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் முன்னிலையில் மோடியை சந்தித்த லெப்டினண்ட் ஜெனெரல் ஜமீருத்தின் ஷா, இராணுவ வீரர்கள் நகருக்குள் சென்று கலவரத்தை கட்டுப்படுத்த இராணுவத்திற்கு தேவையான முக்கிய உதவிகளை செய்து தருமாறு வேண்டுகோள் வைத்துள்ளார். ஆனால் மார்ச் 1 ஆம் தேதி அதிகாலை 7 மணிக்கு அகமதாபாத் விமான நிலையத்திற்கு வந்த இராணுவம் ஒரு நாள் முழுவதும் காக்க வைக்கப்பட்டுள்ளது. இந்த காத்திருப்பு நேரத்தில் பல்லாயிரம் உயிர்கள் பலியானது.

இது குறித்து தனது “சர்க்காரி முசல்மான்” (அரசாங்க முஸ்லிம்) என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் ஜமீருத்தின் ஷா. இவரது இந்த புத்தகம் வருகிற அக்டோபர் 13 ஆம் தேதி முன்னாள் குடியரசுத் துணைத்தலைவர் ஹமீத் அன்சாரி அவர்களால் வெளியிடப்பட உள்ளது.

இந்த புத்தகத்தில், 2002 குஜராத் கலவரத்தின் போது மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் பாதுகாப்புத்துறை மூலமாக குஜராத்தில் இராணுவத்தினரை வருவிக்க குஜராத் அரசு கோரிக்கை வைத்தது என்றும் அப்போதைய Chief of Army Staff ஜெனெரல் பத்மநாபன் தன்னை அழைத்து குஜராத் சென்று கலவரத்தை அடக்குமாறு உத்தரவிட்டார் என்றும் தெரிவித்துள்ளார். சாலை மார்க்கமாக குஜராத் செல்ல இரண்டு நாட்களாகும் என்று தான் தெரிவித்த போது விமானம் மூலம் செல்லுமாறும் ஜோத்பூரில் இருந்து இராணுவ வீரர்களை அழைத்துச் செல்லும் பணியை விமானப்படை கவனித்துக்கொள்ளும் என்றும் ஜெனெரல் பத்பாநாபன் கூறியதாகவும் ஷா தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார். “விமான தளத்திற்கு அதிகப்படியான வீரர்களை அழைத்துச் செல்லுங்கள். வேகம் மற்றும் உறுதியான நடவடிக்கை தான் இப்போதைய தேவை” என்று ஜெனெரல் பத்பாநாபன் தெரிவித்ததாக ஷா தான் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அகமதாபாத்தின் விமான தளத்திற்கு இராணுவ வீரர்கள் வந்திறங்கியதும் இராணுவத்திற்கு மாநில அரசு வழங்க இருந்த போக்குவரத்து மற்றும் இன்ன பிற வசதிகள் குறித்து அவர் கேட்கையில் மாநில அரசு இன்னும் அந்த ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறது என்று தனக்கு பதில் கூறப்பட்டதாக ஷா தெரிவித்துள்ளார்.

“குஜராத் கலவரத்தின் முக்கியமான் காலகட்டம் பிப்ரவரி 28 இரவு மற்றும் மார்ச் 1 ஆம் தேதி. இந்த காலகத்தில் தான் அதிகப்படியான கலவரம் நடைபெற்றது. 1 ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் நான் முதல்வரை(மோடி) சந்தித்தேன். இராணுவ வீரர்கள் மார்ச் 1 ஆம் தேதி முழுவதும் விமான தளத்தில் காத்திருந்தனர். பின்னர் மார்ச் இரண்டாம் தேதி தான் வாகன வசதி செய்து தரப்பட்டது. ஆனால் அப்போது அனைத்தும் முடிந்திருந்தது.” என்று ஷா தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த காலகட்டத்தில் இராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டு அவர் கேட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தால் கலவர பாதிப்புகள் குறைவாகி இருக்குமா என்ற கேள்விக்கு, தங்களுக்கு குறித்த நேரத்தில் வாகன வசதிகள் ஏற்பாடு செய்து தரப்பட்டிருக்குமாயின் கலவர பாதிப்புகள் மிக மிக குறைவாகவே இருந்திருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

“காவல்துறையால் ஆறு நாட்களுக்கு செய்ய முடியாததை காவல்துறையை விட ஆறு மடங்கு குறைவான எண்ணிக்கையில் இருந்த இராணுவத்தினர் 48 மணி நேரங்களில் செய்து முடித்தோம். நாங்கள் எங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை மார்ச் 4ஆம் தேதி முடித்தோம். நாங்கள் கேட்ட உதவிகள் எங்களுக்கு காலவிரையம் இன்றி செய்து தரப்பட்டிருந்தால் மார்ச் 2ஆம் தேதியே அது முடிந்திருக்கும்.” என்று ஷா தெரிவித்துள்ளார்.

மேலும் தான் யாரையும் குறிப்பிட்டு குறைகூறவில்லை என்று கூறிய அவர், “போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்ய சில காலம் பிடிக்கும். ஆனால் இது போன்ற நேரங்களில் அதனை விரைவாக செய்திருக்க முடியும்.” என்று தெரிவித்துள்ளார்.

கலவர கும்பல்கள் தெருக்களிலும் வீடுகளுக்கும் தீ வைத்துக் கொண்டிருந்த போது காவல்துறை அதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது என்றும் அதனை தடுக்க எந்தவித நடவடிக்கையையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கூறிய அவர், “பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த பல எம்.எல்.ஏ.க்கள் காவல் நிலையத்தில் இருந்ததை என்னால் காண முடிந்தது. அவர்களுக்கு அங்கு இருக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. நாங்கள் எப்போதெல்லாம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க சொல்கிறோமோ அப்போது சிறுபான்மையினர் பகுதிகளில் அவர்கள் அதனை செய்யவில்லை. அதனால் சிறுபான்மையினர் கலவர கும்பலால் சூழப்பட்டனர். இது முற்றிலும் குறுகிய மனப்பான்மையுடைய ஒருதலைப்பட்சமான செயல்.” என்று ஷா தெரிவித்துள்ளார்.

கலவரத்திற்கும் காவல்துறைக்கும் உள்ள தொடர்பு குறித்து அவரிடம் கேட்கப்பட்ட போது பழைய காயங்களை தான் திரும்ப திறக்க விரும்பவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் தனது இந்த புத்தகத்தின் நோக்கம் 2002 கலவரத்தின் போது நடந்த உண்மைகளை கூறுவதே என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், “அதை மறக்க மூன்று தலைமுறை ஆனது. அந்த காயங்களை நான் திரும்ப திறக்க விரும்பவில்லை. காவல்துறை குறித்த உண்மைகளை நான் தெரிவித்துள்ளேன். மேலும் நான் எழுதிய ஒவ்வொரு வார்த்தையிலும் நான் உறுதியாக உள்ளேன்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

குஜராத் கலவர பாதிப்புகள் குறித்து அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கையில், 790 முஸ்லிம்களும் 254 இந்துக்களும் கொல்லப்பட்டதாகவும், 223 மூன்று பேர் காணவில்லை என்றும் மேலும் 2500 பேர் காயமடைந்தனர் என்றும் கூறப்பட்டது. ஆனால் உண்மையான பாதிப்புக்களை அரசின் அதிகாரப்பூர்வ கணக்கு பிரதிபலிக்கவில்லை என்று ஷா தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

Cheif of Army Staff ஆக தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்ற ஜமீருத்தின் ஷா, இராணுவத்தில் தனது சேவைகளுக்காக பரம் விஷிஷ்த் சேவா பதக்கம், விஷிஷ்த் சேவா பதக்கம், சேனா பதக்கம் ஆகிய பதக்கங்களை பெற்றவர். இவர் தனது புத்தகத்தில் கூறிய கருத்துக்களை ஷாவின் மூத்த அதிகாரிகளும் உறுதி படுத்தியுள்ளனர். குஜராத் கலவரத்தை ஒடுக்க ஜெனரல் பத்மநாபன் ஜமீருதின் ஷாவை தேர்ந்தெடுத்த போது பல புருவங்கள் உயர்த்தப்பட்டது என்றும் ஆனால் ஷாவின் பாராபட்சமில்லாத மற்றும் நடைமுறைக்கு ஏற்ற முடிவுகள் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தது என்றும் ஜெனரல் பத்மநாபன் தெரிவித்துள்ளார்.

 

Comments are closed.