2002 குஜராத் கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேர் வழக்கில் இருந்து விடுவிப்பு

0

குஜராத் காந்திநகரில் உள்ள கலோல் மாவட்ட நீதிமன்றம் ஒன்று 2002 குஜராத் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 26 பேரை போதிய ஆதாரம் இல்லை என்று கூறி வழக்கில் இருந்து விடுவித்துள்ளது. இவர்கள் மீது கலவரம் செய்தல், தீ வைத்தல், முஸ்லிம் சமுதாய மக்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது மற்றும் ஒரு தர்காவை கொள்ளையடித்தது ஆகிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. மேலும் இவர்கள் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை சேதப்படுத்தியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

கடந்த ஜனவரி 31 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட இந்த தீர்ப்பில் இந்த வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும் மேலும் முதல் தகவல் அறிக்கையில் நகல் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், நட்வர் கே படேல், மகேஷ் வி பிரஜாபடி, மனு ஏ பிரஜாபடி, விஜய் பி படேல், வினோத் எஸ் படேல், ரமேஷ் டி மோசி, நிதின் ஆர் படேல், அசோக் ஜி படேல், ஷைலேஷ் ஆர் படேல், ஆகியோர் உட்பட பலர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த குற்றவாளிகளில் பெரும்பான்மையினர் பலியத் கிராமத்தை சேர்ந்தவர்கள், மூன்று பேர் அஹமதாபாத்தை சேர்ந்தவர்கள்.

கூடுதல் செஷன்ஸ் நீதிபதி பி.டி.படேலின் உத்தரவின் படி இவ்வழக்கின் சாட்சியங்களில் ஷகிலாபேன் அஜ்மீரி, அப்பாஸ்மியான் அஜ்மீரி, நஜூமியான் செய்யத் மற்றும் சிலர் நீதிமன்றத்தில் தங்களது சாட்சியங்களை மாற்றி விட்டதாகவும், 500 பேர் கொண்ட கும்பலில் இருந்து குற்றவாளிகளை அடையாளம் காட்ட மறுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர்களை தாங்களாகவே எழுதிக் கொண்டனர் என்றும் அவர்கள் கிராம தலைவர்கள் முன்னிலையில் சமாதான பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுவிட்டதாக கூறியதாகவும் சாட்சியங்கள் தெரிவித்ததாக கூறியுள்ளார்.

மேலும் பல குற்றம்சாட்டப் பட்டவர்களையே சாட்சியங்களாக காவல்துறை கொண்டு வந்ததாக எதிர் தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார். இதனையடுத்து “இந்த வழக்கு விசாரணை முறையாக, நீதி நெறியோடு நடந்தது என்று கூற இயலாது என்று விசாரணை அதிகாரியே தெரிவித்துள்ளார்” என்றும் “அனைத்து சாட்சிகளும் பின்வாங்கிவிட்டன, நடுநிலையான சாட்சிகள் கூட வழக்குக்கு ஆதரவு தரவில்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.

இன்னும், இவ்வழக்கில் தொடர்புடைய பல சாட்சியங்கள் உயிரிழந்துவிட்டதாகவும் சிலர் பலியத் கிராமத்தை விட்டு வெளியேறிவிட்டதாகவும் அனைத்து சாட்சியங்களை வைத்து பார்க்கையில் இங்கு சமரசம் ஏற்பட்டுவிட்டது என்றும் அதனால் தான் போதிய சாட்சியங்களை முன்னிறுத்த முடியவில்லை என்று தெரிவதாக நீதிபதி கூறியுள்ளார்.

Comments are closed.