2002 நரோடா காம் கலவர வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ஓய்வு

0

2002 ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரத்தில் 11 முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்ட நரோடா காம் வழக்கை விசாரித்து வந்த சிறப்பு SIT நீதிமன்ற நீதிபதி P.B.தேசாய் கடந்த சனிக்கிழமை ஓய்வு பெற்றுள்ளார்.

இவர் இவ்வழக்கு தொடர்பாக 300 சாட்சியங்களின் வாக்குமூலங்களை விசாரித்தவர். கடந்த மூன்று மாதங்களாக சிறப்பு விசாரணை குழு வழக்கறிஞரின் இறுதி வாதங்களை அவர் கேட்டு வந்தார். எதிர்தரப்பு மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கறிஞர்களின் வாதங்கள் விரைவில் தொடங்க இருந்தது.

இவரது ஓய்வு, சாட்சியங்களை மீண்டும் வாக்குமூலங்கள் வழங்க நிர்பந்திக்காது என்ற போதிலும் அதனால் இறுதிகட்ட வாதங்கள் மீண்டும் கேட்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. நரோடா காம் கலவர வழக்கை விசாரித்த நீதிபதிகளில் இவர் மூன்றாமானவர்.

இவ்வழக்கு முதலில் நீதிபதி S.H.வோரா வால் விசாரிக்கப்பட்டு வந்தது. இவர் பின்னர் குஜராத் உயர் நீதிமன்றம் நீதிபதியாக 2009 மே மாதம் 8 ஆம் தேதி பதவி உயர்வு வழங்கப்பட்டார். இவரை தொடர்ந்து இவ்வழக்கை நீதிபதி ஜ்யோட்சனா யாக்னிக் விசாரித்தார். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவரை தொடர்ந்து இவ்வழக்கை நீதிபதி தேசாய் இதுவரை விசாரித்து வந்தார்.

“புதிய நீதிபதி நியமிக்கப்பட்டவுடன் இறுதிகட்ட வாதங்களில் முதலில் இருந்து தொடங்க வேண்டும். சாட்சியங்களின் வாக்குமூலங்கள் மீண்டுமொருமுறை கேட்கவேண்டிய அவசியமில்லை.” என்று SIT வழக்கறிஞர் சுரேஷ் ஷா தெரிவித்துள்ளார்.

மேலும் கூறிய அவர் “இறுதிகட்ட வாதங்களை புதிய நீதிபதி மீண்டும் ஒருமுறை கேட்க வேடும் என்பது இவ்வழக்கை இன்னும் தாமத்தப்படுத்தும். அந்த வாதங்களில் கூறப்பட்ட அனைத்தும் ஆவணப் படுத்தப்பட்டாலும் கூட அவை 1000 பக்கங்களுக்கு மேலாக செல்கின்றன. இது தவிர்த்து புதிய நீதிபதி மேலும் சில ஆவணங்களையும் சரி பார்க்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார். இது மிகப்பெரிய பணி என்று பாதிக்கப்பட்டவரின் வழக்கறிஞரான சம்ஷத் பதான் தெரிவித்துள்ளார்.

“ஒவ்வொரு முறை புதிய நீதிபதி வரும் போதும், அவர் இறுதி வாதங்களை துவங்கும் முன் அனைத்து ஆவணங்களையும் சரி பார்க்க வேண்டும். அது மிகப்பெரிய பணி. பாதிக்கப்பட்டவர்களுக்கு விசாரணை ஏன் தாமதமாகிறது என்பதை விளக்குவது எங்களுக்கு கடினமாகிறது.” என்று பதான் தெரிவித்துள்ளார். மேலும் தற்போதைய இந்த புதிய நீதிபதி உயர் நீதிமன்ற விடுமுறை வருகிற ஜனவரி 8 ஆம் தேதி முடிவுற்ற பின்னரே நடைபெறும்.

SIT விசாரிக்கும் முக்கியமான ஒன்பது வழக்குகளில் நரோடா காம் கலவர வழக்கும் ஒன்று. 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி நடைபெற்ற நரோடா காம் கலவர வழக்கில் முன்னாள் குஜராத் அமைச்சர் மாயா கோட்னானி உட்பட மொத்தமாக 82 நபர்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றார்கள்.

Comments are closed.