2002 குஜராத் கலவர வழக்கு: மாயா கோட்னானியை விடுவித்த குஜராத் உயர்நீதிமன்றம்

0

2002 குஜராத் கலவர வழக்கு: மாயா கோட்னானியின் பங்கும் விடுதலையும்

2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான நரோடா பாட்டியா படுகொலையில் 97 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். நரோடா பாட்டியா, நரோடா காம் ஆகிய பகுதியில் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான கூட்டுப்படுகொலைகளை முன்னின்று பாஜக வின் மாயா கோட்னானி நடத்தினார் என்று பாதிக்கப்பட்டவர்களின் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. இதனை விசாரித்த விசாரணை நீதிமன்றம் அவரை குற்றவாளி என்று தீர்பளித்து கோட்னானிக்கு 28 ஆண்டு காலம் சிறை தண்டனையும் வழங்கியது.

1998 இல் பாஜக சார்பில் கோட்னானி முதன்முரையாக போட்டியிட போது தன்னை எதிர்த்த வேட்பாளரை விட 75000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். ஆனால் குஜராத் கலவரத்தை தொடர்ந்து 2002 டிசம்பரில் நடைபெற்ற குஜராத் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளரை விட சுமார் 1.10லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். இவரின் இந்த செல்வாக்கிற்கு குஜராத் கலவரங்களில் அவருடைய பங்கு தான் காரணம் என்று பின்னர் தெரியவந்தது.

இந்த படுகொலைகளில் மாயா கோட்னானி ஈடுபட்டதற்கு நேரடி சாட்சிகளை தவிர வீடியோ ஆதாரங்கள் எதுவும் இல்லாத நிலையில் சுதந்திரமாக சுற்றித்திருந்தார் மாயா கோட்னானி.

2004 ஆம் ஆண்டு மத்தியில் பாஜக அரசு தோல்வியுற்ற பிறகு 2002 குஜராத் கலவரம் மீதான விசாரணையை மத்திய காங்கிரஸ் அரசு தனியே துவக்குவதைவிட்டும் தடுக்க ஏற்கனவே இந்த படுகொலை குறித்து விசாரணை செய்து வரும் நானாவதி கமிஷனின் வரம்புகளை விரிவாக்கம் செய்து உத்தரவிட்டது குஜராத் மோடி அரசு. அதில் இந்த கொலைகள் தொடர்பாக அப்போதைய முதலமைச்சரில் இருந்து எந்த அமைச்சர்களின் பங்கையும் விசாரிக்க இந்த நானாவதி கமிஷனுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. நானாவதி கமிஷனுக்கு வழங்கப்பட்ட விசாரணை வரம்பின் விரிவாக்கத்தின் கீழ் 2002 குஜராத்தில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றிய ராகுல் ஷர்மா விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகும்படி அழைக்கப்பட்டார். இவர் 2002 யின் போது மொபைல் போன்களின் CDR  தகவலை சேகரித்தவர். 2004 அக்டோபர் 30ஆம் தேதி விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகும் போது தான் சேகரித்த மொபைல் பொன் CDR தகவலை விசாரணை கமிஷன் முன்பு சமர்பித்தார். இதில் கிடைத்த தகவல்கள் மாயா கோட்னானி கலவரம் நடைபெற்ற இடங்களில் இருந்தார் என்று நேரடி சாட்சியங்கள் கூறிய வாக்குமூலத்தை உறுதி செய்தது. மேலும் மாயா கோட்னானி மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் ஜெயதீப் படேல் ஆகியோர் தாங்கள் முன்னர் கொடுத்த வாக்குமூலத்திற்கு எதிராகவும் இந்த மொபைல் CDR இருந்தன. இதன் பின்னர் மத்திய அரசு நியமித்த நீதிபதி  UC.பானர்ஜி கமிஷன் முன்பு ஆஜரான ராகுல் ஷர்மா அங்கும் மொபைல்  CDRகள் அடங்கிய CDயினை சமர்பித்தார். இதில் குஜராத் கலவரத்தின் போது கலவரகாரர்களுடன் காவல்துறையும் கூட்டு சேர்ந்து செயல்பட்டதும் இந்த மொபைல் போன் தகவல்களை கலவரக்காரர்களுக்கு எதிரான ஆதாரமாக காவல்துறை திராட்டாமல் இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து  2008ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் சிறப்பு விசாரணை குழு ஒன்றை அமைத்தது. அதன் விசாரணையில் காவல்துறை அதிகாரி ராகுல் ஷர்மா சேகரித்த மொபைல் போன் அழைப்புத் தகவல்களும் விசாரணையின் ஒரு அங்கமாக சேர்க்கப்பட்டன.  

நரோடா பாட்டியா மற்றும் நரோடா காம் ஆகிய இரு பகுதிகளில் நடைபெற்ற படுகொலைகளை முன்னின்று நடத்திய மாய கொட்னானிக்கு எதிராக மொபைல் போன் அழைப்புத் தகவல் ஆதாரங்கள் வெளிப்படையான பின்னர் நடைபெற்ற 2007 குஜராத் தேர்தலில் மாயா கோட்னானி முன்பைவிட அதிகமாக சுமார் 1.80 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

ஆனால் இக்கலவர வழக்கை விசாரித்த  SITயோ மிகவும் மெத்தனப்போக்குடன் செயல்பட்டது. நூற்றுக்கணக்கான மக்களின் கொலைக்கு குற்றம் சாட்டப்பட்டவர்களை அவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் கிடைத்த பட்சத்தில் அவர்களை நேரடியாக கைது செய்யாமல் அவர்கள் மூன்று நாட்களில் தங்கள் முன் ஆஜராகும்படி SIT நோட்டிஸ் அனுப்பியது. மூன்று நாட்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆஜராகாததும் அவர்களுக்கு மேலும் இரண்டு நாள் அவகாசத்தை நீட்டித்தது SIT.  இந்த காலகட்டத்தில் குற்றவாளிகள் தலைமறைவாகிவிட்டனர். வேறு வழியின்றி இவர்கள் தலைமறைவாகிவிட்டனர் என்று SIT கூற மாயா கோட்னானி முன்ஜாமீன் பெற்று வெளிவந்தார்.

இறுதியில் 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27 ஆம் தேதி இவர்களது முன்ஜாமீன் மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் ரத்து செய்ததும் இவர்கள் கைது செய்யப்பட்டனர். அதே நாளில் மோடியின் அமைச்சரவையில் இருந்து கோட்னானி ராஜினாமா செய்தார். கோட்னானியின் முன்ஜாமீன் மனுவை ரத்து செய்கையில் கருத்து தெரிவித்த நீதிபதி DH வகேலா, “மத வெறியர்கள் குறிப்பிட்ட எந்த ஒரு மதத்திற்கும் உரியவர்கள் அல்ல. இவர்கள் அப்பாவி பொதுமக்களை கொலை செய்யும் தீவிரவாதிகளுக்கு எவ்விதத்திலும் மேலானவர்கள் அல்ல.” என்று இவர்களை தீவிரவாதிகளுடன் ஒப்பிட்டு கூறினார். இவர்களின் முன்ஜாமீன் ரத்து செய்யப்பட மொபைல் போன் அழைப்பு தகவல்களும் ஒரு காரணம். இருந்தும் இதனை SIT தனது விசாரணை அறிக்கையில் சேர்க்க தவறியது.

இதற்கு ஆறு மாதங்களுக்குப் பிறகு வெளியான விசாரணை நீதிமன்ற தீர்ப்பிலும் இந்த மொபைல் போன் அழைப்புத் தகவல்கள் சேர்க்கப்படவில்லை. ஆனால் பிற சாட்சியங்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் மாயா கோட்னானி இவ்வழக்கில் குற்றவாளி என்று தீர்பளிக்கப்பட்டார். இந்த கலவரங்களின் சூத்திரதாரி என்று மாயா கோட்னானியை குறிப்பிட்ட நீதிமன்றம் அவருக்கு 28 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இந்த வழக்கு விசாரணையில் மொபைல் போன் அழைப்புத் தகவல்கள் நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படாததற்குக் காரணம், SIT அதனை முறையாக கையாளவில்லை என்பதனால் தான். குறிப்பிட்ட அந்த இணைப்பை மாயா கோட்னானி பயன்படுத்தியிருந்த போதிலும் அந்த இணைப்பு அவரது பெயரில் பெறப்பட்டது அல்ல. அப்படியிருக்க இந்த இணைப்பை மாயா கோட்னானி தான் பயன்படுத்தினார் என்பதற்கான ஆதாரங்களை அவரது விசிடிங் கார்ட், லெட்டர் பேட் முதலியவற்றின் மூலமாகவோ அல்லது வேறு வழியிலோ நிறுவ SIT எந்த ஒரு முயர்ச்சியும் எடுக்கவில்லை. இதனால் குறிப்பிட்ட அந்த இணைப்பு மாயா கோட்னானியுடையது அல்ல என்று அவரது தரப்பு நீதிமன்றத்தில் வாதம் புரிய வசதியாகிப் போனது. இதனை தீர்ப்பில் குறிப்பட்ட நீதிமன்றம், “குறிப்பிட்ட அந்த இணைப்பு மாயா கோட்னானியுடது தான் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிருவப்படவில்லை. இருந்தும் அது தொடர்பாக எந்த ஒரு விசாரணையும் நடத்தப்படாமல் இருப்பது ஆச்சர்யமாக உள்ளது.” என்று தெரிவித்துள்ளது. இருந்தும் உச்ச நீதிமன்றம் இவ்வழக்கின் சாட்சியங்களுக்கு வழங்கிய பாதுகாப்பினால் மாயா கோட்னானி இவ்வழக்கில் குற்றவாளி என்று நிறுவப்பட்டது.

மொபைல் அழைப்பு தகவல் போதுமாக சாட்சியாக கருதப்பட முடியாத நிலையில் வெறும் சாட்சியனகளின் வாக்குமூலங்களை மட்டுமே நம்பி விசாரணை நடைபெற்றது. தற்போது இவ்வழக்கில் குறிப்பிட்ட 11 சாட்சியங்களில் எவரும் மாயா கோட்னானியின் பெயரை குறிப்பிடவில்லை என்றும் இந்த குற்றச்செயலை அவர் தான் செய்தார் என்பதை சந்தேகமற்ற முறையில் நிரூபிக்க முடியவில்லை என்பதாலும் அவரை விடுவித்துள்ளது நீதிமன்றம்.

2012 ஆம் ஆண்டு SIT நீதிமன்றத்தால் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்ட 29 நபர்களில் உமேஷ் பார்வாத், PJ  ராஜ்புத் மற்றும் வழக்கறிஞர் ராஜ்குமார் சவ்மல் ஆகியோ குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. விஷ்வ ஹிந்து பரிஷத்தின் பாபு பஜ்ரங்கி, பிரகாஷ் ரதோட் மற்றும் சுரேஷ் என்ற ரிச்சர்ட் திதாவாலா ஆகியோர் மீது சத்திதிட்டம் தீட்டிய குற்றம் உறுதி செய்யப்படுள்ளது. இருந்தும் பாபு பஜ்ரங்கி குஜராத் கலவரத்தில் தனது ஈடுபாட்டை பதிவு செய்த தெஹெல்காவின் ரகசிய வீடியோவை நீதிபதி HN.தேவானி மற்றும் நீதிபதி AS.சுபீயா தகுதிவாய்ந்த ஆதாரமாக ஏற்றுகொள்ள மறுத்துவிட்டனர். இருத்த போதிலும் ஊடகவியலாளர் ஆஷிஷ் கேதனின் வாக்குமூலம் நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனினும் பாபு பஜ்ரங்கியின் ஆயுள் தண்டனை 21 ஆண்டு சிறை தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. இன்னும் சாட்சிகளிடம் இருந்து வாக்குமூலங்களை பெறுவதற்கு குஜராத் காவல்துறை தாமதப்படுத்தியதையும் நீதிமன்றம் கண்டித்தது. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு நஷ்டஈடு வழங்கக்கோரிய விண்ணப்பத்தை நீதிமன்றம் புறக்கணித்துவிட்டது.

Comments are closed.